search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா"

    புதுவை வில்லியனூர் மாதா ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். #villianurmadhachurch

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை திருத்தலம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்து உலகிலேயே லூர்து மாதாவிற்கென கட்டப்பட்ட 2-வது ஆலயம் வில்லியனூர் மாதா ஆலயமாகும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைந்த வாரத்தில் சனிக்கிழமை அன்று ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்நிறை ஆலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பாதிரியார்கள் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர்.

    இதனைத் தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடைபெற்றது. அதன் பிறகு ஆலய முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நவநாள் மற்றும் சிறிய தேர்பவனி நிகழ்ச்சிகள் 9 நாட்கள் நடைபெற உள்ளன.

    அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி முதல் சனிக்கிழமை கோவை மாதாவின் மணிகள் நடத்தும் ஜெபமாலை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெபமாலைகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

    5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. அன்று இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.

    மாதா சொரூபத்துக்கு வைர கிரிடம் சூட்டப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பவனி வருகிறது. அப்போது ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை தேரில் தூவி வழிபடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    மறுநாள் காலை 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் கொடி இறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல பங்கு தந்தை பிச்சைமுத்து தலைமையில் உதவி பங்குத்தந்தை, விழா குழுவினர், பங்கு பேரவை, இளைஞர் இயக்கம், தன்னார்வ குழுவினர் மற்றும் திருத்தல பக்தர்கள் செய்து வருகின்றனர்.  #villianurmadhachurch

    ×