search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது"

    திருப்பூரில் பெய்த பலத்த மழை காரணமாக போயம் பாளையம் அருகே உள்ள மும்மூர்த்தி நகரில் 300 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக திருப்பூர் தெற்கு தோட்டம் பகுதியில 200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூரில் நேற்று மீண்டும் மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை கொட்டி தீர்த்தது.

    இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மழை காரணமாக திருப்பூர் போயம் பாளையம் அருகே உள்ள மும்மூர்த்தி நகரில் 300 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் மீட்டு அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைத்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    மும்மூர்த்தி நகரில் ஒரு வீட்டிற்குள் 2 குழந்தைகள், 2 பெண்கள் மழை நீரில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப் பகுதி வாலிபர்கள் இணைந்து வீட்டிற்குள் சிக்கிய 2 குழந்தைகளையும், பெண்களையும் மீட்டனர்.

    பின்னர் அவர்கள் அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் அமாவாசை என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பலத்த மழை காரணமாக அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    இதனால் அமாவாசை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியே ஓடி வந்தார். சற்று நேரத்தில் வீட்டின் பக்க வாட்டு சுவரும் இடிந்து விழுந்தது. மேற்கூரை இடிந்ததும் வெளியே வந்து விட்டதால் வீட்டில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    திருப்பூர் அருகே உள்ள சேவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடப்பாளையம், சிகாமணி பாளையம், தூரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    இதனால் காட்டாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்த தண்ணீர் சேவூர் குளத்திற்கு வந்ததால் குளம் நிரம்பி வருகிறது.

    பலத்த மழை காரணமாக சேவர் - கோடப்பாளையத்தை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முடங்கியது. அப்பகுதி கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர்.

    திருப்பூர் எம்.எஸ். நகரை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). பனியன் தொழிலாளி. இவர் நேற்று இரவு பெருமாநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து இருந்தார்.

    அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் குருமூர்த்தி அங்குள்ள மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இடி தாக்கி குருமூர்த்தி சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.

    திருப்பூர் மும்மூர்த்தி நகரில் மழை நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை கலெக்டர் பழனிசாமி இன்று பார்வையிட்டார்.

    அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    திருப்பூர் - 114, அவினாசி-75, பல்லடம் - 8, தாராபுரம் - 70, காங்கயம் - 10, மூலனூர் - 23, உடுமலை - 4.

    ×