search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumaran Road"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத்தொடங்கியது.
    • வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

    திருப்பூர் :

    திருப்பூரின் முக்கிய சாலையாக குமரன் சாலை உள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையம், காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். இதனால் திருப்பூர் அந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.

    தாறுமாறாக ஓடிய லாரி : இந்தநிலையில் இன்று மதியம் 12-45 மணியளவில் விறகுகளை ஏற்றிக்கொண்டு பழைய பஸ் நிலையம் நோக்கி லாரி ஒன்று வந்தது. திருப்பூர் குமரன் சாலை வழியாக வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத்தொடங்கியது. அப்போது முன்னால் சென்ற வாகன ஓட்டிகள் மீது மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். டிரைவர் லாரியை நிறுத்த முயன்றும் முடியவில்லை.

    இதனால் டிரைவர் லாரியை சாலையோரமாக திருப்பிய போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 5க்கும் மேற்பட்ட கார்கள் மீது மோதியது. பின்னர் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மோதியதுடன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீதும் மோதியது.

    ஒருவர் பலி : இதில் ஒருவர் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து காரணமாக திருப்பூர் குமரன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரேக் பிடிக்காததன் காரணமாக டிரைவர் லாரியை தாறுமாறாக ஓட்டியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகனங்கள் சேதம் :லாரி மோதியதில் குமரன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்கள், 10க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மோட்டார் சைக்கிள்கள் சாலையில் சிதறி கிடந்தன. அதனை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தையும் சீர் செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு மேயர் தினேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

    திருப்பூர் குமரன் சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலும் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×