search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "242 temples"

    சிலைகளை பாதுகாக்க 242 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்தது. #TamilnaduGovernment #HighCourt
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து புராதன சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் சில சிலைகளை, சர்வதேச கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தியதாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சிலைக்கடத்தல் குறித்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் ஒரு தனிப்படையை உருவாக்கினார்.



    மேலும், கோவில்களில் உள்ள புராதன சாமி சிலைகளை பாதுகாக்க, பாதுகாப்பு அறைகளை கட்ட வேண்டும் என்பது உள்பட பல உத்தரவுகளை தமிழக அரசுக்கு நீதிபதி பிறப்பித்தார்.

    ஆனால், இந்த உத்தரவுகளை தமிழக அரசு அமல் படுத்தவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், ‘தமிழகத்தில் உள்ள 242 கோவில்களில் வருகிற 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பாதுகாப்பு அறைகள் ஆகம சாஸ்திரங்களுடன் கட்டி முடிக்கப்படும். இதற்காக முன்னோடி திட்டமாக பந்தநல்லூர் பசுபதீஸ் வரர் கோவிலில் பாதுகாப்பு அறை கட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற இடங் களில் பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து நீதிபதி, எந்த கோவில்களில் உடனடியாக பாதுகாப்பு அறைகளை அமைக்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டார். மேலும் கோவில் சிலைகள் மாயமான வழக்கில், தொடர்புடைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற விவரத்தையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். விசாரணை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  #TamilnaduGovernment #HighCourt #tamilnews

    ×