search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ் அப் அவதூறு பேச்சு"

    புதுக்கோட்டை அருகே அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    பொன்னமராவதி:

    தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ ‘வாட்ஸ்-அப்’ சமூக வலைத்தளத்தில் வெளியானது.

    இந்த ஆடியோ நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

    அப்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், இரவில் வாருங்கள் என்று கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து, போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.

    அப்போது அவர்கள், உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த அந்த சமூக பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ரோடுகள் முழுவதும் கற்களாக கிடந்தன.

    இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 போலீசாருக்கும், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்ற 10 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மேலும், கல்வீச்சில் போலீசாரின் 6 வாகனங்கள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கலைந்து போகச்சொல்லி ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லெட்சுமி, லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கருப்புக்குடிப்பட்டியில் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேரை அழைத்து கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே பொன்னமராவதி நகரை அமைதிப்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

    வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே புதுக்கோட்டையை அடுத்த கவிநாடு கண்மாய் முக்கம் அருகே குடுமியான்மலை மற்றும் இலுப்பூர் செல்லும் சாலையில் எந்திரத்தின் உதவியுடன் மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்ட சிலர் அந்த பகுதியில் நின்ற அரசு பஸ்கள் மீது கற்களை வீசினார்கள்.

    இதில் 3 அரசு பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    ×