என் மலர்
நீங்கள் தேடியது "Annamalai Kuppusamy"
- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.
கோவை:
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவையில் கடந்த 23-ந்தேதி அதிகாலை நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தமிழக டி.ஜி.பி.யும் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார்.
சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அந்த கார் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான முழு விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரிடம் அந்த கார் கைமாறி உள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை பாரதிய ஜனதா அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. அதன் தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் பேசி வருகிறார்.
காவல்துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் உண்மை தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே அவருக்கு இந்த ஆதாரங்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் பா.ஜ.க.வினர் கூறியதனால் தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார் என கூறி வருகின்றனர்.
கோவையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசியலாக்க நினைக்கும் பாரதிய ஜனதா, முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது அவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்களா அல்லது அதுசம்பந்தமாக ஏதாவது பேசினார்களா?
இந்த சம்பவத்தால் கோவை மக்கள் பாதிக்கப்படவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும் பா.ஜ.க.வினர் முழு அடைப்பு அறிவித்துள்ளனர். இது தேவையற்றது. சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்க சொன்னாலும், மிரட்டினாலோ மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது, மக்கள் யாரும் அச்சப்படவில்லை. தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் உள்ளன. விசாரணை நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சியினரும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆனால் பாஜகவினர் மட்டும்தான் இதனை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அனைத்து கட்சி கூட்டம் தேவையற்றது. கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த சம்பவத்தையும் தற்போது நடந்த நிகழ்வையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர், உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டாம்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் என்பது தெய்வீக மொழி. தமிழ் மொழியில் இறையாண்மை, தனாதனம் போன்றவை கொண்டுள்ளது.
- தமிழ்மொழியை ஊக்குவித்தால் இறைநம்பிக்கை வளர்ந்து விடும்.
கடலூர்:
தி.மு.க. தலைமையில் நடைபெறும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ் மொழி வளர வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் தமிழகத்தில் போராடி வருகிறார்கள். ஆனால், தி.மு.க.வினர் இநத விஷயத்தில் நாடகமாடி வருகிறார்கள். இதனை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலையாகும்.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு தி.மு.க. அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். இதனை பார்க்கும் போது தமிழ்மொழி நாளுக்குநாள் அழிந்து வருகிறது. தரம் தாழ்ந்து வருகிறது.
1960-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேரு இந்தி திணிக்கப்படாது என உத்தரவாதம் அளித்திருந்தார். 1965-ம் ஆண்டு இந்தியை திணிப்பதாக கூறி தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தது. இந்தி திணிப்பை கையில் எடுத்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று போராட்டம் செய்தனர்.
1965-ம் ஆண்டு இந்திக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்துவதை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது பெரியார் கூறுகையில், இந்தி கூடாது என்பதல்ல என்று பேசியுள்ளார். ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக்க வேண்டும் என்று 1969-ம் ஆண்டு பெரியார் பேசியுள்ளார்.
1948-ம் ஆண்டு தமிழை விட ஆங்கிலத்தை கட்டாயமாக்கினால் அவர்களுக்கு ஓட்டுப்போடுவேன் என்று பெரியார் கூறினார். தமிழ் என்பது தெய்வீக மொழி. தமிழ் மொழியில் இறையாண்மை, தனாதனம் போன்றவை கொண்டுள்ளது. தமிழ்மொழியை ஊக்குவித்தால் இறைநம்பிக்கை வளர்ந்து விடும்.
திருவாசகம், தேவாரம் போன்றவற்றை இன்றைய காலத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகள் மத்தியில் படிக்க வைத்தால் தமிழும், இறைநம்பிக்கையும், இறைவழிபாடும் வளர்ந்து வரும் என கூறினர்.
ஆனால், தி.மு.க.வினர் தமிழை இறக்கி விட்டு ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள். தமிழ் மொழிக்காக தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. இந்தி திணிப்பை தொடர்ந்து ஏற்படுத்துவதாக தி.மு.க.வினர் கூறி வருகிறார்கள். தமிழ் மொழியையும், பா.ஜ.க.வையும் பிரிக்க முடியாது.
1965-ல் இந்தி திணிப்பு போராட்டம் தொடங்கியதால் 1967-ல் தி.மு.க.வினர் எளிதாக ஆட்சியை பிடித்தனர். அதேபோன்று இப்போதும் இந்த பிரச்சினையை கையில் தூக்கி உள்ளனர்.
தமிழ் மொழியில் 48 ஆயிரம் குழந்தைகள் தேர்ச்சி அடையவில்லை. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தோற்று விட்டோம் என கூறி இருக்க வேண்டும். இந்தியை யாரும் திணிக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உண்மை நிலையை அறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
- நீண்ட கால சிறைவாசிகளின் மனிதாபிமான விடுதலையை தடுக்கும் நோக்கில் இது நடந்துள்ளதாக ஜனநாயக சக்திகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது
திருச்சி:
தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.ஷரீப் கூறியதாவது:-
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை ஒரே நாளில் மாறுதல் செய்து புதிய பிரிவுகளின்படி வழக்கை பதிவு செய்துள்ளனர். உண்மையில் இச்சம்பவம் பயங்கரவாத சிந்தனையோடு நடத்தப்பட்டிருந்ததால் காவல்துறை கடும் நடவடிக்கை எடுப்பதை யாரும் ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் பல்வேறு முற்போக்கு சக்திகள் ஆயுள் சிறை வாசிகள் விடுதலைகோரி போராட்டங்கள் நடத்திவரும் சூழலில் இந்த சம்பவம் நடந்திருப்பது பல்வேறு வகையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. நீண்ட கால சிறைவாசிகளின் மனிதாபிமான விடுதலையை தடுக்கும் நோக்கில் இது நடந்துள்ளதாக ஜனநாயக சக்திகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறைக்கு தெரியாத பல செய்திகளை தெரிவிக்கிறார். எனவே தமிழக அரசு அண்ணாமலையிடமும் விசாரித்து உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
- பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
சென்னை:
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. சார்பில் கோவையில் வரும் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
இதற்கிடையே, பாரதிய ஜனதாவின் முழு அடைப்பு போராட்டத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முழு அடைப்பு போராட்டம் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை. அதை ஆதரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அக்.31-ல் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
- வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.
- கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.
சென்னை:
கோவை கார் வெடிப்பு குறித்து 18-ம் தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவையில் கார் வெடிப்பு நிகழப்போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக அண்ணாமலை கூறியது அபத்தமானது. அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பொய்யான வதந்திகளைப் பரப்ப வேண்டாம். வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை முன்கூட்டியே எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது.
உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுற்றறிக்கையே. குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரை பற்றி எந்த தகவலும் இல்லை.
வழக்கு விசாரணையில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை, சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போலீசார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தனர்.
- கட்சி தலைமைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்?
- பா.ஜ.க.வினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை முடித்து வரட்டும் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை:
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்புப் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் 80 அடி சாலையில் சாலை சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தபின், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 44 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகள் முடிவடைந்துள்ளது.
26 கோடி ரூபாய் மதிப்பில் 6 இடங்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 140 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 210 கோடி மதிப்பிலான நிதியில் 117 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் விடுபட்ட சாலைகள் புதுப்பிக்கப்படும்.
பல ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் சாலைகள் போடவில்லை. அதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் சாலைப் பணிகளை செய்யக்கூடாது என்றில்லை. எல்லா நாளும் மழை பெய்வதில்லை. நிதி வந்து டெண்டர் முடிந்த பின்னர்தான் பணிகளைச் செய்ய முடியும். மழை பெய்யும்போது சாலை அமைக்கும் பணிகள் நடக்காது.
கட்சி தலைமைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.
கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்லமுடியும்? கட்சித் தலைவர் என்ன செய்யவேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்யவேண்டும் என சொல்லியிருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன்.
ஆளுநர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளரை அழைத்துப் பேசி, அவரே என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருக்கலாம். 4 நாட்களுக்கு பிறகு அரசியல் பேச வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளார். கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது.
மாதக்கணக்கில் டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாட்கள் தொகுதியில் இருக்கிறார்? அவரது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கே வானதி வரவில்லை. பா.ஜ.க.வினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை முடித்து வரட்டும்.
கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது.
வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக மக்கள் கருத்து கேட்டு மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
- இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
- உயர் அதிகாரிகள் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கோவையில் கார் வெடிப்பு நிகழப் போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது அபத்தமானது என்றும், அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையாகும் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார் என்றும் தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் கூறியுள்ளதாவது: தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்.
காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.
காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- எல்லாவற்றையும் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.
- ஆவணங்களை வழங்கிய பிறகு பொது வெளியில் வெளியிடுவோம்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:
கோவை சம்பவத்தில் முதலில் என்னைத்தான் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சொல்லியிருக்கிறார்கள். என்.ஐ.ஏ. என்னிடம் விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் சமர்ப்பிப்பேன். இதை சிலிண்டர் வெடிப்பு என்று சொல்லச் சொல்லி யார் வலியுறுத்தினார்கள்? என எல்லாவற்றையும் சொல்ல தயாராக இருக்கிறேன்.
இதனால் மிகப்பெரிய பூதம் வெடிக்கும். பல உயர் அதிகாரிகளின் பதவிகள் பறி போக வாய்ப்பு இருக்கிறது. அந்த உயர் அதிகாரிகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் நிர்பந்தம் கொடுத்தார்களா? கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் (செந்தில் பாலாஜி) இந்த சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு தான் என்று சொல்ல சொல்லி வற்புறுத்தினாரா?, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டது ஏன்? இதெல்லாமே என்.ஐ.ஏ. விசாரணையில் வர வேண்டும். எங்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கிய பிறகு பொதுவெளியில் வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
- திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பா.ஜனதா பற்றியும் சனாதன தர்மம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே நேரம் தி.மு.க. கூட்டணியில் வலுவான கட்சியாக அங்கம் வகித்திருக்கும் திருமாவளவன் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அளவில் அரசியலில் இடம்பெற புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாகவே தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேல் உள்ளிட்டோரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமாவளவனை பாராட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதே திருமாவளவன் வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு கருத்துக்களை கூட முன் வைத்தது உண்டு. அடிப்படையில் பார்த்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமாவளவன் பாடுபடுகிறார். இதற்கான முறைகளும், அர்த்தங்களும் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் பா.ஜனதாவும் இதையேதான் விரும்புகிறது.
திருமாவளவனுக்கும் எங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது. மிக கடுமையாக விமர்சித்து கொள்கிறோம். ஆனால் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஒரே சிந்தனையுடன் தான் பயணிக்கிறோம்.
பா.ஜனதாவில்கூட பட்டியல் இன தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களும் வட இந்தியாவில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் அவர்களை சொல்லவில்லை. திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கிறது. இந்த நிலையில் திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதும் எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்று கூறி இருப்பதும் மறைமுகமாக திருமாவளவனுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் நிலையில் பா.ஜனதாவில் இந்த புதிய அணுகுமுறை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
- தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்
- ஆட்சி அதிகார ஆணவத் திமிரே அவர்களின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது
திருச்சி:
திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செய்தியாளர்களை மிகத் தரக்குறைவாக விமர்சித்த செயல் கடுமையான கண்டனத்திற்குரியது.
கேள்விகளை எதிர்கொள்ள திராணியில்லாமல் இதுபோன்று இழிவாக நடந்துகொள்வது என்பது பா.ஜ.க.வினரின் வாடிக்கையாகவே உள்ளது.
அண்ணாமலை மட்டுமல்ல, ஹெச்.ராஜா போன்றவர்களும் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
ஆட்சி அதிகார ஆணவத் திமிரே அவர்களின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த போக்கினை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 23-ந்தேதி சம்பவத்துக்கு பிறகு தற்கொலைப் படை தாக்குதல் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
- சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழக காவல்துறை தலைமையகத்தில் இருந்து (29-ந்தேதி) ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. தமிழக காவல் துறை டி.ஜி.பி.யாகிய சைலேந்திர பாபுவின் ஒப்புதலோடு தான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், தமிழக பா.ஜ.க. மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
நான் பல கருத்துகள் கூறி விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது காவல் துறை தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி. ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம்.
விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துகள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல் துறை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.
இம்மாதம் 26-ந்தேதி இந்த வழக்கை தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதை வரவேற்று மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சில ஆலோசனைகளை அரசுக்கு முன்வைத்தோம். தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்பதும் நாங்கள் கொடுத்த ஆலோசனையில் ஒன்று
27-ந்தேதி மத்திய உளவுத்துறை கொடுத்த குறிப்பிட்ட எச்சரிக்கைக்கு பின்னரும் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது ஏன் என்றும் பயங்கர வாத சதிச் செயலில் ஈடுபட்ட ஜமேஷா முபினை கண்காணிக்க கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை காவல் துறை பின்பற்றாதது ஏன் என்பதையும் கேட்டிருந்தோம்.
18-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கிய பொதுவான சுற்றறிக்கை என்றும், இதில் கோவை தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை என்ற வாதத்தை நேற்று பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக காவல் துறை தலைமை முன்வைத்துள்ளது. மேலும், 18-ந்தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21-ந்தேதி கிடைத்ததாகவும், அதற்கு பின் அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இது ஒரு பொய். 21-ந்தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல் துறைக்கு வந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை காவல் துறை மறுக்குமா?.
21-ந்தேதி அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து பகிரப்பட்ட இந்த அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?.
"சீக்ரெட்" என்று குறிப்பிடப்பட்ட மத்திய அரசின் ஆவணம் தி.மு.க. செய்தி தொடர்பாளருக்கு எப்படி போனது. இதை காவல் துறை தலைமை அவருக்கு வழங்கியதா? அல்லது அரசு அதிகாரிகள் வழங்கினார்களா?. இதுபோன்ற நடவடிக்கைகள் தான் நடந்த பயங்கரவாத தாக்குதலை திசை திருப்பும் முயற்சி. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த 23-ந்தேதிக்கு முன்னரே ஜமேஷா முபின் பற்றி தகவல்கள் காவல் துறை தலைமை மற்றும் உளவுத் துறைக்கு காவல் துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபின் 89-வது இடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந்தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டைவிட்டுள்ளது தமிழக காவல் துறையின் உளவுத்துறை. விசாரணையின் போக்கை திசை திருப்புதல் என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறோம்.
பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.
அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார். இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பியது எப்படி?. 23-ந்தேதி நடந்த சம்பவத்துக்கு பிறகு காவல் துறை தனிப்பிரிவு கொடுத்த அறிக்கையின்படி நடைபெற்றது, தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
இதை அறிவிக்காமல் காவல் துறை மற்றும் தமிழக அரசு மவுனமாக இருப்பதன் காரணம் என்ன?. தமிழக ஆளுநர் இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்பது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வரும் தி.மு.க.வினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?. வழக்கின் போக்கை திசைதிருப்பும் முயற்சியாக மேற்கொள்ளப்படும் பொய் பரப்புரைகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?.
நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்ததை தங்களது பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டி இருந்தீர்கள். நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்தபோது எனது நடவடிக்கைகளை நீங்கள் இன்று ஒரு தனிப்படை அமைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டு வந்திருக்கிறேன். மீண்டும் காக்கி அணிய எண்ணம் இல்லை,
ஒரு காலத்தில் காக்கி அணிந்தவன் என்பதை மறந்துவிட வேண்டாம். இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக உங்களிடம் முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர்.
- குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர்.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும், இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இன்று காலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவைக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்றனர். கோவிலில் அண்ணாமலை கோட்டை ஈஸ்வர சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து மக்கள் நலம் பெற வேண்டி நடந்த கூட்டு பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.
தொடர்ந்து கோவிலை சுற்றி வந்து அண்ணாமலை பார்வையிட்டார். அப்போது கோவிலின் தல வரலாறு உள்ளிட்ட தகவல்களை பூசாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் வெளியில் வந்த அவர் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டார். சம்பவம் குறித்து கோவில் பூசாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி பாடினார்.
பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மக்கள் எடுத்து கொடுத்ததாக கூறி பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளையும் அண்ணாமலை காண்பித்தார்.
கோவை 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கு பிறகு பின்னோக்கி சென்றிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக மிக கடினமாக போராடி கோவையில் உள்ள மக்கள் தொழில் அதிபர்கள் இணைந்து கோவையை முன்னெடுத்து சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில் இந்த வெடிகுண்டு விபத்து, தற்கொலைப்படை தாக்குதல் நடந்து இருந்தால் நினைத்து பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருக்கிறது. நிச்சயமாக கோவை 20 வருடம் பின்னோக்கி சென்று இருக்கும். அதை தடுத்து நிறுத்தியது நம்மை காக்கும் கடவுளாக இருக்கும் காவல் துறை நண்பர்கள்.
இந்த விபத்து நடந்த பிறகு மிக துணிவாக காவல்துறையினர் இதனை அப்புறப்படுத்தினர். குற்றவாளிகளை கைது செய்து, அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களை கைப்பற்றினர். தங்களது உயிரை பணயம் வைத்து வேறு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்து கொண்டனர். அவர்களுக்கு நன்றி.
இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். இது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் தீய மனிதர்கள் நோக்கம் இதுபோன்ற வெடி விபத்தை நடத்தி மதத்தை வைத்து கோவையை பிரித்து சூழ்ச்சியாடி, தமிழகத்தை பிரித்து சூழ்ச்சியாடி மக்களிடம் இருக்கும் ஒற்றுமை உணர்வை குறைப்பதற்காக தான் இந்த முயற்சி நடந்துள்ளது.
நாம் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தான் கூறுகிறோம். அவர்களுக்கு எந்தவிதமான மதசாயத்தையும் கூட பூசவில்லை.
சனதான தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. ஒன்றாக செல்ல வேண்டும். கோவை மாநகரில் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் நீங்கள் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடாது. இது தவறான முன் உதாரணம். மதகுருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி யாராவது இளைஞர்கள் தவறான வழித்தடத்தில் சென்றாலும் கூட சொல்வது நமது கடமை.
மக்கள் எடுத்துக்கொடுத்த பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளை பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.
மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாநில அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மட்டுமே நாங்கள் சொல்லி வருகிறோம். தொடர்ந்து கருத்துக்களை சொல்வோம். அதனால் நாங்கள் சொல்வது யாருக்கும் எதிரானது கிடையாது.
தொடர்ந்து பா.ஜனதா கட்சி போலீஸ் உயர் அதிகாரிகளை கேட்கின்ற கேள்வி இங்கே சில தவறுகள் நடந்து இருக்கிறது. திருத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
அடுத்த கட்ட தாக்குதல் நடந்த பிறகு நாங்கள் உங்களை பார்த்து, நீங்கள் எங்களை பார்த்து குற்றம் சொல்லாமல் சரியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்காக தான் கேள்வியை எழுப்பி வருகிறோம்.
கடந்த ஜூன் 19-ந் தேதி மத்திய உளவுத்துறை தமிழகத்தில் இது போன்ற 96 நபர்கள் ஐ.எஸ்.எஸ். மூளை சலவை செய்யப்பட்டவர்கள், கைதானவர்களை கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
இதில் 89-வது நபராக இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முபினின் பெயர் உள்ளது. இதை கண்காணிக்க வேண்டும் என கூறியும் அது நடக்காததால் இந்த தவறு நடந்து இருக்கிறது.
மக்களை எச்சரிக்கைப்படுத்துவது காவல்துறையின் தலையாய பணி. பொதுமக்களுக்கு உண்மையை சொல்வதால் யாரும் எதுவும் தவறாக நினைக்க போவதில்லை. அதனை வெளியில் சொல்ல வேண்டும். அதனை சொன்னால் மக்களுக்குள் பிளவு வந்து விடும் என்பது கிடையாது.
குற்றவாளிகள் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் என்று நாங்கள் கூறவில்லை. எல்லா மதத்திலும் கெட்டவர்கள் உள்ளனர். எல்லா மதத்திலும் நல்லவர்கள் உள்ளனர். ஐ.எஸ். கொள்கை என்பது பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. இஸ்லாமிய குருமார்களே சொல்கின்றனர்.
நல்ல குருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவையை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவை மாவட்ட பா.ஜ.க. அறிவித்திருந்தது. பின்னர் வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க.வினர் தங்களது கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே மாவட்ட பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை வருகையை முன்னிட்டு அந்த பகுதிக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிமாவட்ட போலீசார் என 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வழியாக வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை கேட்டு பெற்று ஆராய்ந்து விசாரித்த பின்னரே அந்த பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுதவிர வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.