search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perumal idol"

    • பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தி செல்ல முயல்வதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டு இருந்தது. இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அதில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர்.

    இது குறித்து கார், மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை ராஜேந்திரன் (வயது 52), தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அலமங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார்(36), திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ் (28), ஜெய்சங்கர் (58), கடலுார் மாவட்டம் நாட்டார்மங்கலத்தை சேர்ந்த விஜய் (28) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ் என்பவரது தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலை கிடைத்துள்ளது. இது குறித்து அவர் தாசில்தார், வருவாய்துறை, கிராம நிர்வாக அலுவலர் என யாரிடமும் தகவல் அளிக்காமல், தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார்.


    இதையடுத்து தினேஷ் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்து இருந்த சிலையை கண்டெடுத்தார். அவரும், யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், சிலையை ரூ.2 கோடிக்கு வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய வேண்டும் என முயன்றுள்ளார்.

    இதற்காக தனது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடினார். பின்னர் தினேஷ் தனது நண்பர்களான ராஜ்குமார், ஜெயசங்கர், விஜய் ஆகியோர் மூலம் சென்னைக்கு கடத்தி செல்ல, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரை சேர்ந்த ஹாரிஸ் (26), காட்டுமன்னார்குடி அருகே கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகியோர் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தினேஷ் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து சிலை மற்றும் கார், மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த பழங்கால சிலையானது 15 முதல் 16-ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.இவற்றின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், சிலையானது தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×