search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெரலைட் ஆலை"

    பசுமை சாலை திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல்துறையை கண் மூடித்தனமாக பயன்படுத்தி அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை முதல் சேலம் வரை போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள எட்டு வழி பசுமை சாலைக்காக வேளாண் விளைநிலங்களுக்குள் நடத்தப்படும் நெடுஞ்சாலைத்துறையின் அளவீடுகளை எதிர்த்து ஆங்காங்கே விவசாயிகளும், பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

    சேலத்தில் அப்படி போராடும் விவசாயிகள், தாய்மார்களை எல்லாம் காவல்துறையை வைத்து கைது செய்வதும், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து துன்புறுத்துவதும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் உருவாக்கியிருக்கிறது. இன்று (நேற்று) ஆச்சான்குட்டைப்பட்டி புதூர் பகுதிகளில் இந்த நில அளவீட்டை எதிர்த்த பொதுமக்களையும், விவசாயிகளையும் கைது செய்து காவல்துறை சேலம் மாவட்டத்தில் ஒரு பெரும்பீதியை உருவாக்கி வருகிறது.

    இதுதவிர தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் வரை அமைதியாக ஜனநாயக வழியில் போராடிய பொதுமக்களை வேட்டையாடும் நடவடிக்கையை இன்னும் காவல்துறை அங்கே கைவிடாமல் அரங்கேற்றி வருகிறது. இரவில் வீடு புகுந்து பெண்களை மிரட்டி ஆண்களைக் கைது செய்கிறார்கள். சில கிராமங்களில் ஆண்களே வீடுகளில் தங்கமுடியாமல் அகதிகளைப்போல ஓடி ஒளிந்து கொள்ளும் பரிதாபகரமான நிலையை காவல்துறை உருவாக்கியிருக்கிறது.



    நேற்று (நேற்று முன்தினம்) கூட ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டு மக்கள் அங்கும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில், தனியார் ஆலையை எப்படியும் பாதுகாக்கும் போக்கிலிருந்து இன்னும் அ.தி.மு.க. அரசு மீளாமல், ‘காயங்களை நியாயப்படுத்துவதிலும், நியாயங்களைக் காயப்படுத்துவதிலும்’ தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

    சேலம் பசுமை சாலை திட்டமாக இருந்தாலும், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையாக இருந்தாலும் தனியாரின் நெருப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு காவல்துறையை கண் மூடித்தனமாக பயன்படுத்தி கைது அச்ச உணர்வை பரப்புதல் பீதியை ஏற்படுத்துதல் போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆகவே சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தில் மக்கள் கருத்தை அவசரமின்றி பொறுமையாகவும், முழுமையாகவும் கேட்டறியவேண்டும்.

    சேலம் உள்ளிட்ட பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்பட நினைத்துள்ள மாவட்டங்களிலும், தூத்துக்குடியிலும் காவல்துறை மூலம் மக்களையும், விவசாயிகளையும், தாய்மார்களையும் மிரட்டி, ஜனநாயகத்தை பலியிட்டு ஹிட்லர் பாணி பயங்கரத்திற்கு உயிரூட்ட முயற்சித்திடும் நிலை, பல எச்சரிக்கைகளுக்கு பிறகு இனியும் தொடர்ந்தால், தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்ட மக்களையும், விவசாயிகளையும், தாய்மார்களையும் திரட்டி ஒருங்கிணைத்து அமைதியாக அறவழியில் மாபெரும் வெகுமக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை ரத்து செய்கிறோம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அந்த துணை வேந்தரை நீக்காமல், இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அ.தி.மு.க. அரசு வாய்ப்பளித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்யாமல் தற்போதுள்ள கவர்னர் மவுனம் காப்பது பல்வேறு அய்யப்பாடுகளுக்கு இடமளிப்பதாக பலரும் கருதுகிறார்கள்.

    ஆகவே தற்போதுள்ள கவர்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை உடனே நீக்கம் செய்து, இனி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிப்பதற்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவிடம் மீண்டும் செல்லத்துரை விண்ணப்பம் அளித்தால் அதை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். செல்லத்துரையின் துணை வேந்தர் பதவி காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் முறையாக விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை உயர் கல்வித்துறை செயலாளர் உடனே அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #MKStalin #DMK
    ×