search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "40 women"

    சென்னையில் இருந்து 40 பெண்கள் வருகிற 22-ந் தேதி சபரிமலை பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்துக்கான பாதுகாப்பு கேட்டு கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறார்கள். #Sabarimala #WomenDevotees
    சென்னை:

    பெண்கள் சபரிமலைக்கு செல்லலாமா? செல்ல கூடாதா? என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ‘சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரளா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் ‘கோவில் புனிதம் கெட்டுவிடாதா?’, என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் ஐயப்ப பக்தர்களும் அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களும் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். இதனால் புனித தலமான சபரிமலை தற்போது போராட்ட தலமாக மாறியிருக்கிறது.

    இந்தநிலையில் ‘மனிதி’ எனும் சமூக நல அமைப்பு சார்பில் 40 பெண்கள் அடங்கிய குழு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து ‘மனிதி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வசுமதி வசந்த் (வயது 39), செல்வி (44) ஆகியோர் கூறியதாவது:-

    சபரிமலை என்பது ஒரு திருத்தலம். அது ஒரு பொது இடம். வழிபடும் இடத்தில் ஒரு சாராருக்கு இடமில்லை என்பது தீண்டாமை போன்றது தான். ஐயப்பனை காணவேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கும் உண்டு. ஆனால் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி சபரிமலையில் பெண்களின் வழிபடும் உரிமைக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள். இந்த முட்டுக்கட்டையை சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பால் தகர்ந்து எறிந்திருக்கிறது. இதனை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இதன்மூலம் நீண்ட நாளாக முடங்கியிருந்த எங்களின் வழிபாட்டு உரிமை திரும்ப கிடைத்திருக்கிறது.

    எதையுமே போராடி பெறுவது என்பதே பெண்களின் தலையெழுத்தாகி விட்டது. சபரிமலையிலும் அந்த நிலை மாறவேண்டும். எங்களின் வழிபாட்டு உரிமையை தடை செய்வது மிகப்பெரிய தவறு. சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுப்பது, விரட்டுவது போன்றவற்றை இனியும் பார்த்து கொண்டிருக்க முடியாது.

    அதனால் தான் ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பெண்களை எங்கள் அமைப்பு ஒருங்கிணைத்தது. ‘சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்புகிறோம், எனவே உரிய பாதுகாப்பு செய்து தாருங்கள்’, என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மின்னஞ்சலில் கடிதம் அனுப்பினோம். அவரும் எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தருவதாக பதில் கடிதம் மூலம் உறுதி அளித்திருக்கிறார். எனவே திட்டமிட்டபடி எங்கள் பயணத்தை ஏற்படுத்தி ஐயப்பனை தரிசிக்க செல்வோம்.



    இந்த பயணத்தில் தமிழகம், கேரளா, ஒடிசா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 பேரை ஒருங்கிணைத்திருக்கிறோம். இதில் ஆன்மிக சிந்தனை உடையவர்கள் ஏராளம். பாதி பேர் 5 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிவர இருக்கிறார்கள். திட்டமிட்டபடி சென்னையில் இருந்து 22-ந் தேதி புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கேரளா மாநிலம் கோட்டயத்தில் கூடுகிறோம். பின்னர் அங்கிருந்து பம்பை வழியாக ஐயப்பனை தரிசிக்க செல்கிறோம். எங்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தான்.

    1990-க்கு முன்பாக சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கான சான்றுகள் உள்ளன. எனவே பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டவும், இழந்த உரிமையை பெறவும் தான் இந்த பயணம். மற்றபடி நாத்திகமோ, முற்போக்கு சிந்தனையோ இந்த பயணத்திலோ அல்லது எங்கள் அமைப்பிலோ இல்லை. கடவுளை வழிபட பாலின வேறுபாடு பார்ப்பது நியாயமற்ற செயலாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே சபரிமலைக்கு செல்லும் பெண்கள் ஒரு சிலரால் தடுக்கப்பட்டும், விரட்டப்பட்டும் வரும் நிலையில் சென்னையில் இருந்து 40 பெண்கள் குழுவாக செல்வது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  #Sabarimala  #WomenDevotees


    ×