search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "95th birthday"

    95-வது பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புதுவை சட்டசபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. #Karunanidhi #PuducherryAssembly
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

    1955-ம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினராக தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பதவி வகித்து வருகிறார். 1967-ம் ஆண்டு முதல்முறையாக முதல்-அமைச்சராகவும் ஆனார். 5 முறை கலைஞர் தமிழக முதல்-அமைச்சராக இருந்துள்ளார். தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் பல்வேறு வகைகளில் பாடுபட்டுள்ளார். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:- எங்கள் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் இறுதி மூச்சுவரை போராடுபவர். எங்கள் தலைவர் 13-வது முறை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வருகிறார்.

    எழுத்தாற்றல், பேச்சாற்றால், அரசியல், திரைத்துறை என அனைத்து துறையிலும் தனி முத்திரை பதித்தவர். உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவராக திகழ்பவர் கலைஞர். 63 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சி வருபவர். இத்தகைய தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில்கூட பார்க்க முடியாது.

    தனது ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தார். இந்திய நாட்டின் பிரதமர், ஜனாதிபதியை உருவாக்கியவர். தற்போது உடல்நலம் குன்றி இருந்தாலும் தன் பிறந்தநாளில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவருக்கு சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, 5 முறை தமிழக முதல்-அமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நீண்ட பல ஆண்டாக தி.மு.க. தலைவராகவும் பதவி வகித்து வருபவர் கலைஞர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் தலைவர் கலைஞர். அனைத்து துறைகளிலும் பல அளப்பறியா சாதனைகளை செய்தவர். தமிழர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். 3 முறை தொடர்ந்து எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான போதும் தனது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆனவர். நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர். அவருக்கு புதுவை மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Karunanidhi #PuducherryAssembly
    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நலஉதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர். #Karunanidhi #Birthday
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நலஉதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக் கிழமை) தன்னுடைய 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட உள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருக்கள் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி இன்று காலை புத்தாடை அணிந்து, பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரிடம், அவரது மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரபலங்கள் கருணாநிதிக்கு வாழ்த்து கூறுகின்றனர்.

    மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பழ.கருப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்பட பலர் கலந்துகொண்டு கருணாநிதியை வாழ்த்தி பேசுகின்றனர்.

    இதேபோல் சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×