search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem money robbery"

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் தம்பதியிடம் ரூ.1 லட்சம்- 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதி நேற்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செல்வதற்காக புதிய பஸ் நிலையத்திற்கு காரில் வந்து இறங்கினர்.

    அப்போது, ஒரு கைப்பையில் துணிகள் வைத்திருந்தனர். அதற்குள் ஒரு சிறிய பையில் 1 லட்சம் பணமும், 10 பவுன் நகையும் சிறிய பையில் வைத்திருந்தனர்.

    தனபால்-விஜயா தம்பதியின் மகன் காரில் இருந்து கைப்பைகளில் எடுத்துச் சென்று கும்பகோணம் செல்லும் பஸ்சுக்குள் வைத்தார். பின்னர் பஸ்சின் அருகில் நின்று பெற்றோரிடம் பெட்டியில் நகை, பணம் இருக்கிறது பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். சரி என்று சொல்லிய, பெற்றோர், காரில் நீ வீட்டுக்கு போ.. நாங்கள் பஸ்சில் ஏறுகிறோம் என்று கூறி மகனை காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பஸ்சுக்குள் ஏறி, கைப்பேக்கை திறந்து பார்த்தபோது பணம்-நகை வைத்திருந்த சிறிய பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தனபால்-விஜயா தம்பதியின் மகன் பேசியதை கேட்டுக் கொண்டு யாரோ ஒருவர், பஸ்சுக்குள் வைத்திருந்த கைப்பேக்கை திறந்து திருடி சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் துரிதமாக வந்து விசாரணை நடத்தி இருந்தால் இந்த பணம்- நகை திருடியது யார்? என்பதை கண்டுபிடித்து இருக்க முடியும். தாமதமாக வந்தால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாக தனபாலும் அவரது மனைவியும் கூறினர்.

    நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்சில், பயணிகளை தவிர பிற நபர்களும் ஏறுகிறார்கள்.

    மேலும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விழாக் காலம் நெருங்குவதால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி பொதுமக்கள் தினமும் அதிகளவில் புதிய பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். பஸ்களில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.

    பஸ் நிலையத்தில் நடைபெறும் திருட்டு தொடர்பாக புகார்கள் ஏதேனும் வந்தால் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உடனடியாக விசாரணை நடத்துவது கிடையாது என பயணிகள் கூறுகின்றனர்.

    இதை தவிர்த்து திருட்டு சம்பவம் நடக்காமல் இருக்கும் வண்ணம் அதிக அளவிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×