search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mattala airport"

    சீனாவின் நிதியுதவியுடன் ராஜபக்சே ஆட்சி காலத்தில் ஹம்பந்தோட்டா துறைமுகம் அருகே உருவாக்கப்பட்ட விமான நிலையத்தை இயக்கி நிர்வகிக்க இந்தியா சம்மதித்துள்ளது. #MattalaAirport
    கொழும்பு:

    இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா என்ற கடற்பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தின் 70 சதவீதம் பகுதிகளை சீனாவுக்கு வழங்க இலங்கை அரசு கடந்த ஜூலை 29 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    சுமார் 1.1 பில்லியன் டாலர் மதிப்பில் 99 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் முதலீடு செய்துள்ளது.

    இதேபோல், ராஜபக்சே ஆட்சி காலத்தில் சீன அரசின் 210 பில்லியன் டாலர்கள் நிதியுதவியுடன் ஹம்பந்தோட்டா துறைமுகம் அருகே மிகப்பெரிய விமான நிலையம் ஒன்றும் உருவாக்கப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது.

    ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவையாற்றும் நோக்கத்திலும், 2028-ம் ஆண்டுவாக்கில் 50 லட்சம் பயணிகள் மற்றும் 50 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.

    மட்டாலா என்னும் இடத்தில் உள்ள இந்த விமான நிலையத்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த பலன்களை இந்த விமான நிலையம் பெறவில்லை. இதனால் இலங்கை அரசுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, லாபத்தில் பங்கு என்னும் நோக்கத்துடன் இந்த விமான நிலையத்தை இயக்கி, நிர்வகிக்க  இலங்கை அரசின் சார்பில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில், மட்டாலா  விமான நிலையத்தை இயக்கி, நிர்வகிக்க இந்திய அரசு முன்வந்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு அருகாமையில் இருக்கும் விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளையும் சமரசப்படுத்த அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய எதிர்கட்சி எம்.பி., இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த தீர்மானத்தின்மீது உரையாற்றிய மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா, ‘அரசுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியதுடன் இறந்து கொண்டிருக்கும் மட்டாலா விமான நிலையத்தை நிர்வகித்து, பராமரிக்க இந்தியா மட்டுமே முன்வந்துள்ளது. அதனால், கூட்டு முயற்சியாக இந்த விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.  #MattalaAirport
    ×