search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 constituency election"

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்தார். #ParliamentElection
    சென்னை:

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பைத் தொடர்ந்து சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    அந்த 20 தொகுதிகளின் விவரம் வருமாறு:-

    1. திருவாரூர், 2.திருப்பரங்குன்றம், 3. ஆண்டிப்பட்டி, 4. பெரம்பூர், 5. அரவக்குறிச்சி, 6.பாப்பிரெட்டிபட்டி, 7. பெரியகுளம், 8.பூந்தமல்லி, 9.அரூர், 10.பரமக்குடி, 11. மானாமதுரை, 12.சோளிங்கர், 13.திருப்போரூர், 14.ஒட்டப்பிடாரம், 15.தஞ்சாவூர், 16. நிலக்கோட்டை, 17. ஆம்பூர், 18. சாத்தூர், 19. குடியாத்தம், 20. விளாத்திகுளம்.

    அரசியல் சாசன சட்ட விதிகளின்படி இந்த 20 தொகுதிகளுக்கும், காலி இடமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்த 20 தொகுதிகளுக்கும் மார்ச் மாதம் ஏப்ரல் மாதங்களில் 6 மாத கால அவகாசம் முடிகிறது.

    எனவே இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் மூன்றாவது வாரத்துடன் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலம் முடிகிறது.

    எனவே பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து 18 தொகுதிகள் காலியாகி உள்ளன. இது தொடர்பாக ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு ஆவணங்களை நாங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.


    இனி அவர்கள்தான் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்வார்கள். பெரும்பாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. 20 தொகுதிகளில் இடைத்தேர்தலில் கணிசமாக வெற்றி பெறுவதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதே புத்துணர்ச்சியுடன் களம் இறங்கலாம் என்று தி.மு.க. கருதுகிறது. மேலும் 20 தொகுதி இடைத்தேர்தல் மூலம் புதிய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகளை நடத்தலாம் என்றும் தி.மு.க. நினைக்கிறது.

    எனவே 20 தொகுதிகளுக்கும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 11-ந்தேதிதான் அறிவிக்கப்பட உள்ளது.

    அதற்கு பிறகு 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை முடிவுக்கு கொண்டுவர தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் தேவைப்படும். எனவே டிசம்பரில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்த சாத்தியம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை பிப்ரவரியில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்கப்படும். 5 மாநில தேர்தல் டிசம்பரில் முடிந்து விடும்.

    எனவே 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும். தேர்தல் அட்டவணை ஜனவரி மாதம் வெளியிடப்படலாம்.

    இவ்வாறு அந்த உயர் அதிகாரி கூறினார்.

    இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    தகுதி நீக்கம் காரணமாக காலியாக உள்ள எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகும். அந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கும்.

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் யாராவது அப்பீல் செய்தால் 20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்த இயலாது. மேல் முறையீடு இல்லாதபட்சத்தில் 20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்தப்படும்.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராவத் கூறினார்.

    தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது இதுவே முதல் தடவையாகும். #ParliamentElection
    ×