search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1001 Saplings"

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டுப் பெற்றுள்ளார்.
    புவனேஸ்வர்:

    திருமணத்தின்போது மணப்பெண் வீட்டாரிடம் பணம், நகை மற்றும் வாகனம் போன்றவற்றை மணமகன் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்டு பெறுகின்றனர்.

    ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பணம், நகைக்கு பதிலாக 1001 மரக்கன்றுகளை மணமகளின் தந்தையிடம் வரதட்சணையாக கேட்டுப் பெற்றார்.

    அவரது பெயர் சரோஜ் காந்த் பிஸ்வால் (33). ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்துக்கு பெண் தேடினார். இறுதியில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    அப்போது மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை. வாணவேடிக்கை வேண்டாம் என்பன போன்ற நிபந்தனைகள் வைத்தார்.

    இதை சற்றும் எதிர்பாராத மணப்பெண்ணின் தந்தை மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு சம்மதித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது.

    அதில் கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். திருமணத்தின் போது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மணமகளின் தந்தை ஒரு லாரி நிறைய பழ மரக்கன்றுகளை கொண்டு வந்து ஆசிரியர் சரோஜ் காந்த் பிஸ்வாலிடம் வரதட்சணையாக கொடுத்தார்.



    அவற்றை கிராம மக்களிடம் மணமக்கள் பரிசாக வழங்கினர். அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து மரமாக வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஆசிரியர் பிஸ்வால் ‘மரம் நண்பன்’ என்ற அமைப்பில் பிரசாரகராக இருக்கிறார். எனவே தனது திருமணத்தின் மூலம் மரம் வளர்ப்பை பிரபலப்படுத்த திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்.

    இதுகுறித்து கூறும்போது, “நான் வரதட்சணைக்கு எதிரானவன். மரம் வளர்ப்பு மற்றும் அதை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதை எனது திருமணத்தில் பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தேன். அதன்படி கிராம மக்களிடம் மரக்கன்று பரிசளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.

    எனது மனைவியும் ஆசிரிரியையாக இருக்கிறார். நாங்கள் இருவரும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்து ஊக்குவிப்போம். பொதுமக்களிடம் எடுத்துக்கூறி மரம் வளர்ப்பை ஊக்குவிப்போம்” என்றார்.

    ×