search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-Director of Agriculture Department"

    கோவையில் ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கி கைதான வேளாண்மை துறை இணை இயக்குனர் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு சொந்தமாக சூலூரில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்ய அசோக்குமார் திட்டமிட்டார்.

    இதற்காக தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை துறை இணை இயக்குனர் சுகுமாரை சந்தித்து, விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற தடையில்லா சான்று வழங்குமாறு கேட்டார். அதற்கு சுகுமார் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டார். அந்த அளவுக்கு பணம் தர முடியாது என அசோக்குமார் கூறவே, ரூ.2 லட்சமாவது தாருங்கள் என சுகுமார் கேட்டார்.

    இதுகுறித்து அசோக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ராஜேஷ் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் அசோக் குமார் நேற்று இரவு 8 மணி அளவில் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று ரூ.1½ லட்சத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்று கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று சுகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்குவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவியாளர் முருகன் என்பவரும் கைதானார். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


    இதையடுத்து அலுவலகத்தில் சுகுமார் பயன்படுத்திய கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்த விவரங்களை சேகரித்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், பொள்ளாச்சியில் உள்ள முருகனின் வீட்டிலும் இன்று அதிகாலை சோதனை நடத்தினர்.

    இதில் சுகுமார் வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேர் வீடுகளில் இருந்தும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுகுமாரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகும்.

    கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டிலும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் அதுகுறித்த விவரங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பி உள்ளனர்.

    சுகுமார் கடந்த 6 மாதங்களாக இங்கு பணியாற்றி வருகிறார். உதவியாளர் முருகன் கடந்த 1 வருடமாக இதே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் பல பேரிடமும் லஞ்சம் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சுகுமார், முருகன் ஆகியோரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். #Tamilnews
    ×