search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "600 monthly income"

    முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினர் இன்று மாதம் ரூ.600 வருமானத்தில் 3 வேளை சாப்பாட்டுக்கு திண்டாடி வருகின்றனர்.

    சென்னை:

    முதுபெரும் தலைவர் நல்ல கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    நல்லகண்ணு கே.கே.நகரில் இருக்கும் அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி வீட்டை இடிப்பதாகவும் இருவருக்கும் வீடு வழங்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.

    சட்டத்தில் சலுகை காட்ட வேண்டியதில்லை. தகுதி அடிப்படையில் கொடுத்தால் போதும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

    கக்கனை போல் ஒரு அமைச்சரை இனி என்றுமே பார்க்க முடியாது என்று சொல்லலாம். இன்றைய தலைமுறைக்கு அவரது பொதுவாழ்க்கை தெரியப்போவதில்லை.

    1980லேயே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்தவர்களுக்கே அந்த மாமனிதரை தெரிய வில்லையே.

    சாதாரண மக்களுடன் மக்களாக மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன். மதுரை முத்துவை நலம் விசாரிக்க சென்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதை கேள்விப்பட்டு அவர் தங்கி இருந்த வார்டுக்கு ஓடோடி சென்றார்.

    அவரது நிலைமையை பார்த்து தவித்த எம்.ஜி.ஆர். இவர் யார் என்று தெரியுமா? சுதந்திரத்துக்கு போராடிய வரும் தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கக்கன் என்றதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

    உடனே மருத்துவர்களிடம் அவருக்கு தனி அறை ஏற்பாடு செய்து உயர் சிகிச்சை வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஆனால் கக்கன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்னர் அவரை எம்.ஜி.ஆர். வலுக் கட்டாயமாக சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சில நாட்களில் அவர் இறந்து போனார்.

    அரசியலில் அவர் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்.

    நேரம் வரும்போது இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.

    மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டிதான் கக்கனின் பூர்வீகம். கக்கன் என்பது குலதெய்வ பெயர். அன்றைய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண்ணில் தோல்வியை தழுவினார். அதனால் துவண்டு விட வில்லை. அவரை ஈர்த்த தலைவர்கள் காந்தியும், காமராஜரும். அவர்களுடன் இணைந்து பொதுவாழ்வில் இறங்கினார்.

    1952-ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பிறகு காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகி முதல்-அமைச்சர் ஆனதும் அந்த பதவிக்கு கக்கன் நியமிக்கப்பட்டார்.

    அதன் பிறகு காமராஜர் மந்திரி சபையில் வேளாண்மை துறை, ஆதி திராவிடர் நலத்துறை, உள்துறை போன்ற பல துறைகளில் மந்திரியாக இருந்து திறம்பட பணியாற்றியவர்.

    அரசு பதவியில் இருந்து சின்ன சுகத்தை கூட அனு பவிக்காதவர். வேளாண்மை துறை அமைச்சராக இருந்த போது மலேசிய நாட்டு வேளாண்மைத்துறை அமைச்சர் தமிழகத்துக்கு வந்திருக்கிறார்.

    அவர் தனது அன்பு பரிசாக ஒரு தங்க பேனாவை வழங்கி இருக்கிறார். அதை வாங்க மறுத்து இருக்கிறார். ஆனால் மலேசிய மந்திரி வற்புறுத்தியதும் அரசு பதிவேட்டில் பதிவு செய்ய கூறி இருக்கிறார். உடனே அந்த மந்திரி அப்படீன்னா வேண்டாம் என்று திருப்பி வாங்கி கொண்டார்.

    கக்கனின் உடன் பிறந்த தம்பி விசுவநாதன் கக்கன். மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரர். போலீஸ் வேலைக்கு தேர்வாகி இருக்கிறார். வேலைக்கான உத்தரவு வந்ததும் அதை தனது அண்ணனிடம் ஆசையுடன் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கக்கன் போலீஸ் துறை மந்திரி.

    நீ போலீஸ் வேலைக்கு போக வேண்டாம். எனது சிபாரிசில்தான் வேலை கிடைத்ததாக சொல்வார்கள் என்று அவரிடம் கூறி இருக்கிறார்.

    அதோடு விடாமல் அப்போது போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த அருளை அழைத்து என் தம்பிக்கு கையில் 2 விரல்கள் சரியாக வேலை செய்யாது. அவனால் துப்பாக்கியெல்லாம் இயக்க முடியாது. நீங்கள் சரியாக தேர்வு செய்யவில்லை என்று அந்த ஆர்டரையே ரத்து செய்ய வைத்து விட்டார்.

    உண்மையில் விளையாடும் போது விசுவநாதன் கையில் அடிபட்டு லேசாக விரல் வளைந்து இருக்கும். அவ்வளவுதான். இதற்காகவா கக்கன் இப்படி செய்தார் என்று ஐ.ஜி. அருளே ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.

     

    கக்கனின் தம்பி மகள் இமயாகக்கன்.
    நல்லவராக இருக்கலாம். ஆனால் மிகவும் நல்லவராக இருக்கக் கூடாது என்பார்கள். கக்கன் அப்படி வாழ்ந்தவர்.

    அதனால்தான் அவரது எளிமையும், நேர்மையும் காமராஜரையே வியக்க வைத்தது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கக்கனுக்கு போலீஸ் மந்திரி பதவியை வழங்கி மிகப் பெரிய அங்கீகாரத்தை காமராஜர் வழங்கி இருக்கிறார்.

    பதவியில் இருப்பவர்கள் அதை ராஜினாமா செய்து விட்டு கட்சி பணிக்கு திரும்பினார்கள். காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் அந்த பதவிக்கு கக்கனை சிபாரிசு செய்தார். ஆனால் கக்கன் மறுத்து விட்டார். பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்க கூறினார். இதனால் காமராஜரின் ஆசை நிறை வேறவில்லை.

    ஊட்டியில் இருந்து ‘பிளம்ஸ்’ பழம் ஒரு கூடையில் சென்னைக்கு கக்கன் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பழம் வந்தபோது கக்கன் வீட்டில் இல்லை.

    வீட்டில் இருந்த அவரது தம்பி விசுவநாதன் மற்றும் குடும்பத்தினர் பழக் கூடையை அவிழ்த்து பாதி பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டனர். நள்ளிரவில் வீடு திரும்பிய கக்கன். இது ஏது பழம், சாப்பிட்டது யார்? என்ற விவரங்களை கேட்டு விட்டு அரசாங்க பழத்தை நீங்கள் எப்படி சாப்பிடலாம்? என்று கேட்டு அவரிடம் அதற்குரிய விலையை வாங்கி அரசுக்கு செலுத்தி இருக்கிறார்.

    பதவி போனதும் அரசாங்க காரை கோட்டையில் நிறுத்தி விட்டு பஸ் ஏற சென்றுள்ளார். வீட்டில் கொண்டு போய் விடுகிறோம் என்று அதிகாரிகள் வற்புறுத்தியும் கேட்காமல் பஸ்சில் ஏறியே வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு கடைசி காலம் வரை நடந்தும், பஸ்களிலும்தான் சென்றிருக்கிறார்.

    அவருக்கு ஒரு மகள் 5 மகன்கள். அவர்களில் 2 மகன்கள் உயிரோடு இல்லை. இருப்பவர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

    அரசு வீட்டில் குடியிருந்தவர் ஓய்வு பெற்ற டாக்டர் சத்தியநாதன். இவருக்கு அரசு டாக்டர்களுக்கான பென்ஷன் வருகிறது. அதில் தான் குடும்பத்தை ஓட்டி வருகிறார்.

    இன்னொரு மகன் பாக்கியநாதன் (73). இவரது நிலைமை எல்லோரையும் விட பரிதாபமானது. சொந்த வீடு கிடையாது. கக்கனின் தம்பி விசுவநாதன் மகள் இமயா கக்கன் சென்னை காட்டுப்பாக்கத்தில் குடியிருக்கிறார். அவரது வீட்டு மாடியில்தான் பாக்கியநாதன் தங்கி இருக்கிறார். இதுபற்றி இமயா கக்கன் கூறியதாவது:-

    எனது பெரியப்பா (கக்கன்) மகன்களில் பாக்கியநாதன் அண்ணன் சிம்சனில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். பென்‌ஷன் எதுவும் கிடையாது. அண்ணி சரோஜினி தேவி. இருவருமே 70 வயதை கடந்தவர்கள்.

    இவர்களது ஒரு மகன் சி.ஆர்.பி.எப்.பில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இன்னொரு மகனுக்கு வேலை இல்லை.

    மிகவும் கஷ்டப்பட்டதால் அண்ணனையும், அண்ணியையும் எனது வீட்டு மாடியில் தங்க வைத்து பார்த்து கொள்ளும்படி என் அப்பா கேட்டுக் கொண்டார்.

    கடந்த 2002-ம் ஆண்டு முதல் இங்குதான் வசிக்கிறார்கள். எவ்வித வருமானமும் இல்லாமல் அவதிப்பட்ட அவர்களின் நிலைமையை கேள்விப்பட்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.1 லட்சம் வழங்கினார். அதில் இருந்து மாதம் ரூ.635 கிடைக்கிறது. இதுதான் அவர்களது வருமானம்.

    சர்க்கரை நோய் தாக்கம் காரணமாக ஒரு விரல் அகற்றப்பட்டுள்ளது. தேவையான மருந்து மாத்திரைகளை கூட தெரிந்தவர்கள் மூலம்தான் வாங்கி கொடுக்கிறேன். இவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் அரசு உதவிகள் செய்தால் தங்கள் கடைசி காலத்தை சந்தோசமாக வாழ்வார்கள் என்றார்.

    அவர் சொன்ன மற்றொரு தகவல் மனதை ரண மாக்குகிறது. கக்கனின் இளைய மகன் நடராஜ மூர்த்தி. அந்த காலத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்துள்ளார். மெரிட் ஸ்டூடன்டாக இருந்த அவருக்கு திடீரென்று மனநிலை பாதித்தது. அதையும் குணமாக்க முடியவில்லை. சுமார் 35 வருடங்களாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தான் இருக்கிறார்.

    இமயா கக்கன் தனது மகள் திருமணத்துக்காக நடராஜ மூர்த்தியை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காப்பகத்துக்கு சென்று விட்டார்.

    ஒரு கட்சியில் வட்ட செயலாளராக இருந்தாலே கார், வீடு போன்ற சகல வசதியுடன் தலைமுறைக்கும் வாரிசுகள் வாழ்ந்து அனுபவிக்கிறார்கள்.

    ஆனால் நம் கண் முன்னால் கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரராக வாழ்ந்து மறைந்த அமைச்சர் கக்கனின் வாரிசுகளும் இன்றளவும் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ×