search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிசா விமர்சனம்"

    நடிகர்கள் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நடிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘லிசா’ படத்தின் விமர்சனம்.
    சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி அஞ்சலி விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார். 

    இதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.



    அந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் அஞ்சலிக்கு சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். மேலும் வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். இறுதியில் அந்த பேய் என்பதை அஞ்சலி கண்டுபிடித்தாரா? அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். அஞ்சலி ஒல்லியான அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சாம் ஜோன்ஸ் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பயப்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வரலாம்.



    வில்லனாக மார்கரந்த் தேஷ்பாண்டே பயமுறுத்தி இருக்கிறார். பாட்டியாக வருபவரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. யோகி பாபுவும், பிரம்மானந்தமும் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத்தின் 3டி முயற்சிக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம். முதல் பாதியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் கதை இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை தருகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.



    எதிர்பாராத வேளையில் வரும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. ஆனால், முடியப்போகும் நேரத்தில் மேலும் பிளாஷ் பேக் வருவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும் அமைத்து இருந்தால் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இன்னும் ஈர்த்து இருக்கலாம்.

    பிஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தரம். சந்தோஷ் தயாநிதி இசை ஓரளவிற்கு மிரட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘லிசா’ மிரட்டல் குறைவு.
    ×