search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalikambal Temple"

    • மேற்கு முகமாக காட்சி தரும் அன்னையருக்கு அருளும், சிறப்பும் மிக அதிகம்.
    • பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் எலும்பும் தோலுமான உடலுடன் காட்சி தருகின்றார்.

    இத்தலத்தில் அன்னை காளிகாம்பாள் மேற்கு நோக்கித் திருக்கோவில் கொண்டு விளங்குகின்றாள். பொதுவாக மேற்கு முகமாக எழுந்தருளிக் காட்சி தரும் அன்னையருக்கு அருளும், சிறப்பும் மிக அதிகம். அன்னை காளிகாம்பாளின் அருட் சிறப்பு சொல்லில் அடங்காதது.

    இத்திருக்கோவிலில் காமடேசுவரர், அருணாசலேசுவரர், நடராசர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. நடராசப் பெருமாள் திருச்சந்நிதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் எலும்பும் தோலுமான உடலுடன் காட்சி தருகின்றார்.

    இம்முனிவர் இவ்வாறு மூன்று கால்களுடன் காட்சியளித்தல் இத்தலத்திலும், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவிலிலுமாகும். இம்முனிவர் இவ்வாறு நடராசர் சந்நிதியில் மெலிந்து நின்றதற்குக் காரணம், அன்னை சக்தியை அவமதித்தார். அதனால் தமது சக்தியை இழந்து மெலிவடைந்தார்.

    பெருந்துறவியான பிருங்கி முனிவர், துறவிகட்கெல்லாம் திருவருள் புரியும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். சக்தியின் அருள் தமக்குத் தேவையில்லை என்று கருதி, எப்போதும் சக்தி சிவனுடன் இல்லாத தருணம் நோக்கி, சிவன் தனித்திருக்கும்போது வழிபட்டு வந்தார். எனினும், ஒரு சமயம், சிவனும் சக்தியும் நெருக்கமாக இருக்கக் கண்டு, முனிவர் வண்டு உருவெடுத்து இருவருக்கும் இடையே துளைத்துக் கொண்டு சென்று வலம் வந்து சிவனை மட்டும் வழிபட்டார்.

    அதைக் கண்ட அன்னை சக்தியானவள், இந்த வண்டு இவ்வாறு செய்கின்றதே என்று சிவத்திடம் வினவ, சிவன் அன்னையிடம் உண்மையைக் கூறினார். உண்மை அறிந்த உமாதேவியர், இனி நான் உங்களில் ஒரு பாகமாகக் கலந்திட வேண்டும் என்று தமது ஆவலைக் கூற, அதற்கு அண்ணல், அங்ஙனமாயின் நீ விரதம் இருக்க வேண்டும் என்று கூறியருளினார்.

    அவ்வாறே அன்னை சக்தியும் விரதம் இருந்து-தவம் இருந்து-இறைவனோடு இரண்டறக் கலந்து விளங்க, இறைவன் அப்போது அர்த்தநாரீசுவரராக காட்சி தந்தார். அர்த்தநாரீசுவரர் தலமே திருச்செங்கோடு அன்று அன்னை சக்தி கேதாரநாத்தில் தவம் இருந்தாள். அதனையட்டியே, இன்றும் பெண்கள் தங்கள் கணவன்மாரைப் பிரியாதிருக்க வேண்டி கேதார கவுரி விரதம் இருந்து வருவதுண்டு.

    இவ்வாறு அன்னை சக்தியை முனிவர் அவமதித்ததன் காரணமாக, சக்தியிழந்து மெலிந்த மேனியோடு நடராசர் திருச்சந்நிதியில் விளங்குகின்றார். எனவே, அன்னை சக்தியாகிய காளிகாம்பாளை அவமதிப்போருக்கு, அவள் அருள் கிட்டாதது மட்டுமின்றி, அல்லல்களும் தீரும் என்பது உண்மை.

    • ஸ்ரீகாளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.
    • ‘‘முக்தி தரும் நகரங்களுள் முக்கியமாம் காஞ்சி நகர்’’

    ''தொண்டை வள நாடு சான்றோருடைத்து'' என ஒளவைப் பிராட்டியாரால் சிறப்பிக்கப்பட்ட தொண்டை மண்டலத்தில், காஞ்சி மாநகரத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீகாமாட்சி தனது இச்சா மந்திரத்தால் பன்னிரண்டு திருத்தலங்களில் காட்சி தந்து கருணைபுரிகின்றாள். அவ்வண்ணம் அமர்ந்த திருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது ஸ்ரீகாளிகாம்பாள் அமர்ந்துள்ள பரதபுரி என்றழைக்கப்படும் இத்தலமாகும்.

    ''முக்தி தரும் நகரங்களுள் முக்கியமாம் காஞ்சி நகர்'' என்ற திருத்தலத்துக்கு ஈசான்யப் பாரிசமாகவும், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற திருமயிலைக்கு வடக்குப் பாரிசமாகவும், மகத்துவமிகுந்த திருவொற்றியூருக்குத் தென் பாரிசமாகவும், பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டிற்கு நேர் கிழக்காகவும் அமைந்துள்ளது இத்திவ்யத் தலமாகும்.

    இத்தலத்தைப் பற்றி, மச்சபுராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம் மற்றும் பவிஷ்ய புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகாளிகாம்பாளை ரிஷிகளும், தேவர்களும் வணங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன.

    வியாசர், பராசர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் மற்றும் வருணன் முதலான முனிசிரேஷ்டர்களும் தேவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், செல்வத்துக்கதிபதியான குபேரன் இத்தலம் வந்து ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட பின்னர்தான் குன்றாத பெருஞ் செல்வங்களைப் பெற்றான் என்ற புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.

    ராஜ கோபுரம்

    22.1.1976 அன்று தவத்திரு சுவாமி ராமதாசர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் பிரம்மஸ்ரீ டி.எஸ்.ராஜப்பா தலைமையில் ராஜகோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 21.1.1983 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அவ்வாறே ராஜகோபுரத்தின் வாயிலுக்கு உட்புறம் இருந்த திறந்த வெளியில் ஸ்ரீகாயத்ரி மஹா மண்டபத்தில் 20.11.1982 அன்று மண்டபத் திருப்பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்பட்டது.

    மேற்கு நோக்கிய சன்னதி

    அன்னையின் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது ஏன்? எதற்கு? என்ற வினா நம்முள் எழுகின்றது. ஆம். உண்மையே. கிழக்கு (பூர்வாபி முகம்) நோக்கிய சன்னதிக்கு எத்துணை சிறப்புகள் உண்டோ அத்துணை சிறப்புகளைக் காட்டிலும் கூடுதலாக மேற்கு நோக்கிய (பச்சிமாபி முகம்) சன்னதிக்கு உண்டு. பாரத நாட்டில் மேற்கு நோக்கிய சன்னதிகள்

    1. காசி - விஸ்வேஸ்வரர்

    2. திருக்காளத்தி - காளத்தி நாதர்

    3. சென்னை - ஸ்ரீகாளிகாம்பாள்

    4. திருமயிலை - கபாலீஸ்வரர்

    5. திருவான்மியூர் - வான்மீகிநாதர் (மருந்தீஸ்வரர்)

    6. திருக்காஞ்சி - வரதராஜப்பெருமாள்

    7. திருவாணைக்கா - ஜலகண்டேஸ்வரர்

    8. திருச்சி - தாயுமானவர்

    9. பழனி - முருகப்பெருமான்

    இதுபோன்ற ஆதாரங்களை ஆய்ந்து பார்க்கின்ற போது இவைகள் அனைத்தும் விஸ்வகர்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே, மேற்கு பார்த்த சன்னிதானங்கள் அனைத்தும் விஸ்வகர்ம செழுமரபினர்கட்கு பாத்தியப் பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்டதும் போற்றி வழி பாடாற்றப்படுவதும் ஆகும் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிவு.

    • கும்ப கலசம் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • தேரின் கலசம் தங்க முலாம் பூசியது.

    ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின்போது 7-ம் நாளன்று காலையில் ரதோற்சவம் பூந்தேராகவும் 9-ம் நாள் இரவில் கிண்ணித் தேர் என்னும் அற்புத ஸ்ரீ சக்ர ரதம், வெண்கலக் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு காளிகாம்பாள் பவனி வருவது கண்கொள்ளக் காட்சியாக இருந்து வந்தது என்று ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர் எச்.டி.லவ் என்பவர் தனது சென்னை நகர வரலாறு என்னும் நூலில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    15-ம் நூற்றாண்டுகளுக்கு மன்பெ ஸ்தாபிதமான இத்தொன்மை வாய்ந்த விஸ்வகர்ம சமூகத்தினரின் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் பிரம்ம உற்சவம் நடைபெறும்போது பூந்தேரிலும் இரவில் கிண்ணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சக்ர ரதத்தில் பவனி செல்லும் ரதமானது காலத்தால் பழுதுபட்டு 1940-க்கு பிறகு தடைப்பட்டு விட்டது. சான்றோர்களின் முயற்சியால் புதிய ரதம் ஒன்று செய்யப்பட்டு ஸ்ரீ பிரபவ வருடம் வைகாசி மாதம் முதல் ஸ்ரீ அம்பாள் பவனி வருகிறாள்.

    1. தொன்மையாக இருந்த ரதத்தின் உயரம் 33 அடி, அகலம் 12 அடி. புதிதாக செய்யப்பட்ட தேரின் உயரம் 22 அடி, அகலம் 10 அடி, 4 சக்கரங்கள் கொண்டது.

    2. கும்ப கலசம் மற்றும் மூன்று நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேரின் கலசம் தங்க முலாம் பூசியது. பழைய தேரினுடையது. குடை வெள்ளியினால் ஆனது.

    3. குண்டலி ஸ்தானம், நாடி, இருதய ஸ்தானம், கண்ட ஸ்தானம், கும்ப பீடம், ஸ்ரீ அம்பாள் பீடம், மூன்றடுக்கு விமான நிலைகள் யாவும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. 201-766 கன அடி தேக்கு உபயோகப்படுத்தப்பட்டள்ளது. அதன் கிரயம் 1,04,794.85 ஆகின்றது.

    4. தேர் சக்கரங்களுக்கும் இருசு அச்சு மரங்களுக்கும் வாகை மரம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கிரயம் ரூ.13,745.55.

    5. தேரின் இரும்பு இருசுகளின் நீளம் 10 அடி, கனம் 5 அங்கும்.

    6. தேர் மையங்கள் 40 செம்மரத்தாலும் மேல் நிலைகள் தேக்கு மரச்சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 150 கன அடி மரம் அடங்கியுள்ளது.

    7. இருசுகள், இரும்பு தளவாடங்கள், புஷ்கள், இரும்பு பட்டைகள், போல்ட் ஆணிகள் முதலானவைக்கு விலை மதிப்பு ரூ.27,075.80.

    8. தேரில் ஸ்ரீ அம்பாள் மற்ற தெய்வங்களின் அவதார திரு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூலி வகைக்கு ரூ. 70 ஆயிரம்.

    9. வெண்கல கிண்ணிகள் பழைய தேரினுடையது. நல்ல நிலையிலுள்ளது. 800 கிண்ணிகள்தான் புதிய தேரில் பொருத்தப்பட்டுள்ளது.

    இத்தேரினை அமைக்க 1985-ல் அறநிலையத் துறை மதிப்பீட்டின் அங்கீகாரம் ரூ.1 லட்சத்து70 ஆயிரம். ஆனால் தற்போதுள்ள அகவிலையினால் உபகரணங்கள் இரும்பு, மரம் உயர்வினாலும் இதன் மதிப்பீடு ரு.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்தேரினை காலம் சென்ற திருவண்ணாமலை ஸ்தபதியார் டி.சண்முகாச்சாரியாரால் எஸ்டிமேட்டுகள் வரைபடங்கள் அமைக்கப்பட்டு பிறகு சுவாமிமலை ஸ்தபதிகள் பிரம்மஸ்ரீ நடராஜ ஸ்தபதி பிரம்மஸ்ரீ கே.வேலு ஸ்தபதியின் சீறிய முயற்சியால் நல்ல முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    • தேவியின் ஸ்ரீசக்கரத்தை குறிப்பதே வெண்கல கிண்ணித்தேர்.
    • அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா

    தேர், திருவீதி உலா வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கிண்ணித் தேரின் பவனியைப் பார்த்திருக்கிறோமா? இந்தியாவிலேயே வேறெங்குமில்லாத புகழ் பெற்ற கிண்ணித் தேரினை அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலில்தான் காண முடியும். எதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைப் போல இந்தக் கிண்ணித் தேருக்கும் வரலாறு உண்டு.

    சென்னம்மன் குப்பம், மதராசி குப்பம், ஆறு குப்பம், மேல்பட்டு என்னும் பகுதிகளே இன்றுள்ள சென்னப்பட்டினம் ஆகும். சென்ன - அழகிய அம்மாள் - தாய். இச்சென்னம்மனே இன்றுள்ள காளிகாம்பாளது முதற் பெயர். இவளது பெயரால் முன்னைய சென்னை ராஜ்யமும் தலைநகரும் உண்டாயின.

    எச்.டி.லோவ் எழுதிய மதராஸ் வரலாற்றில் சென்னம்மன் கோவில் மூலவரை கல்யாணி என்றும் கவுரிம்மன் என்றும் பக்தர்கள் அழைத்தனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப்பழைய கோவில் காளிகாம்பாள் கோவிலே என்றும் காலம் காண முடியவில்லை. காலங்கடந்தது என்றும் சரித்திர ஆசிரியர் கூறுவர். கி.பி. 1640-ல் காளத்தீஸ்வரர் கோவிலும் கி.பி. 1725-ல் கச்சாலீஸ்வரர் கோவிலும் கட்டப்பட்டன.

    400 ஆண்டுகளுக்கு முன்பெ சீரும் சிறப்புமுற்று ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் நடந்த பெருவிழாவில் வெண்கலக் கிண்ணித் தேர் ஓடிற்று. அயல் நாட்டினரும் இத்தேரின் ஓசை கேட்டு மயங்கினர். 24-9-1641ல் சென்னை ஆட்சி ஆங்கில ஏஜென்சியிடமிருந்த போது வலக்கை இடக்கை ஜாதியினர் ஊர்வலம் வரும் விதிகளுக்காகப் பூசலிட்டனர். கி.பி. 1643 கிரீன் ஹில்ஸ் சமாதானம் செய்தார். உடன் பாட்டால் கிண்ணித் தேர் ஓடியது. தேவியின் ஸ்ரீசக்கரத்தைக் குறிப்பதே வெண்கலக் கிண்ணித்தேர் ஆகும்.

    கி.பி. 1655 வலக்கையர் இடக்கையர் அறியாமையால் சண்டையிட்டனர். ஆங்கிலேயர் இந்த இரு திறத்தாரையும் கூட்டிக்கொண்டு போய் காஞ்சி காமகோட்டத்தில் காமாட்சியின் வலப்பக்கத்தில் வலக்கை ஜாதியினரையும் இடப்பக்கத்தில் இடக்கை ஜாதியினரையும் நிற்க வைத்து ஊர்வலத்தில் சண்டையிடக்கூடாது என உடன்படிக்கையில் கையெழுத்திடச் செய்தனர். ஸ்ரீ காஞ்சி காமாட்சியின் பெரில் ஜாதியினர் சத்தியம் செய்தனர். மறுபடியும் கிண்ணித் தேர் மராட்டியர் டவுனில் (முத்தியாலுப்பெட்டை, பகடாலுப்பெட்டை) உலா வந்தது.

    கிண்ணித் தேர் விழா, முதல் கவனர் பிட் நிறுத்தினார் சென்னை இரண்டாம் கவர்னர் சாண்டர்ஸ் காளிகாம்பாள் கோவிலுக்கு விஜயம் செய்து 21-9-1790ல் தாமும் தேரின் வடத்தைக் கையால் பற்றி இழுத்து பக்தர்களோடு பரசவப்பட்டார். அம்பாள் கிண்ணித்தேரில் வீதியுலா கண்கொள்ளாக் காட்சியாகும். அடியேனும் சிறு வயதில் கண்டும் கேட்டும் களித்துள்ளேன். வெண்கலத் தட்டுகளின் ஓசையும் ஒலியும் பக்தர்களை மெய்மறக்கச் செய்யும் என்பது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.

    இந்தியாவில் மிகப்பெரிய வெண்கலக் கிண்ணித் தேர் சென்னைபுரி ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலில் உள்ளதே, கடலூரிலும் பாண்டியன் சேரியிலும் (புதுச்சேரி) கிண்ணித் தேர்கள் உள்ளது. இத்தேரினை ஸ்ரீ சக்கர ரதம் என்பர் பெரியோர். கி.பி. பதினோறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தனி அம்மன் கோவில்கள் உண்டாயின.

    பின்னரே சாமி, அம்மன் கோவில்கள் சிவசக்தி தத்துவம் கண்டன. காமேஸ்வரர் அல்லது கமடேஸ்வர் (சிவன்) பிரகாசத்தை காமேஸ்வரி, சிவகாமி, காமகோடி, வனிதா, திரிபுரசுந்தரி விமர்ஸா இவை இரண்டினையும் சேர்த்தே ஸ்ரீசக்கரம் தோன்றியது. ஸ்ரீசக்கரம் இரு வகை முக்கோணங்களையுடையது.

    ஒரு வகை ஆண்பால் (சிவன்) குறிக்கும் நான்கு முக்கோணங்களாம். மற்றொரு வகை பெண்பால் குறிக்கும் ஐந்து முக்கோணங்களாம். இவைகளின் உச்சியே பிந்து ஸ்தானம் எனப்படும். அந்த நடுவண் வீற்றிருப்பவர்களே என்றும் பிரியாத காமேஸ்வரர் வனிதா எனப்படுவோர். இத்தகைய ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் முக்கிய சக்தி ஆலயங்களில் ஸ்தாபித்தார். காஞ்சி காமாட்சி முன்னர், குற்றாலத்தில் ஸ்ரீ சங்கர பீடம் ஆவுடையார் கோவில் மூலத்தில், சென்னை காளிகாம்பாள் கோவில் காளியம்மன் முன்னர் இன்றும் அவைகளைக் காணலாம்.

    • ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு
    • ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகம்

    காளிகாம்பாள் திருத்தலத்தில் ஆடி மாதத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் பக்தர்களின் மனதை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவது, அம்பாளுக்கு நடத்தப்படும் `ஊஞ்சல் உற்சவம்' நிகழ்ச்சியாகும். வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த நாட்களில் இரவு 7 மணிக்கு உற்சவர் அம்பாளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவார்கள். உற்சவர் அம்மன் வீற்றிருக்கும் மண்டபத்தில் இந்த உற்சவம் நடைபெறும். அப்போது சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டு நாம் உற்சவர் அம்பாளை வழிபட்டால், அவள் மனம் மகிழ்ந்து நமது வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றுவாள்.

    காளிகாம்பாள் கோவிலில் ஆடிப்பெரு விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.

    • பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
    • ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும்.

    மஞ்சளும், குங்குமமும் மகத்துவம் நிறைந்தது என்று நமது இந்து மத சாஸ்திரங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுவாகவே எல்லா சுபகாரியங்களிலும் மஞ்சளும், குங்குமமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் இல்லாமல் எந்த மங்கள செய்கைகளும் மகத்துவம் பெற முடியாது.

    கோவிலாக இருந்தாலும், வீடாக இருந்தாலும் சரி, அவசியம் வழிபாடுகளில் மஞ்சள், குங்குமம் இடம் பெற்றிருக்கும்.

    குறிப்பாக அம்பாள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்களில் குங்குமம் முதல் இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு குங்குமம் முக்கியமானது.

    திருமணம், வீடு கிரகபிரவேசம் உள்ளிட்ட சடங்குகளில் நாம் உன்னிப்பாக கவனித்தால் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அதில் குங்குமமிட்ட பிறகுதான் மற்ற செயல்கள் தொடங்குவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அது போலத்தான் ஒரு பெண்ணை மங்களகரமாக தோன்ற செய்வதும் மஞ்சள்-குங்குமம்தான்.

    ஒரு பெண் தன் நெற்றில் குங்குமம் வைத்துக் கொண்ட பிறகு பாருங்கள், அந்த பெண்ணுக்கும் குங்குமத்துக்கும் தனி மரியாதை உண்டு.

    பெண்கள் தங்கள் திருமாங்கல்யத்தில் குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொள்வதுண்டு. இதுதான் சுமங்கலிக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது.

    இதனால்தான் அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்தை பெண்கள் மிகப்பெரும் பாக்கியமாகக் கருதிப் பெற்றுக் கொள்வதுண்டு. அதிலும் சில அம்பாள் தலங்களில் வழங்கப்படும் குங்குமத்துக்கு இரட்டிப்பு சக்தி உண்டு.

    அந்த வகையில் பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் குங்குமத்துக்கு தனித்துவம் உண்டு.

    இத்தலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் குங்குமத்துடன் எலுமிச்சம் பழமும் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

    காளிகாம்பாளை மனம் குளிர தரிசனம் செய்து விட்டு, முடிந்தால் அவள் முன் உள்ள சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து அவளை வழிபட்டு தியானிக்கலாம். மனம் நிறைவு பெறும் வரை இந்த தரிசனத்தை மேற்கொள்ளலாம்.

    பிறகு அம்பாளிடம் விடை பெற்று, வலது புறம் உள்ள கமடேஸ்வரர் சன்னதிக்கு வந்து வழிபட வேண்டும். அந்த சன்னதி அருகில்தான் குங்கும பிரசாதம் வழங்குவார்கள்.

    அந்த குங்குமம் உங்கள் திருக்கரங்களில் பட்டதுமே நீங்கள் மெய்சிலிர்த்துப் போவீர்கள். அந்த குங்குமத்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.

    அத்தகைய குங்குமம் உங்கள் பரந்த நெற்றியை அலங்கரிக்கும் போது, மகத்துவம் அதிகரித்து விடும்.

    உங்களை எந்த பார்வையும், திருஷ்டியும், ஏவலும் அண்டவே அண்டாது. இது நிஜம்.

    ஆண்டாள் சன்னதியில் பாருங்கள், அவள் நெற்றிக் குங்குமம் இல்லாமல் இருப்பதே இல்லை. அந்த குங்குமம், அவள் கண்ணன் மீது கொண்டுள்ள அன்பை காட்டும்.

    அதுபோலவே காளிகாம்பாள் தலத்தில் தரும் குங்கும் இட்ட பெண்களைப் பாருங்கள், அவர்கள் அம்பாளின் நல்ல அருளை முழுமையாகப் பெற்றவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

    ×