search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "60000 People Evacuated"

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #KeralaFloods #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

    இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழை பெய்தது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது என 40-க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானார்கள்.

    எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 8-ந்தேதிக்கு மேல் தொடங்கிய மழை இன்று வரை இடைவிடாமல் பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

    கேரளத்தின் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையும் மழையால் நிரம்பியது. 2403 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2401.90 அடியாக உயர்ந்தது.

    அணையின் நீர்மட்டம் 2398 அடியை எட்டியதும் மதகுகள் திறக்கப்பட வேண்டும். கடந்த 26 ஆண்டுகளாக அணையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை. இந்த ஆண்டு தான் நீர்மட்டம் 2400 அடியையும் தாண்டி விட்டது. இதனால் அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் அணையையொட்டி செறுதோனி நகருக்குள் புகுந்தது. அங்கிருந்த பாலம், கட்டிடங்களையும் வெள்ளம் அடித்துச்சென்றது. இதனால் அணையையொட்டி கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள், அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுபோல கேரளத்தின் 24 அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது. இதன் காரணமாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலுவா சிவன்கோவில் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. பல கிராமங்களும் அழிந்தன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.



    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கேரளம் விரைந்தனர். அவர்கள் கொச்சி, ஆலுவா, கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தனர்.

    கடற்படையினர் படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவத்தினர் சேதமடைந்த சாலைகளையும், உடைந்த பாலங்களையும் தற்காலிகமாக சீரமைத்து பொதுமக்களையும், முதியவர்களையும் மீட்டு வந்தனர்.

    கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. நேற்றும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மழை வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

    இவர்களையும் சேர்த்தால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என கூறப்படுகிறது.

    கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு கேரள அணைகள் நிரம்பியதையே சாட்சியாக கூறுகிறார்கள்.

    பல கிராம மக்களும் இப்படியொரு மழையை இதுவரை பார்த்ததில்லை என்று மிரட்சியுடன் கூறினர். கேரளாவின் ஆதிவாசி கிராமங்களும் மழையால் முழுமையாக சேதமடைந்து விட்டது. இங்கும் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இப்போது மழை பெய்து வரும் மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது.

    வானிலை மைய எச்சரிக்கையையடுத்து கேரளாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRains
    ×