search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thagaisal Thamizhar Award"

    • குமரி அனந்தன் அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.
    • தமிழக தலைவர்களில் நிறைய பாத யாத்திரை சென்றவர் குமரி அனந்தன் ஆவார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    குமரி அனந்தனின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19, 1933-ல் பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்.

    இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு மருத்துவரும், அரசியல்வாதியுமான இவர் பாஜகவில் இருக்கிறார்.

     

    அரசியல் இவரை கவர்ந்திழுக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார், குமரி அனந்தன். 1977-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரலெழுப்பினார்.

    "காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி" என்ற புதிய கட்சியை தொடங்கிய இவர், 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தொடர்ந்து 1984 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதையடுத்து தன்னுடைய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைத்த குமரி அனந்தன், 1989 மற்றும் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

    பின்னர் முழுமையாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட குமரி அனந்தன், 1996-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1998-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தார்.

    குமரி அனந்தன் 5 முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

    இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாலும், தற்போது காங்கிரஸ் தொண்டராகவே இருந்து தனது கடமையை ஆற்றி வருகிறார்.

    தமிழக தலைவர்களில் நிறைய பாத யாத்திரை சென்றவர் குமரி அனந்தன் ஆவார்.

    பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், புதுச்சேரி மாந்தோப்பை, பாரதியின் குயில் தோப்பாக மாற்ற வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளும் இவர் மேற்கொண்டுள்ளார்.

    "இலக்கியச் செல்வர்" என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்பட 29-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார்.

     

    அரசியலில் பின்னடைவுகளை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது வாழ்க்கை பயணம், அரசியலில் கால்பதிக்கும் புதியவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாய் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 92-வது பிறந்தநாள் விழா கடந்த மார்ச் மாதம் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் கொண்டாடப்பட்டது. அவருக்கு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
    • தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    தகைசால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தமிழத்திற்கு பணியாற்றியவர் குமரி அனந்தன். எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டு செம்மலாக விளங்கும் குமரி அனந்தன் தகைசால் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

    ×