search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம் வசந்த உற்சவம்"

    ஸ்ரீரங்கம் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு நாளில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளினார்.

    இந்த நிலையில் வசந்த உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி, திருமஞ்சனம் கண்டருளினார். மாலையில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து இரவில் வசந்த உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நம்பெருமாள் இரவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாளுக்கு வசந்த உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இதே போல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள ரெங்கநாச்சியார் (தாயார்) சன்னதியில் கோடை திருநாள் மற்றும் வசந்த உற்வசம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்று முதல் ஜூன் 3-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபம் வந்தடைகிறார். புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் இரவு 8.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    உள்கோடை உற்சவத்தையொட்டி ஜூன் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வெளிக்கோடை மண்டபத்தை அடைகிறார். புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின்னர் இரவு 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். இரவு 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி வீணை வாத்தியத்துடன் 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    ஜூன் 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரெங்கநாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது தினமும் ரெங்கநாச்சியார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு வசந்த மண்டபம் சேருகிறார். அலங்காரம் வகையறா கண்டருளிய பின்னர் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாலை 4 மணி முதல் 6 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார். 
    ×