search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arikomban elephant"

    • தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
    • வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

    நெல்லை:

    கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய அரிக்கொம்பன் யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

    பின்னர் அந்த யானை குமரிமாவட்டம் மேல் கோதையாறு பகுதியை கடந்து குட்டியாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து அதனை ரேடார் கருவி பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி மாஞ்சோலை பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் நாலுமுக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அதனை வனப்பகுதிக்குள் விரட்ட களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் உத்தரவின்பேரில் வனத்துறையினர் முகாமிட்டனர்.

    இந்நிலையில் மஸ்து பாதிப்பால் ஆக்ரோசமாக இருந்த அந்த யானைக்கு நேற்று காலை பாதிப்பு குறைந்து ஊத்து தொழிற்சாலை, பள்ளிக்கூடம் பகுதியில் சுற்றித்திரிந்தது. அதனை விரட்டினால் குடியிருப்புக்குள் புகுந்துவிடும் என்பதால் வனத்துறையினர் நிதானம் காட்டி வந்தனர்.

    தொடர்ந்து அதன் நடமாட்டத்தை ரேடார் மூலம் அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், நேற்று மதியம் மேல் கோதையாறு பகுதிக்கு அரிக்கொம்பன் திரும்பியது. அங்கு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால், அந்த இதமான சூழ்நிலையை நோக்கி அரிக்கொம்பன் நகர்ந்து கொண்டே இருந்த நிலையில் இரவு முத்துக்குழி வயல் பகுதியை அடைந்தது.

    தற்போது முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கு தேவையான உணவை அரிக்கொம்பன் யானை தேடி அலைவதாகவும், ஆனாலும் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் விடவேண்டும் என்று கேரளாவை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் அரிக்கொம்பன் யானை மீட்பு குழு என்ற பெயரில் அம்பை வனக்கோட்ட அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.
    • புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    கேரள மாநிலத்திலும், தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, நெல்லை மாவட்டம் மணி முத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப் பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில்விட்டனர்.

    அதன்பின்னர் அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ கருவியை பொருத்தி, அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை புகுந்தது.

    நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தொழிலாளர்களின் வீட்டு அருகில் வளர்த்து வந்த வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தின.

    நேற்று அதிகாலையில், குடியிருப்பு பகுதிக்குள் யானைகளின் நடமாட்டத்தை அறிந்த தொழிலாளர்கள் அதி்ர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அரிக் கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இன்று காலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் அறிந்தனர்.

    தற்போது அதனை வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக ப்ரியா கூறியதாவது:-

    மாஞ்சோலை வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அரிக்கொம்பன் யானை தான். வேறு யானை கூட்டம் எதுவும் வரவில்லை. தற்போது அந்த யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து உள்ளது. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும்.

    அதனால் தான் தற்போது அட்டகாசம் செய்து வருகிறது. இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனை சரி செய்ய மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×