search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் இயக்கம்"

    ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பள்ளி மாணவன்(பிளஸ்-1 படித்து வருகிறான்) கடந்த ஜனவரி மாதம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று வயதான பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினான். இதில் அந்த பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அந்த பள்ளி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிறார் கோர்ட்டில் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளி மாணவன் என்பதால், அவனுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்கி இருக்கிறார்.

    அதாவது 2 நாட்கள்(ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் வீதம் 16 மணி நேரம்) போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, சாலை விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி, பள்ளி மாணவன் சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சிக்னல் அருகே நேற்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டான். அவனுக்கு கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ, தலைமை காவலர் கோபி ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஒழுங்குபடுத்துவது குறித்தும் எடுத்துக்கூறினர்.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களிடமும், ‘சீட்’ பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடமும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.

    ‘ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக நான் போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறேன்’ என்று சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினான். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) தனது பணியை செய்ய இருக்கிறான்.

    இதுகுறித்து அந்த பள்ளிமாணவனிடம் கேட்டபோது, ‘வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிய குற்றத்துக்காக எனக்கு இந்த தண்டனையை நீதிபதி வழங்கினார். அவரிடம் 18 வயது நிரம்பிய பின், ஓட்டுனர் உரிமம் எடுத்து அதன்பிறகு தான் வாகனம் ஓட்டுவேன் என்று கூறி இருக்கிறேன். என்னை போல் இருக்கும் சிறுவர்கள் யாரும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்காதீர்கள். நான் படித்து முடித்து பெரியவன் ஆகி போலீஸ் ஆவதே என் விருப்பம். இப்போது நான் செய்த போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியை அப்போது போலீஸ் சீருடையில் வந்து செய்வேன்’ என்றான். 
    ×