என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Story of Varalakshmi Vratham"
- தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதம்.
- பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தை பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், 'வரலட்சுமி நோன்பு' கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று என்றாலும், குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது பார்க்கப்படுகிறது.
பூவும், பொட்டும், சகல சவுபாக்கியங்களும் பெற்று, குடும்பம் சிறந்தோங்க வேண்டும் என்று சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.
ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமசிவனும், பார்வதிதேவியும் வீற்றிருந்தனர். அப்போது பார்வதிதேவி, சிவபெருமானை நோக்கி "சுவாமி! எந்த தேவதையை நினைத்து பெண்கள் விரதம் இருந்தால், அவர்களின் குடும்பம் சகல துக்கங்களில் இருந்தும் நீங்கப்பெற்று சுகவாழ்வை அடையும்" என்று கேட்டார்.
அதற்கு சிவபெருமான், "எல்லா சவுபாக்கியங்களையும் தரும் வரலட்சுமி விரதத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்" என்று கூறி, அந்த விரதம் ஏற்பட்ட வரலாற்றை சொன்னார்.
மகத தேசத்தில் குந்தினபுரம் என்ற ஒரு பட்டினம் உண்டு. அந்த பட்டினத்தில் சாருமதி என்னும் பதிவிரதை இருந்தாள். அவள் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவளது கணவன் உஞ்சவிருத்தி மூலம் கொண்டுவரும் அரிசியைக் கொண்டு, அந்த குடும்பத்தில் அனைவரும் பசியாறி வந்தனர்.
கருணையே வடிவான வரலட்சுமி தேவி, பதிவிரதையான சாருமதிக்கு அனுக்கிரகம் செய்ய முன்வந்தாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய வரலட்சுமி தேவி, "சாருமதி.. உன் பக்தியால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உனக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவே வந்திருக்கிறேன். நீ ஆவணி மாதம் பூர்வ பட்சத்தில், பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் என்னைப் பூஜித்தால் உன் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என்றாள்.
அதைக் கேட்ட சாருமதி, தான் கண்ட கனவிலேயே, அன்னை வரலட்சுமி தேவியை வலம் வந்து வழிபட்டாள். மேலும், தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி பூஜிக்கவும் செய்தார். அதோடு பவுர்ணமிக்கு முந்தை வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் வரலட்சுமி தேவியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்.
அதிகாலையில் கண் விழித்து எழுந்ததும், தான் கண்ட கனவு பற்றி, தன்னுடைய கணவன் மற்றும் மாமியார், மாமனாரிடம் சொன்னாள், சாருமதி. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, அந்த உன்னதமான விரதத்தை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டனர்.
அதன்படி ஆவணி மாத பூர்வபட்ச பவுர்ணமிக்கு முன்பு வந்த வெள்ளிக்கிழமையில் உதய காலத்தில், சாருமதியும், அவளது குடும்பத்தினரும் விழித்தெழுந்தனர். பின்னர் நீராடி விட்டு நல்ல வஸ்திரங்களை அணிந்து கொண்டு, பூஜை செய்வதற்குத் தேவையான பொருட்களை சேகரித்தனர்.
வீட்டில் ஓர் இடத்தை தேர்ந்தெடுத்த சாருமதி, அந்த இடத்தை மொழுகி, அரிசி மாவினால் கோலமிட்டாள். வரலட்சுமி தேவிக்கு ஒரு மண்டபம் அமைத்தாள். வண்ணப் பொடிகளால் தாமரைப் போன்று கோலமிட்டு அதனை அழகுபடுத்தினாள்.
அதன் மீது ஒரு நுனி வாழை இலையைப் போட்டு, அந்த இலை முழுவதும் பச்சரிசியை பரப்பி வைத்தாள். பச்சரிசியின் மேல் பகுதியில் பித்தளை செம்பில் சுண்ணாம்பு தடவி, அதன் வாய்ப் பகுதியில் மாவிலைகளை சுற்றிவைத்து, தேங்காயை வைத்து கலசம் போல் மாற்றினாள்.
அந்த கலசத்தின் மீது அம்மன் முகத்தை பதித்தாள். பின்னர் குத்துவிளக்கேற்றி வைத்தாள். கலசத்தை மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரித்தாள். அந்த கலசத்தில் வரலட்சுமி தேவியை ஆவாகனம் செய்தாள்.
இந்த பூஜையில் சாருமதியும் அவளது வீட்டின் அருகில் உள்ள பெண்களும் பக்தி சிரத்தையுடன் பங்கேற்று, வரலட்சுமி தேவியை பிரார்த்தனை செய்தனர்.
பத்மாஸநே, பத்மகராம்
ஸர்வலோக பூஜிதே
நாராயணப்ரியே தேவி
ஸுப்ரி தாப்பவ ஸர்வதா!!
என்ற லட்சுமி சுலோகத்தால், வரலட்சுமி தேவியை வணங்கி, ஷோடச உபசார பூஜைகள் செய்து, ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடினை வலது கையில் கட்டிக் கொண்டனர்.
வரலட்சுமி தேவிக்கு ஒன்பது விதமான பட்சணங்களை நைவேத்தியமாக படைத்து, கற்பூர தீபாராதனை காட்டி வணங்கினர். விரதம் முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றபோது, அந்த பெண்களின் வீடுகள் அனைத்தும் மாட மாளிகைகளாக ஆடம்பரமாக காட்சியளித்தன. இதைக் கண்ட மக்கள் அனைவரும், 'இது சாருமதி செய்த வரலட்சுமி பூஜையின் மகிமையால் ஏற்பட்டது' என்பதை அறிந்து சாருமதியை போற்றினர்.
இந்த வரலட்சுமி விரதம் இருப்பவர்கள், வரலட்சுமி தேவியின் அருளைப் பெற்று, தங்கள் பக்திக்கான நற்பலன்களை அடைவது உறுதி என்று பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தைப் பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.
பவிஷ்ய புராணத்தில் பரமேஸ்வரனால் பார்வதி தேவிக்கு சொல்லப்பட்ட இந்த வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்பவர்களும், சொல்லக் கேட்பவர்களும், விரதம் இருந்து அதை பூர்த்தி செய்பவர்களும், அஷ்ட ஐஸ்வரியங்களுடன், புத்திர பாக்கியமும், தீர்க்காயுளும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
சரடு எடுக்க சொல்லும் சுலோகம்
ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் சரடை பூஜையில் வைத்து, பூஜை முடிந்ததும் அதனை வலக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்து சரடை எடுக்கும் போது,
ஸர்வமங்கள மாங்கள்யே ஸர்வபாப ப்ரணாசினி!
தோரகம் பரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா!!
என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பின்னர் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் வைத்து, பூஜையில் பங்கேற்ற சுமங்கலி கையில் கொடுத்து கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லவும்.
நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்திஸமன்விதம்
பத்னியாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே
பிறகு மஞ்சள் சரடை வலது கையில் கட்டி விட வேண்டும். இதேபோல் மற்ற சுமங்கலிகளுக்கும் கட்டி விடவேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்