என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rama Avatar"
- ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம்.
- ராமர் பிறந்த திதியே ராம நவமி.
ஸ்ரீ ராம நவமி என்றாலே, ராமனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ராமாயணம் என்பது மிகப்பெரிய காவியம். விபண்டகர் என்ற முனிவருக்கு ரிஷ்ய சிங்கர் என்ற புதல்வன் பிறந்தார். தசரத மகாராஜா அவரை அழைத்து வந்து, நாடு செழிக்க யாகம் செய்ய நினைத்தார். ஒரு வசந்த காலத்தில் அஸ்வமேத யாகத்தை ஆரம்பித்தார். அதற்காக வசிஷ்டர் மூலமாக யாகசாலையை நன்றாக கட்டக் கூடிய திறமை வாய்ந்த சிற்பிகளையும், நன்கு வேதம் படித்த யாகம் செய்யக்கூடிய பிராமணர்களையும் அழைத்து வரச் சொன்னார். வசிஷ்டரும் தசரத மன்னன் சொன்ன படியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
இந்த யாகம் நடக்கும் பொழுது அயோத்தியில் இருக்கக்கூடிய நான்கு வர்ணத்தவருக்கும், எவ்விதமான உயர்வு தாழ்வும் இன்றி நல்ல மரியாதை, மதிப்புடனும் விருந்தளிக்குமாறும் தசரதர் கட்டளை இட்டிருந்தார். பல தேசத்து அரசர்களும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் தசரத மகாராஜாவை காண வந்தனர். வசிஷ்டர் தலைமையில் யாகம் நடைபெற்றது. பல பண்டிதர்களும் அந்த நேரத்தில் தர்மங்களை பற்றி விவாதம் செய்தனர்.
ஒரு வருடம் பூர்த்தியான பிறகு அஸ்வமேத யாக குதிரை சரயு நதியின் வடக்கு கரையில் அமைந்த யாகசாலைக்கு அருகே வந்து சேர்ந்தது. முதல் நாள் அக்னிஷ்டோமம், இரண்டாம் நாள் உக்த்யம், மூன்றாம் நாள் அதிராத்ரம் என்ற யாகங்கள் கல்ப சூத்திரத்தில் சொல்லியபடி நடைபெற்றது.
அஸ்வமேத யாகம் நிறைவடைந்ததும் ரிஷ்ய சிங்கரை அணுகிய தசரத மன்னன், "நான் வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவிக்கிறேன். எங்கள் குலம் தழைக்க, அதற்குரிய யாகத்தை செய்து கொடுங்கள்" என்றார்.
ரிஷ்ய சிங்கர் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ரகசியமான `இஷ்டி' என்ற யாகத்தை செய்து, பின் முறைப்படி புத்திர காமேஷ்டி யாகத்தை செய்தார். அந்த வேளையில் முப்பத்து முக்கோடி தேவர்களும், மகாவிஷ்ணுவை துதி செய்து `பூலோகத்தில் தர்மம் தழைக்க வேண்டும்' என வேண்டிக்கொண்டனர்.
மகாவிஷ்ணு அவர்களிடம் "நான் பதினோறாயிரம் வருஷம் இந்த பூமியில் பிறந்து நாட்டை ஆளப்போகிறேன்" எனக்கூறி, தன்னை நான்கு பாகமாக மாற்றி புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் யாகசாலை வந்து சேர்ந்தார். புத்திர காமேஷ்டி யாகம் செய்யும் அக்னியில் இருந்து தேஜஸ்வியான ஒரு பெருத்த உருவம் தோன்றியது. அதன் கையில் தங்க பாத்திரம் ஜொலித்தது. அதில் பால் பாயசம் இருந்தது. அந்த பால் பாயசத்தில் நான்கு பாகமாக மாறிய மகாவிஷ்ணு கலந்தார்.
தேஜஸ்வியான அந்த உருவம் தசரதரை நோக்கி "இந்த பால் பாயசத்தை உனது பிரியமான மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்" எனக் கூறி மறைந்தது.
தசரத மகாராஜா, அந்த பாயசத்தில் பாதியை கவுசல்யாவிற்கு கொடுத்தார். மீதமுள்ள பாதியில் அரை பங்கை சுமித்திராவுக்கு கொடுத்தார். மேலும் மீதம் இருந்த அரை பங்கில் பாதியை கைகேயிக்கு அளித்தார். அதன்பிறகும் எஞ்சிய பாயசத்தை மீண்டும் சுமித்திராவுக்கு கொடுத்தார்.
பாயசத்தில் பாதியை அருந்திய கவுசல்யாவுக்கு சித்திரை மாதம் வளர்பிறை புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில் கடக லக்னத்தில் நவமி திதியில் ராமபிரான் பிறந்தார். கைகேயிக்கு பூச நட்சத்திரம் கடக ராசி மீன லக்னத்தில் பரதன் பிறந்தார். இரண்டு முறை பாயசம் அருந்திய சுமித்திராவுக்கு ஆயில்யம் நட்சத்திரம் கடன ராசி கடக லக்னத்தில் லட்சுமணனும், சத்ருக்ணனும் பிறந்தனர்.
பிரம்ம தேவர், ராம பிரானுக்கு உதவுவதற்காக தேவர்களையும், மகரிஷிகளையும், கந்தர்வர்களையும், கருடர்களையும், யட்சர்களையும், நாகர்களையும், கிம்புருஷர்களையும், சித்தர்களையும், வித்யாதரர்களையும், உரகர்களையும், பெரிய உருவங்களுடன் வனத்தில் வசிக்கக்கூடிய வானரர்களாக பிறக்கும்படி செய்தார். இதில் நாம் ராமர் பிறந்த தினத்தை `ராம நவமி' என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
ஒரு சமயம் அஷ்டமி திதியும், நவமி திதியும் மன வருத்தம் கொண்டன. 'எல்லா திதிகளும் கொண்டாடப்படுகின்றன. நம்மை மக்கள் யாரும் கொண்டாடவில்லையே' என எண்ணி, வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானிடம் முறையிட்டன. அதற்கு விஷ்ணு, "நீங்கள் கவலைப்பட வேண்டாம். அஷ்டமி அன்று கிருஷ்ண அவதாரமும், நவமி அன்று ராம அவதாரமும் செய்யப்போகிறேன். அந்த தினங்களில் உலக மக்கள் அனைவரும் உங்களைக் கொண்டாடுவார்கள்" என்று வரம் கொடுத்தார்.
அதன் படியே கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதியை `கோகுலாஷ்டமி' என்றும், ராமர் பிறந்த நவமி திதியை `ராம நவமி' என்றும் சிறப்பித்து வழிபடத் தொடங்கினர். ராம நவமி தினத்திற்கு 9 நாட்கள் முன்பு `கர்ப்போத்ஸவம்' என்று கோவில்களில் கொண்டாடுவார்கள். அப்போது ஆலயங்களில் விசேஷ பூஜைகளும் நடக்கும்.
ராவணன், கரன், தூஷணன், திரிசிரன், மாரீசன், சுபாகு, தாடகை, விரதன், கபந்தன் போன்ற ராட்சசர்களை அழிக்க ராமனாக, விஷ்ணு பகவான் அவதரிக்கப் போவதை அறிந்து கொண்ட முனிவர்கள், ராமர் பிறப்பதற்கு முன்பிருந்தே கர்ப்போத்ஸவத்தை கொண்டாடியதாகச் சொல்வார்கள். அதேபோல் ராமபிரான் பிறந்ததில் இருந்து வரக்கூடிய ஒன்பது நாட்களை `ஜனோத்ஸவம்' என்று கொண்டாடுவார்கள்.
- குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம்.
- வைணவ மரபில் ராமனைப் பெருமாள் என்று அழைப்பது மரபு.
ஆழ்வார்கள் பன்னிருவரில் குலசேகர ஆழ்வார் மாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இன்றைய கேரளநாடு திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் அவதரித்தவர். குலசேகர ஆழ்வார் ராமாயணத்தில் ராமர் குணங்களில் கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என ஈடுபட்டவர். அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பை நாதமுனிகள் பெருமாள் திருமொழி என்று தலைப்பிட்டு முதல் ஆயிரத்தில் சேர்த்தார். ராமருடைய அவதார நட்சத்திரம் புனர்பூசம். குலசேகர ஆழ்வார் நட்சத்திரம் புனர்பூசம்.
இருவருமே அரசகுடும்பத்தில் அவதரித்தவர்கள். தசரதனுக்கு வெகுகாலம் குழந்தை பேறு இன்றி தவமிருந்து, பெற்ற பிள்ளையாக ராமன் அவதரித்தது போலவே குலசேகர ஆழ்வாரின் தந்தைக்கும் பலகாலம் பிள்ளைப்பேறு இன்றி செல்லப் பிள்ளையாக குலசேகரர் அவதரித்தார்.
இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் `குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று.
வைணவ மரபில் ராமனைப் பெருமாள் என்று அழைப்பது மரபு. காரணம் அவருடைய குலதெய்வமாக திருவரங்கநாதன் விளங்கினார்.
பெருமாளான ராமன் வணங்கிய பெருமாள் என்பதால் திருவரங்கநாதனை பெரிய பெருமாள் என்று அழைப்பார்கள். வைணவ மரபில் குலசேகர ஆழ்வாரை குலசேகரப்பெருமாள் என்று அழைப்பதும், அவர் பாடிய பாசுரங்களின் தொகுப்பு பெருமாள் திருமொழி என்றும் அழைப்பார்கள்.
- மகா விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுபவர் ஸ்ரீ ராமர்.
- ராம அவதாரத்தில் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார்.
மகா விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுபவர் ஸ்ரீ ராமர். அவர் தனது ராம அவதாரத்தில் சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.
ராம ராஜ்ஜியம்
அயோத்தியை தலைநகராக கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்த தசரதரின் மகனான ராமர், கடவுள் விஷ்ணுவின் 7-வது அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவர் ஜனக மன்னரின் மகளான சீதாதேவியை மணமுடித்து அயோத்தியில் வசித்து வந்தார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை, வாழ்வியல் முறையாக கடைபிடித்து வந்த ராமர், அயோத்தி அரசராக முடிசூடும் வேளையில் தந்தையின் கட்டளையால் வனவாசம் சென்றார்.
என் கணவர் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி என்று ராமருடன், சீதா தேவியும் கானகம் புறப்பட்டார். அண்ணனுக்கு சேவகன் நானே என்று ராமரின் தம்பியான லட்சுமணனும் அவர்களுடன் புறப்பட்டார்.
கானகத்தில் தங்கி இருந்தபோது யாரும் இல்லாத நேரத்தில், இலங்கை வேந்தனான ராவணன், சீதா தேவியை இலங்கைக்கு கடத்தி சென்றான். அந்த ராவணனை இலங்கைக்கு சென்று வதம் செய்து, சீதாவை மீட்டு ராமேசுவரம் வருகிறார் ராமர்.
சிவனை வழிபாடு செய்த பின், ராமர் மீண்டும் அயோத்திக்கு திரும்பி பட்டாபிஷேகம் செய்து பல ஆண்டுகள் நல்லாட்சி செய்கிறார். அவரது ஆட்சியில் மக்கள் சீரும், சிறப்புடனும் வாழ்ந்தனர். இத்தகைய சிறப்புமிக்க ஆட்சியைதான் மக்கள் ராம ராஜ்ஜியம் என்று சொல்கின்றனர்.
ராம ஜென்ம பூமியில் கோவில்
கடவுள் ராமருக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோவில்கள் இருக்கின்றன. ஆனால் அவரது பிறந்த பூமியான அயோத்தியில் ஒரு ராமர் கோவில் கூட இல்லை என்பதுதான் இந்துக்களின் ஏக்கமாக இருந்தது. ஆனால் இந்த ஏக்கத்தை போக்கும் விதமாக, அயோத்தியில் ரூ.2 ஆயிரம் கோடியில் மிகப்பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நம்பப்படும் இடத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கோவிலின் கருவறையில் வைக்கப்படும் சிலை மட்டும் சாதாரணமாக இருக்குமா என்ன?
ஆம்! அதுவும் சிறப்பு வாய்ந்ததுதான். இதற்காக மைசூருவில் சுமார் 300 கோடி ஆண்டு பழமை வாய்ந்த, தனித்தன்மை வாய்ந்த பாறை வெட்டி எடுக்கப்பட்டது. அதனை மைசூருவை சேர்ந்த சிற்பிஅருண் யோகி ராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
5 வயதுடைய பால ராமர் நின்ற கோலத்தில் இருக்கும் அந்த சிலை, கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. சிலையில் கண்கள் மட்டும் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டுள்ளது.
கண்களை திறக்கும் ராமர்
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ராமர் கோவில் கும்பாபிஷேம் இன்று நடைபெற உள்ளது. ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணி அகற்றும் பிரான் பிரதிஷ்டை விழா, பிரதமர் மோடி தலைமையில் இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ராமர் கண்ணை மறைத்து கட்டப்பட்டுள்ள மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டு, சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்