search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electirc train"

    • பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர்.

    இதற்கிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று (செப்டம்பர் 22ம் தேதி) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை தாம்பரம்-கடற்கரை வரையிலான மின்சார ரெயில் சேவை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையம் வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
    • இதனால் அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஆவடி:

    ஆவடி அருகே உள்ள அன்னனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்தே மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இதன்படி இன்று காலை 6 மணியளவில் அன்னனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கடற்கரை நோக்கிச் செல்லவேண்டும். ஆனால் ரெயில் நிலையத்தில் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் நிலையத்தை தாண்டி இந்து கல்லூரி ரெயில் நிலையத்தை நோக்கிச் சென்றது.

    சிறிது தூரம் சென்ற நிலையில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே இறங்கி நின்றது. 4 பெட்டிகள் தடம் புரண்டு காணப்பட்டன. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயிலை ஓட்டிச் சென்ற டிரைவர் ரவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ரெயில் தடம் புரண்டிருப்பது தெரியவந்தது.

    ரெயில் தடம் புரண்டது பற்றி கேள்விப்பட்டதும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கோட்ட மேலாளர் வினோத், ஊழியர்களுடன் சென்று தடம் புரண்ட மின்சார ரெயிலை தண்டவாளத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயில்கள் தாமதமாக சென்று கொண்டிருக்கின்றன.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதி, கோவை, பெங்களூர் செல்லும் ரெயில்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கும், 9.50 மணிக்கும் என 2 ரெயில்கள் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயில்களில் 7 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய திருப்பதி ரெயில் ரத்து செய்யப்பட்டது. விடுமுறை தினமான இன்று திருப்பதி செல்வதற்காக ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். ரெயில் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    9.50 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய திருப்பதி ரெயில் ஒரு மணி நேரத்தைக் கடந்தும் புறப்படவில்லை. அந்த ரெயில் எப்போது செல்லும் என்கிற அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது ஆவடியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் 9.50 மணிக்கு செல்ல வேண்டிய ரெயிலை தாமதமாக இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதேபோன்று, திருவள்ளூர் பகுதியில் இருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதமாக புறப்பட்டு மாற்று பாதை வழியாக வந்தன. இந்த ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக சென்ட்ரல் வரையில் இயக்கப்படவில்லை.

    ரெயில் நிலையத்துக்கு ஒரு கிலோமீட்டர் முன்பே ரெயில்கள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. இதனால் அங்கிருந்து இறங்கி பயணிகள் தண்டவாளத்தின் வழியே நடந்தே சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்தனர்.

    இதுபோன்று நிறுத்தப்பட்ட ரெயில்கள் சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகே சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தை வந்து சேர முடிந்தது. இதன் காரணமாக இன்று காலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஆவடி வழியாக புறப்பட்டு வந்த ரெயில் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தடம் புரண்ட மின்சார ரெயிலை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் வழக்கம்போல ஆவடி வழியாக அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    ×