search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revenue fund"

    1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் வருவாய் நிதி பங்கீட்டை அமல்படுத்த வேண்டுமென 15-வது நிதிக்குழுவுவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    15-வது நிதிக்குழு 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று விவரிக்கின்றது. மாநிலங்களுக்கிடையே ஆன 1971 மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அதிகப்படியான வித்தியாசங்களை தெரிவிக்கின்றது. உதாரணத்திற்கு 1971-ல் தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை 4.11 கோடியாகவும், பீகார் மாநிலத்தினுடைய மக்கள் தொகை 4.21 கோடியாகவும் இருந்தது.

    2011-ம் ஆண்டில் தமிழ்நாடு 7.21 கோடியாகவும், பீகார் 10.21 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அதன்படி 15-வது நிதிக்குழு நிதி அதிகாரப்பகிர்வை 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் முடிவெடுத்தால், அதிகப்படியான தவறுகள் உருவாவதற்கும், மேலும் அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கு எதிராகவும், ஒருதலைப்பட்சமாகவும் அமைந்துவிடும்.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதிப்பகிர்வை முடிவெடுத்தால் மத்திய அரசு வலியுறுத்திய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முழுமையாக அமல்படுத்திய மாநிலங்கள் மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்திற்காக செயலாற்றிய மாநிலங்கள் நிதி பயன்களை இழக்கக் கூடாது.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால் அது 1971 மக்கள் தொகை கணக்கீட்டுக்கு எதிரானதாக அமைந்து விடும். குடும்ப நல கட்டுப்பாடு திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்திய தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் பிறப்பு சதவீகிதம், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது.

    15-வது நிதிக்குழு 2011 மக்கள் தொகை அடிப்படையில் வருவாய் பங்கீட்டை அமல்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய அதிகப்படியான நிதி ஆதாரங்கள் வட மாநிலங்களுக்கு சென்று விடுவதால் மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கப்படுவது போல் ஆகிவிடும் என்று தமிழ்நாடு சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் குற்றம் சாட்டுகிறது.

    முடிவாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி, இட ஒதுக்கீடு கொள்கைகளுக்கு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக எடுத்துக் கொள்வது போல், 15-வது நிதி ஒதுக்கீட்டுக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக வைக்காமல், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே வருவாய் நிதி பங்கீட்டை அமல்படுத்த வேண்டுமென 15-வது நிதிக்குழுவை தமிழ்நாட்டின் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×