search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 person died"

    பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை புளியமரத்தில் வேன் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பெரம்பலூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சாத்தனார் தெருவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 62). இவர் சமீபத்தில் புதிய ஆம்னி வேன் ஒன்றை வாங்கினார். அந்த வாகனத்திற்கு பூஜை போடுவதற்காக கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தார்.

    இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட மொத்தம் 8 பேர் கடந்த 22-ந்தேதி காலை ஆத்தூரில் இருந்து புதிய வேனில் புறப்பட்டனர். வேனை உறவினரான மனோஜ்குமார் (20) ஓட்டினார்.

    முதலில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தனர். நேற்று பகல் முழுவதும் மதுரையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி வழியாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    தொடர் பயணத்தால் ஏற்பட்ட களைப்பை போக்க திருச்சியை அடுத்த டோல்கேட் அருகே வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்தனர். பின்னர் இன்று அதிகாலை எழுந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    காலை 4 மணியளவில் அவர்களது வேன் பெரம்பலூர் மாவட்டம் எசனை மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியது. இதில் அந்த வேன் சாலையில் சற்று அலைக்கழிக்கப்பட்டது.

    இதையடுத்து வேனை நிறுத்த டிரைவர் மனோஜ்குமார் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்காமல் வேமாக சென்ற வேன் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயரெத்தினம் (73), அவரது மகன் ராஜா (53), முருகன் (48), அவரது சகோதரர் நடராஜன் (68) ஆகிய 4 பேரும் பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய காயத்ரி, சுகுணா, யோகதர்ஷினி, டிரைவர் மனோஜ்குமார் ஆகியோரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதிய வாகனத்திற்கு பூஜை போட சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×