search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "86 Acres land"

    சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்கள் அமைக்க 86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 800 பேருக்கு நோட்டீஸ் வழங்கும் பணியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகரில் பல முக்கிய பகுதிகளுக்கு மின்சார ரெயில் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் அதிக அளவு மாநகர பேருந்துகளை நம்பியே உள்ளனர். பொதுவாக 50 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகம் வசிக்கும் மாநகரங்களில் மொத்த போக்குவரத்தில் பொது போக்குவரத்தின் பங்கு 75 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் இது 50 சதவீதமாக தான் இருக்கிறது.

    இதனை மேம்படுத்துவதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் சென்னையில் கொண்டுவரப்பட்டு தற்போது சுமார் 35 கிலோ மீட்டருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 22 பேருந்துகளில் அல்லது ஆயிரம் இருசக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் ஒரு மெட்ரோ ரெயில் மூலம் குளிர்சாதன வசதியுடன் செல்லலாம். சாலை போக்குவரத்திற்குத் தேவைப்படும் சக்தியில் 5-ல் 1 பங்கு மட்டுமே மெட்ரோ ரெயிலுக்கு தேவைப்படுகிறது. மேலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசும் குறைகிறது.

    இதனை கருத்தில்கொண்டு தற்போது 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்கள் 107.55 கிலோ மீட்டர் தூரத்தில் புதிய வட்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ வட்ட ரெயில் பாதையில் 116 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

    வட சென்னையையும், தென் சென்னையையும் மெட்ரோ ரெயில் பாதை மூலம் இணைக்கும் இந்த திட்டத்தை முடிக்க 10 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தப்பாதை அமைப்பதற்கு உயர்த்தப்பட்ட பாதைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலும், சுரங்கப்பாதையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரையிலும் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

    மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.81 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 3-வது பாதையில் 19.09 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையும், 26.72 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு பஸ் நிலையம் இடையே 17.12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 4-வது பாதை முற்றிலும் சுரங்கப்பாதையில் அமைக்கப்படுகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் இடையே 44.62 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 5-வது பாதையில் 7.49 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையும், 37.13 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. ஆக மொத்தம் 107.55 கி.மீ. தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த 3 பாதைகளும் ரூ.79 ஆயிரத்து 961 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு தேவையான நிதியை வழங்குவது தொடர்பாக ஜப்பானில் உள்ள சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகள், சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளை அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தி சென்றுள்ளனர். இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. முறையான அனுமதி கிடைத்த உடன், பணிக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோர சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    மாதவரம்- சிறுசேரி மற்றும் மாதவரம்- சோழிங்கநல்லூர் பணி முதலில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் மாதவரம் முதல் கொளத்தூர் வரை சுரங்கப்பாதையும், கொளத்தூர் முதல் கோயம்பேடு பஸ் நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாதையும் அமைக்கப்பட உள்ளது.

    மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள 44.62 கி.மீ. தூரம் கொண்ட பணியில் மாதவரம் முதல் டைடல் பார்க் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. தரமணி ரோட்டில் இருந்து சோழிங்கநல்லூர் வரை உயர்த்தப்பட்ட பாதையும் அமைக்கப்பட உள்ளது. தேவையான ரெயில் பெட்டிகளை பிரான்ஸ் நாட்டில் உள்ள அல்ஸ்டாம் நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.


    இந்தப்பணிக்கு தேவையான இடங்கள் பெரும்பாலும் அரசு இடத்தையே எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மீதம் உள்ள 86 ஏக்கர் நிலம் தனியாருக்கான இடம் எடுக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு மாதத்தில் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க 400 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 400 பேருக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஆக 800 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

    2025-ம் ஆண்டுக்குள் பொதுபோக்குவரத்தை அதிகரிப்பதுடன், எளிதில் ஒருங்கிணைப்பு, மெட்ரோ ரெயில் மூலம் சென்னை மாநகரை இணைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.

    மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையே 45.81 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப்பாதையில் வேணுகோபால் நகர், மாதவரம் பால்பண்ணை காலனி (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பஸ் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், கே.எம்.சி., சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங் ரோடு ஜங்சன், நுங்கம்பாக்கம், ஜெமினி, ஆயிரம் விளக்கு (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராதாகிருஷ்ணன் சாலை ஜங்சன், திருமயிலை மெட்ரோ (4-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), மந்தைவெளி, கிரீன்வேஸ் ரோடு மெட்ரோ, அடையாறு ஜங்சன், அடையாறு டிப்போ, இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி லிங் ரோடு, நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் (5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்), சோழிங்கநல்லூர் ஏரி, ஸ்ரீபொன்னியம்மன் கோவில், சத்தியபாமா பல்கலைக்கழகம், செயின்ட் ஜோசப் கல்லூரி, செம்மஞ்சேரி, காந்திநகர், நாவலூர், சிறுசேரி, சிப்காட்-1, சிப்காட்-2 ஆகிய 50 ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.

    கோயம்பேடு முதல் கலங்கரை விளக்கம் வரை 17.12 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தப்பாதையில் சில மாற்றங்கள் செய்யவும் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்தப்பாதை மூலம் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லியும் இணைக்கப்பட உள்ளது. இந்தப்பாதையில் கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் சாலை, கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் ரோடு, அடையாறு கேட் ஜங்சன், நந்தனம் (முதல் வழித்தடத்தில் பரிமாற்றம்), நடேசன் பார்க், பனகல் பார்க், கோடம்பாக்கம் மெட்ரோ, மீனாட்சி கல்லூரி, பவர் ஹவுஸ், வடபழனி, சாலிகிராமம், ஆவிச்சி பள்ளி, இளங்கோ நகர், சாய் நகர், தானிய சந்தை, கோயம்பேடு பஸ் நிலையம் (2 மற்றும் 5-வது வழித்தடத்தில் பரிமாற்றம்) உள்ளிட்ட 20 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.66 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப்பாதை அசிசீ நகர், மஞ்சம்பாக்கம், வேல்முருகன் நகர், எம்.எம்.பி.டி., சாஸ்திரி நகர், ரெட்டேரி, கொளத்தூர், சீனிவாசநகர், வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பஸ் நிலையம், நாதமுனி, அண்ணாநகர் டிப்போ, அண்ணாநகர் கேந்திரிய வித்தியாலயா, காளியம்மன் கோவில் தெரு, கன்னல்அம்மன் நகர், நெற்குன்றம், மதுரவாயல், கங்கா நகர், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சுரேஷ்நகர், ராமாபுரம், சத்தியாநகர், சென்னை வர்த்தக மையம், பட்ரோடு, ஆதம்பாக்கம், எம்.ஆர்.டி.எஸ்., வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம் கூட்டு ரோடு, கீழ்கட்டளை, ஈச்சங்குடி, கோவிலாம்பாக்கம், வெள்ளக்கல், மேடவாக்கம் கூட்டு ரோடு, மேடவாக்கம் ஜங்சன், பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எல்காட் உள்ளிட்ட 46 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.  #MetroTrain #chennaiMetro
    ×