search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 nd odi"

    நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. #NZvIND #TeamIndia
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. துவக்கம் முதலே நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். அடித்து ஆட முற்பட்ட டாப் ஆர்டர் வீரர்கள், குறைந்த ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அணியின் ரன் ரேட் சரியத் தொடங்கியது. அதன்பின்னர், குல்தீப் யாதவ் சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 166 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல், பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாக பறக்க விட்டு அரை சதம் கடந்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசிய அவர், புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டான பெர்குசனை (12) சாகல் வீழ்த்த, நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த வெற்றியின் மூலம், 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3வது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.  #NZvIND #TeamIndia
    ×