search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Secretary murder"

    அச்சரப்பாக்கத்தில் இன்று காலை தினகரன் கட்சி செயலாளரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தை அடுத்த தேன்பாக்கத்தில் வசித்து வந்தவர் பாலமுருகன் (வயது 37). இவர் தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தார்.

    பாலமுருகன் அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் டீக்கடை நடத்தி வந்தார். தினமும் அதிகாலை 4 மணிக்கு கடையை திறப்பது வழக்கம்.

    இன்று காலை அவர் வழக்கம் போல் கடையை திறந்தார். சிறிது நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கடையின் அருகே உள்ள இடத்துக்கு சென்று விட்டு திரும்பி நடந்து வந்தார்.

    அப்போது அருகில் உள்ள கடைகளில் ஆங்காங்கே பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாளுடன் பாலமுருகனை சுற்றி வளைத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கொலை கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் பாலமுருகனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டீக்கடையில் இருந்தவர்களும், அவ்வழியே வந்தவர்களும் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கொலை திட்டத்தை முடித்த கும்பல் சிறிது தூரத்தில் தயாராக நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அச்சரப்பாக்கம் காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா விரைவில் நடை ற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தின் போது பால முருகனுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே இந்த மோதலில் கொலை நடந்ததா? கட்சியினர் யாருடனும் மோதல் உள்ளதா? அல்லது தொழில் போட்டி ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொலையுண்ட பால முருகனுக்கு பவானி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
    ×