என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Margazhi worship"
- பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும்.
- பிரச்சனைகள் தீர பெருமாளிடம் முறையிட வேண்டும்.
இன்று மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. இந்த மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கூட இன்றைய தினம் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம், மார்கழி மாதம் முழுவதும் பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும். இன்றைய தினம் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. பெருமாளுக்கு உரிய நட்சத்திரம்.
இந்த மார்கழி மாதம் முழுவதும் உங்களால் அதிகாலை வேளையில் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் சரி, இன்று பெருமாளை நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். வீட்டில் பெருமாளுக்கு உகந்த விஷ்ணு சகஸ்ரநாமம், இல்லையென்றால் சுப்ரபாதம் ஒலிக்க விடுங்கள். மனதை அமைதியாக வைத்து பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பெருமாளிடம் முறையிட வேண்டும்.
மகாலட்சுமி தாயாரிடமும் பணக்கஷ்டம் சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைக்கலாம். பிறகு வீட்டு பக்கத்தில் ஏதாவது பெருமாள் கோவில் இருந்தால் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவியுங்கள். இன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு சென்று உங்களுடைய எவ்வளவு பெரிய வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும்.
பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலை, பிரசாதம் இவைகளை வாங்கிக் கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் இருக்கும் மகாலட்சுமி தாயாரையும் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் பெருமாள் கோவிலில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் மல்லிப்பூ வாங்கி கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்புங்கள்.
பெருமாள் கோவில் பிரசாதமான இந்த துளசி இலையை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. வாங்கி வந்த துளசி இலையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு அந்த தண்ணீரை தீர்த்தமாக பருகலாம். மீதம் இருக்கும் துளசி இலையை, பீரோவில் நகை வைக்கும் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். பண கஷ்டமும் தீரும். இந்த துளசி தீர்த்தத்தை குடிப்பதால் உங்கள் உடம்பில் இருக்கும் பிணி பீடை விலகும். விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்கள் இல்லறம் இருள் நிலையில் இருந்து விலகும்.
- பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே!
- திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
வாசுதேவனின் மனைவியான தேவகிக்கு நீ மகனாக பிறந்தாய். அதே இரவில் ஆயர்பாடியில் நந்தகோபனுக்கும் யசோதைக்கும் மகனாகி மறைந்து வளர்ந்தாய். இவைகளை தாங்கிக்கொள்ள முடியாத கம்சன், உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். அவனுடைய தீய எண்ணத்தை அழித்து நெருப்பாக நின்று அச்சத்தை ஏற்படுத்தினாய். பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே! நீயே சரண் என்று உன்னை வணங்கி உன் அருள் தேடி வந்துள்ளோம். நாங்கள் நினைத்த வரத்தை அருளினால் அதனைப் பெற்று உயர்ந்த அருட்செல்வத்தால் உன் பெருமைகளை பாடித்துதிப்போம். எங்கள் எல்லா துயரங்களும் மறைந்து விடும்!
திருவெம்பாவை
பாடல்
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நீ பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஒவ்வொன்றிலும் நிறைந்து இருக்கிறாய். இருந்தும் உன்னை பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் புகழ்ந்து கூறி ஆடிப்பாடுகின்றனர். உன்னை கண்டறிந்தவர்கள், யார் என்று கேட்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. சிந்தனைக்கு எட்டாதவனாக இருந்தாலும் எங்கள் முன் நேரில் தோன்றி நாங்கள் செய்கின்ற தவறுகளையும், குற்றங்களையும் மாற்றி அமைப்பவன் நீ நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களுக்கு அருள்வாயாக! எம்பெருமானே பள்ளியெழுந்து வந்து அருள்புரிவாயாக.
- வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம்.
- திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்
விளக்கம்
வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம். சீதையை மீட்க இலங்கை சென்று ராவணன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த உன் திறமையை போற்றுகிறோம்! சக்கர வடிவத்தில் உன்னை கொல்வதற்கு வந்த சகடாசுரனை கொன்றாய். உன் புகழை வணங்குகிறோம். வண்டு வடிவில் வந்த வத்சாசூரனை தடியால் அடித்துக்கொன்றாய். உன் திருவடியை வணங்குகிறோம். கோவர்த்தனம் எனும் மலையை குடையாக்கி கோகுலத்தை காப்பாற்றினாய். பகைவர்களை வெற்றி கொள்ளும் உன் வேலையும் போற்றி வணங்குகிறோம். உன் பெருமைக்குரிய செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி எங்கள் நோன்புக்குரிய வேண்டுதல்களை பெற்றுக்கொள்ள வந்துள்ளோம். உன் அருளைப் பெற வந்த எங்களுக்கு மனம் இறங்கி அருள்புரிய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
விளக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பொழுது விடிந்தது! உன்னை வணங்குவதற்காக வீணை மற்றும் யாழ் கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஒரு பக்கம் உள்ளனர். வேத மந்திரங்கள் ஒதுவோரும், தமிழ் தோத்திரப் பாடல்கள் பாடுவோரும், மலர் மாலையை கையில் ஏந்தி கொண்டு இருப்பவர்களும் உன் சிறப்பை பாடிக்கொண்டு உள்ளனர். உன்னை தொழுபவர்களும், அருள் வேண்டி அழுபவர்களும், துன்பத்தில் துவண்டவர்களும், நீயே சரணாகதி என்று தலையில் கைவைத்து வணங்குபவர்களும் உன்கோவிலில் சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் நான் சாதாரணமானவன். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டு அருள்பவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து அருள்புரிவாயாக.
- காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே!
- உதய காலத்து வெளிச்சம் தோன்றியது.
திருப்பாவை
பாடல்
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
விளக்கம்:
வீரமுடைய ஒரு சிங்கம் மழைக்காலத்தில் வெளியே வர முடியாமல் மலையில் உள்ள குகையில் நீண்ட காலம் படுத்து தூங்குகிறது. மழைக்காலம் முடிந்த பின் திடீரென விழித்தது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்க பிடரி சிலிர்த்து நான்கு புறமும் திரும்பிப்பார்த்து கர்ஜனை செய்து குகையில் இருந்து வெளியே புறப்படுகிறது. அந்த சிங்கத்தைப் போல் காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே! நீயும் உன் திருக்கோவிலில் இருந்து நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து எங்கள் குறைகளைக்கேட்டு அருள் செய்ய வேண்டும். எங்கள் வாழ்விற்கு வேண்டிய நல்லவை. கெட்டவை அறிந்து அருள்புரிவாயாக!
திருவெம்பாவை
பாடல்
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
அழகிய குயில்கள் கூவின. கோழிகள் கூவின. மற்ற பறவைகளும் ஒலி எழுப்பின. சங்குகள் முழங்கின. வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் ஒளி மறைந்தது. உதய காலத்து வெளிச்சம் தோன்றியது. தேவாதி தேவனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! எமக்கு அன்புடன் உன் வீரக்கழல் அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டி அருள வேண்டும். யாராலும் அறிய முடியாத தன்மை உடையவனே! எளிமையானவனே! எம்முடைய தலைவனே! துயில் நீங்கி எழுவாயாக!
- எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.
- அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே!
திருப்பாவை
பாடல்
அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
விளக்கம்
இந்த பூமியை ஆட்சி செய்த பல அரசர்கள், நீ பள்ளிகொண்டிருக்கும் கட்டில் அருகே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போன்றே நாங்களும் உன் அருளை நாடி வந்து நிற்கிறோம். கிங்கிணி வாயைப்போல மலர்ந்திருக்கும் தாமரைப் பூ மெதுவாக மலர்வதைப் போல உன் சிவந்த கண்களை சிறுகச்சிறுக திறந்து எங்களைப் பார்த்து அருளக்கூடாதா? சூரியனையும், சந்திரனையும் இருவிழிகளாக கொண்டவனே! சூரியனைக் கண்டவுடன் மலரும் தாமரை போல உன் திருக்கண் பார்வையால் எங்களைப் பார்த்தால் எங்கள் பாவங்கள் நீங்கும்படியாக அருள்புரிய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தரு ளாயே
விளக்கம்
சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கு திசையில் வந்துவிட்டான். இருள் விலகி ஒளி பரவிவிட்டது. சிவபெருமானே! உன் திருமுகத்தில் தோன்றும் கருணையைப் போல் சூரியன் மெல்ல மெல்ல மேலே எழுகின்றான். உன் தோட்டத்து மலர்கள் எல்லாம் உன் அழகிய இதழ் விரிவதைப்போல மலர்கின்றன. வண்டுகள் இசை பாடு கின்றன. அந்த வண்டுகள் மலரில் உள்ள தேனை பரிசாகப்பெறும் அடியார்களும் உன்னைப்பாடி துதிக்கிறோம். அருள்நிதியை அருள வேண்டும். திருப்பெருந்துறையில் வாழ்கின்ற சிவபெருமானே! அருளான செல்வத்தை எங்களுக்கு வழங்குகின்ற ஆனந்த மூர்த்தியே! எல்லை இல்லாத அலைகள் வீசும் பெருங்கடல் போன்றவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து வருவாயாக!
- குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது.
- எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது.
திருப்பாவை
பாடல்
குத்துவிளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்
விளக்கம்
குத்துவிளக்குகள் ஒளி வீசுகிறது. யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலில் போடப்பட்ட குளிர்ச்சியான படுக்கையில் படுத்திருக்கும் கண்ணபிரானே! கொத்தான மலர்களைச் சூடிய கூந்தலை உடைய மனைவி நப்பின்னையின் மார்பின் மீது துயிலுகின்றவனே! எங்கள் குரல் கேட்டு வாய் திறந்து பேசமாட்டாயா? மை தீட்டப்பட்ட அகன்ற கண்களுடைய நப்பின் னையே! நீ உனது கணவன் கிருஷ்ணன் எவ்வளவு நேரம் தூங்கினாலும் எழுப்பி விடமாட்டாயா? நீ அவனை ஒரு நிமிடம் கூட பிரிய மறுக்கிறாயே.. இது உனக்கே சரியா? நாங்கள் கூறுவது தத்துவம் அல்ல. இது சரி அன்று! அவனை எழுப்பி விடு.
திருவெம்பாவை
பாடல்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றாங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென்ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்
விளக்கம்
சிவபெருமானே! உன்னிடம் ஓர் விண்ணப்பம் செய்கிறோம், கேட்டருள்வாயாக! 'உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்ற பழமொழி உண்டு. அது சிறிதும் மாறிவிடாதபடி அருள்செய்! எங்களுடைய மார்பகங்கள் உனது அடியார்களின் தோள்களைத் தவிர பிறர் தோள்களை தழுவாமல் இருக்க அருள்செய்வாய்! எம் கைகள் உன்னைத்தவிர யாருக்கும் பணி செய்யக்கூடாது. அடியார்களாகிய எங்கள் கண்கள் இரவும், பகலும் உன்னைத் தவிர வேறு எதையும் காணாமல் இருக்க நீ அருள்புரிய வேண்டும். இறைவா.. எங்களுக்கு இந்த வரத்தை அருள்வாயானால் சூரியன் எந்த திசையில் உதித்தால்தான் என்ன? எங்களுக்கு என்ன குறை? கவலையற்றவர்களாக உன் நினைவாகவே சிந்தித்து இருப்போம். உன்னை உணர்ந்து நீராடிப் பாடுவோம்.
- நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே!
- திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமான்.
திருப்பாவை
பாடல்
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
மதயானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத வலிமையான தோள்களை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னையே? நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே! கதவைத் திறப்பாயாக! பொழுது புலர்வதற்கு அறிகுறியாக கோழிகள் கூவும் சத்தம் எங்கும் கேட்கிறது. குருகத்தி கொடி பந்தல் மேலே அமர்ந்து, குயில்கள் கூவிக்கொண்டு இருக்கின்றன. மென்மையாக பந்து விளையாடும் அழகிய விரல்களை உடையவளே! உன் கணவனின் புகழ்பாட வந்துள்ளோம். நீ கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலி செய்ய, செந்தாமரை மலர் போன்ற சிவந்த கரங்களால் கதவைத் திறப்பாயாக!
திருவெம்பாவை
பாடல்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
திருவண்ணாமலையில் ஜோதிமயமாக விளங்கும் சிவபெருமானின் திருவடிகளை ரத்தின கற்கள் பதித்த மகுடத்தோடு தேவர்கள் பணிந்து வணங்கினர். இறைவனின் ஒளிக்கு முன்னர் அவர்கள் அணிந்துள்ள ரத்தினங்கள் ஒளியை இழந்தன. அதைப்போல வானில் சூரியன் தோன்ற அதன் கதிர்களால் இருள் நீங்கியது. நட்சத்திரங்கள் தனது ஒளியை இழக்கும் காலை வேளையில், ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும், வானாகவும், மண்ணாகவும், உலகம் கடந்த பொருளாகவும், அடியார்களுக்கு அமுதமாகவும் விளங்கும் இறைவனின் திருவடிகளை பாடிக்கொண்டே பூக்கள் நிறைந்த பொய்கையில் பாய்ந்து நீராடுவோம்.
- உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா!
- நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக!
திருப்பாவை
பாடல்
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
உடுக்க உடையும், குடிப்பதற்கு நீரும், உண்பதற்கு உணவும் கேட்டவர்களுக்கு, அவர்களின் மனம் நிறைவடையும்படி அவற்றை அளிக்கும் எம்பெருமானே! உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா! நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக! பெண்களுக்கெல்லாம் கொழுக்கொம்பாக உதவி நிற்கின்ற இளகிய மனம் கொண்ட யசோதையே! எங்கள் தலைவியே! எழுந்த ருள்வாயாக! வாமன அவதாரத்தின் போது வானத்தைப் பிளந்து உயர்ந்து நின்று, உன் திருவடிகளால் உலகத்தை அளந்த தேவதேவனே! கண்ணா! நீ தூக்கம் நீங்கி கண்விழிக்க வேண்டும். வீரக்கழல் அணிந்த செல்வனே பலராமா! நீயும் உன் தம்பி கண்ணனும் துயில் எழுந்து வந்து எங்களைக் காத்தருள வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசே அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
தேன் சிந்தும் மலர்களை அணிந்துள்ள பெண்ணே! சிவந்த கண்களுடைய திருமால், நான்கு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களை கொண்ட பிரம்மா, தேவலோகத்தில் வாழும் தேவர்கள், இவர்களிடம் இல்லாத ஓர் இன்பநிலை நமக்குக் கிடைத்துள்ளது. தலைவனாகிய சிவபெருமான் நமது வேண்டுதலை நிறைவேற்றுபவர். அவர் சிவந்த தாமரை மலர் போன்ற பாதங்களைக் கொண்டவர். இவர் நம் வேண்டுதலுக்கு இணங்க நமது வீடுகள்தோறும் எழுந்தருள் கிறார். அழகான கண்களைக் கொண்ட சிவனடியார்களின் நோய் தீர்க்கும் அரு மருந் தாக இருப்பவன், அமுதம் போன்றவன் என்றும் சிறப்புமிக்க அந்த இறைவனைப் போற்றிப் புகழ்வோம். அழகிய மலர்கள் நிறைந்த குளத்தில் மூழ்கி நீராடுவோம். நம் குற்றங்கள் நீங்க ஆடி மகிழ்ந்து பாடுவோம்.
- நந்தகோபாலனின் திருமாளிகையை காப்பவனே!
- அழகிய புருவம் போல் வானவில்லை உண்டாக்கு.
திருப்பாவை
பாடல்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
ஆயர்குடி மக்களின் தலைவனாக இருக்கின்ற நந்தகோபாலனின் திருமாளிகையை காப்பவனே! கொடிகள், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்ட வாசலை பாதுகாக்கும் காவலனே! மணிகளோடு கூடிய கதவை திறப்பாயாக! ஆயர்குல சிறுமிகளுக்கு நோன்புக்கு தேவையானவற்றை தருவதாக கிருஷ்ணன் நேற்றே வாக்களித்திருக்கிறான். அதனைப் பெற்று செல்வதற்காக வந்து இருக்கிறோம்.
அவனைத் தூக்கத்தில் இருந்து எழுந்தருள வேண்டி திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்காக உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி வந்துள்ளோம். அதெல்லாம் முடியாது என்று தடுத்துவிடாதே.. கண்ணன் வீட்டுக் கதவைத் திறப்பாயாக!
திருவெம்பாவை
பாடல்
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள்
இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும்
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்
விளக்கம்
மேகமே மழைக்காலத்துக்கு முன்பே நீ கடலின் நீரை சுருக்கி வற்றச்செய்து, அதன் பிறகு அந்த நீரை வானத்திற்கு எடுத்துச்சென்றுவிடு! எங்களை காத்தருளும் அன்னை பார்வதியின் திருமேனியைப் போல நீல நிறமாக மாற்றிவிடு. அங்கே அவளின் மெல்லிய இடைபோல் மின்னல் ஒலியை உண்டாக்கு. அன்னையின் கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் எழுப்புகின்ற ஓசையைப்போன்று இடி முழக்கம் செய். அவரது அழகிய புருவம் போல் வானவில்லை உண்டாக்கு. உமையவளை விட்டுப்பிரிந்து இருக்காத எமது தலைவனாகிய இறைவனும் இறைவியும் அடியார்களுக்கு வாரி வழங்கும் அருளைப் போன்று மழையைப் பொழிவாய்
- கண்ணனைப் புகழ்ந்து போற்றி பாடுவதற்காக விரைந்து வருவாயாக!
- அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடுவோம்.
திருப்பாவை
பாடல்
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?
எல்லோரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்.
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
அடி பெண்ணே! இளமையான கிளி போன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்? சத்தம் போட்டு என்னை அழைக்காதீர்கள். இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு மீண்டும் படுத்து உறங்குகிறாயே? நீ மிகவும் கெட்டிக்காரி. வாய்ப்பேச்சில் வல்லவள். நாங்கள் இதை நன்கு அறிவோம். இந்த கெட்டிக்காரத்தனம் தவிர உன்னிடம் வேறு என்ன வைத்திருக்கிறாய்? நான் மட்டும் எழாததுபோல் பேசுகிறீர்களே என்று கேட்கிறாயே? எல்லோரும் வந்து விட்டார்கள். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். மாயச்செயல்களில் வல்லவன், பலம் பொருந்திய குவாலயபீடம் என்ற யானையைக் கொன்றவன், தீயவர்களை அழிப்பவன் என்று பல சிறப்புகளைக் கொண்ட கண்ணனைப் புகழ்ந்து போற்றி பாடுவதற்காக விரைந்து வருவாயாக!
திருவெம்பாவை
பாடல்
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்
விளக்கம்
அணிகலன்களுடன் கூடிய கச்சு என்ற ஆடையை அணிந்த பெண்களே! ஒரு பெண் தனியாக இருந்து எம்பெருமான் பெயரையே 'சிவ சிவ' என்று சொல்லி இறைவனின் சிறப்புகளை ஒயாமல் பேசிக் கொண்டிருக்கிறாள். பக்தி பரவசத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிகிறது. பலமுறை தரையில் விழுந்து வணங்குகிறாள். அப்படியே தன்னை மறந்து கிடக்கிறாள். தேவர்களை வணங்கமாட்டாள். இவ்வளவு பித்துப்பிடித்து அலையும் இந்த பெண்ணை ஆட்கொள்ளும் ஒப்பற்ற சிறப்புடைய பெருமான் யார்? அந்த இறைவனுடைய புகழை நாம் பாடுவோம். அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடுவோம்.
- இலங்கை மன்னன் ராவணன் தலையை கிள்ளி எறிந்தவன்.
- இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன்.
திருப்பாவை
பாடல்
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவன், ராமனாக அவதாரம் எடுத்தபோது இலங்கை மன்னன் ராவணன் தலையைக்கிள்ளி எறிந்தவன். இப்படிப் பட்ட ஸ்ரீமன்நாராயணனின் புகழைப் பாடிக் கொண்டு, எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். வியாழன் என்னும் கோள் மறைந்துவிட்டது. வெள்ளி என்ற கோள் உதயமாகிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. பூப்போன்ற கண்களை கொண்டவளே! இந்த குளிர்ந்த நீரில் நீராடி பரந்தாமனை பாடாமல் படுத்தே கிடக்கலாமோ? இது நல்ல நாள்? கண்ணனிடம் வரம்பெறும் நாளில் தூக்கம் என்கிற திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!
திருவெம்பாவை
பாடல்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
விளக்கம்
நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும் கருமையும் கலந்த கருங்குவளை மலர்கள் உள்ளன. செந்தாமரை மலர்களும் உள்ளன. நாம் வணங்கும் உமையவள் குவளை மலர் நிறமுடையவள். இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன். குருகு எனப்படும் குறுக்கத்தி மாலை அம்பிகையை அலங்கரிக்கிறது. இந்த பொய்கை இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது. பறவைகளினால் பலதரப்பட்ட ஓசைகள் உண்டாகின்றன. தங்கள் அழுக்கைப் போக்க அங்கு பலர் நீராட வருகிறார்கள். இப்படிப்பட்ட தாமரை மலர்கள் படர்ந்த பொய்கையில், கால் சிலம்புகள் ஒலிக்கவும். சங்குகள் ஒலிக்கவும், மார்பகங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கவும், நீர்த்துளிகள் சிதறவும் மூழ்கி நீராடுவோம்!
- செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா!
- சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
இளம் கன்றுகளுடைய பசுக்களிடம் இருந்து பால் கறக்கும் ஆயர் குலத்தினர், வலிய வரும் பகைவர்களை எதிர்த்து அவர்கள் வீரத்தை அழியும்படி செய்வர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பொற்கொடியைப் போன்ற பெண்ணே! மயில் போன்றவளே! புற்றில் வாழும் நாகத்தின் படம் போன்ற பீடம் உடையவளே! செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா! நாங்கள் அனைவரும் உனது வீட்டு முற்றத்தில் நின்று கார்மேக வண்ணன் கண்ணனின் பெயர் சொல்லிப் பாடுகிறோம். ஆனால் நீ எழாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டே இருக்கிறாய். அதன் பொருள் என்ன? எழுந்து வா! இறைவன் புகழ் பாடுவோம்.
திருவெம்பாவை
பாடல்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
விளக்கம்
நெருப்பை போன்ற சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே! சிறிய இடுப்பையும், மை தீட்டப்பட்ட பெரிய கண்களையும் கொண்ட பராசக்தியின் கணவனே! எல்லா செல்வங்களையும் உடையவனே நீ எங்களை ஆட்கொள்வது உனக்கு ஒரு விளையாட்டு! உன் விளையாட்டினால் அடியார்கள் என்ன அருளைப் பெறுவார்களோ, அவற்றையெல்லாம் நாங்களும் பெற்றோம். வண்டுகள் நிறைந்துள்ள குளத்தில் அவை ஒலி எழுப்பி பறந்து செல்லும்படி நீரில்மூழ்கி எழுந்து உன்னை வாழ்த்திப்பாடினோம்! உன்னை நாடிவந்தோம்! இனியும் நாங்கள் வருந்தாமல் இருக்க எங்களை கைவிடாமல் காத்தருள வேண்டும்!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்