search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private medical college student"

    தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.#Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து, வகுப்புகள் தொடங்கிய பிறகு ஏதேனும் காரணங்களுக்காக விலகும் மாணவர்கள் ரூ.10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தேசிய அளவில் செப்டம்பர் 30-ந்தேதி வரை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த இந்திய மருத்துவக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், ஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், அதைவிட சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை.

    ஒரு கல்லூரியை விட சிறந்த இன்னொரு கல்லூரியில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கான மாணவர்களின் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி சில மாணவர்கள் தொடக்கத்தில் கடன் வாங்கி ஒரு பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் கட்டியிருப்பார்கள்.

    அதன்பின் தொடர்ந்து படிக்க வசதியில்லாததால் மருத்துவம் அல்லாத வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முயலுவார்கள். அத்தகைய மாணவர்களும் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது அட்டூழியமானது. இதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.

    இதில் கொடுமை என்ன வென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடையில் விலகினால் அவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அரசுக்கு இழப்பு ஏற்பட்டால் பரவாயில்லை... தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியாது. மாறாக தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் தரகர் அரசாகத் தான் இருக்க முடியும்.

    தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் இடம் கிடைத்து அங்கு சேரும் போது, ஏற்கனவே படித்தப் பள்ளியில் நடப்புப் பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தமிழக அரசே அறிவுறுத்தியுள்ளது. அதே விதி தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்த வேண்டும். அதற்கு மாறாக ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பது மிகப் பெரிய சமூக அநீதி.

    எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மாணவர்கள் விலகுவதால் காலியாகும் இடங்களை அடுத்த நிலையிலுள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு வகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் உள்ளார்.#Ramadoss

    ×