search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi Byelection"

    • திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார்.
    • அமைச்சர்களும் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.

    திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 ஓட்டுகளும் கிடைத்தன.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களும் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

    • திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தோல்வியடைந்தது குறித்து வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்தது. பரிசுப்பொருட்கள் மூலமாகவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

    * திமுகவிற்கு தோல்வி பயத்தை பாமக ஏற்படுத்தியது.

    * இடைத்தேர்தலில் தோல்வி பயத்தை திமுகவிற்கு ஏற்படுத்த முடிந்தது என்பதே மனநிறைவு.

    * அப்பாவி மக்களிடம் ரூ.1000, ரூ.500 காட்டி அவர்களை ஏமாற்றி திமுக வாக்கை பெற்றுள்ளது. இதற்காக பெருமைப்படக்கூடாது.

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளும் பாமகவிற்கு வந்துள்ளது என்று கூறினார்.

    • இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது.
    • மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாங்கள் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க. அரசுக்கு, இந்தியாவிலேயே இதுவரை எந்த ஆட்சிக்கும் இடைத்தேர்தல் நேரத்தில் வராத சவால்கள் வந்தது.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகாமையில் இருக்கிற கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. அதை பா.ஜ.க.வினர் பூதாகரமாக்கி பிரளயமே ஏற்பட்டு விட்டதை போல, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடைபெற்றதை மறைத்து விட்டு இங்கு மிகப்பெரிய நாடகத்தை நடத்தி தி.மு.க.வின் வெற்றியை குலைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டார்கள்.

    தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கொலை நடந்தது. அதற்கு அரசியல் சாயம் பூசி அதையும் இந்த தேர்தலில் மிகப்பெரிய பிரச்சனையாக்க முயற்சித்தார்கள்.

    இந்த 2 மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு காலம் நேர்மையாக ஆட்சி நடத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்களாகிய நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு தி.மு.க. வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத ஒரு சோதனை எங்களுக்கு ஏற்பட்டது. இந்த சவால்களுக்கு மத்தியில் தி.மு.க. தொண்டர்கள் கொஞ்சமும் சலிப்பில்லாமல் உறுதியோடு பணியாற்றியுள்ளனர். ஜாதியை தூண்டி விட்டு பேசியவர்கள் மத்தியில் கரியை பூசி இருக்கிறார்கள். மக்கள் எப்போதும் தெளிவாக வாக்களிக்கக்கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகலாக உழைத்து வாக்கு சேகரித்தார். அவர் அரசியலில் கால் வைத்த பிறகு அரசியலில் எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. இதன் மூலம் இன்னொரு வெற்றியும் தி.மு.க.வுக்கு கிடைத்திருகிறது. இந்த ஒரு மாதமாக பல தரப்பினரும் சேர்ந்து மனகுடைச்சல் கொடுத்தார்கள். அவை அத்தனையையும் தாங்கிக்கொண்டு உழைத்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
    • பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

    இந்நிலையில் 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டநிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

    எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

    • வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டனர்.

    பின்னர் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை காலை 6 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990இல் 685 ஆக உயர்ந்தது.
    • வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,

    திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் செயல்படுத்தப்பட்ட முத்தான திட்டங்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், கலைஞர் வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை திமுக தலைமை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தங்களால் இழைக்கப்பட்ட சமூக அநீதியை ஒப்புக்கொண்டதன் மூலம் இதுவரை திமுக போட்டு வந்த சமூகநீதி வேடம் கலைந்திருக்கிறது.

    கலைஞர் வழங்கிய 20 விழுக்காடு இடஒதுக்கீட்டால் ஏற்பட்ட பயன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,''தமிழ்நாட்டில் உள்ள வன்னியர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், சீர்மரபினருக்கும் 1989இல் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 1988-1989 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 68 என்பது இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபின் 1989-1990இல் 187 ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 26 என்பது 74 ஆக ஏறத்தாழ மூன்று மடங்கு உயர்ந்தது.

    இதேபோல், பொறியியல் கல்லூரியில் 1988-1989இல் 354 ஆக இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கை 1989-1990இல் 685 ஆக உயர்ந்தது. இவர்களில் வன்னிய மாணவர்களின் எண்ணிக்கை 109 என்பது 292 ஆக ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது" என்று கூறப்பட்டிருகிறது.

    திமுக வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கல்வியில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை அப்பட்டமாக உணர்த்துகின்றன. 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, அந்த இட ஒதுக்கீட்டில் 187 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அப்படியானால், வன்னியர்களுக்கு 10.50% என்றால், குறைந்தது 98 மருத்துவ இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 74 இடங்கள் மட்டும் தான் கிடைத்துள்ளன. இது வெறும் 7.91% மட்டும் தான்.

    அதேபோல், பொறியியல் மாணவர் சேர்க்கையில், 20% இட ஒதுக்கீட்டின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 685 இடங்கள் கிடைத்தன் என்றால், வன்னியர்களுக்கு 10.50% என்றால் 360 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் வன்னியர் மாணவர்களுக்கு கிடைத்துள்ள இடங்களின் எண்ணிக்கை வெறும் 292 தான். இது 8.52% மட்டும் தான்.

    இதன் மூலம் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை என்பதையும், வன்னியர்களுக்கு 10.50% க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைப்பதாக சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள் கூறியது அப்பட்டமான பொய் என்பதையும் திமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளது.

    திமுக வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் 1989-90 ஆம் ஆண்டுக்கானவை. அந்த ஆண்டிலேயே வன்னிய மாணவர்களுக்கு 8% என்ற அளவில் தான் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில், திமுக அரசு மேற்கொண்ட சமூக அநீதி நடவடிக்கைகள் காரணமாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பெயரில் சாதி சான்றிதழைப் பெற்று 20% இட ஒதுக்கீட்டை சூறையாடினர். அதனால் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.

    இப்படியாக வன்னிய மக்களுக்கு தொடர்ந்து சமூக அநீதி இழைத்து வரும் திமுகவுக்கு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வன்னிய மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

    • சாதாரண மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவது தான் அந்த அதிர்ச்சி வைத்தியம் ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்ட, அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு கொண்ட சி.அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    விக்கிரவாண்டி என்பது சமூக நீதிக்காக தியாகம் செய்த மண். அது வாக்குகளை விற்கிற வாண்டி அல்ல என்பதை அத்தொகுதி மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு எத்தகையதாக இருக்கும் என்பதற்கு திமுக அலுவலகங்களில் திருப்பி வீசப்படும் பொருள்கள் தான் சான்று ஆகும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதற்கு ஆயிரம் காரணங்களை என்னால் பட்டியலிட முடியும். அவற்றில் சிலவற்றை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன்.

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறியது. சாதாரண மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்தாதது. நியாய விலைக்கடைகளில் மக்களின் அடிப்படைத் தேவையான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்க முடியாத அவல நிலையை ஏற்படுத்தியது.

    தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது. தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கான சட்டத்தை கொண்டு வராதது, தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளை வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்ப்பது, அரசு பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மறுப்பது என்று தி.மு.க. அரசின் வேதனைப் பட்டியல் இன்னும் நீண்டது ஆகும். தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவது தான் அந்த அதிர்ச்சி வைத்தியம் ஆகும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கும் தோல்வி தான் அதன் அகங்காரத்தையும், மக்கள் விரோத மனநிலையையும், சமூக அநீதி மனப்பான்மையையும் தகர்க்கும்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி, சமூக நீதியின் வெற்றி.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

    • ஒன்றிய பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார்.
    • தி.மு.க. எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி இன்று காலை தும்பூர் பகுதியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    நேற்று மாலையிலிருந்து விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறேன். உதயசூரியன் வாக்கு பெட்டியில் எப்படி முதல் இடத்தில் இருக்கிறதோ, அதேபோல வாக்கு எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தலின்போது முதல்-அமைச்சர் 40 பாராளுமன்ற தொகுதிக்குச் சென்று வாக்கு கேட்டு பா.ஜ.க.வை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், அடிமை அதிமுகவையும் ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும், இந்திய கூட்டணி ஜெயிக்க வேண்டும் என பிரசாரம் செய்தவர்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    ஒன்றிய பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார். நீங்கள் ஆயிரம் முறை வந்தாலும் சரி தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு அந்த இடத்தை தர மாட்டார்கள். அன்னியூர் சிவாவை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தி.மு.க. எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள். 3 ஆண்டு முன்பு தி.மு.க. ஆட்சி அமைந்தால் பெட்ரோல் விலை குறைப்பேன் என முதல்-அமைச்சர் தெரிவித்தார், ஆட்சி அமைந்த உடன் பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தார். பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் 3 லட்சம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுவருகின்றனர்.

    இன்றைக்கு அனைத்து வட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். 7 வருடத்திற்கு முன்பு இந்த நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியது தி.மு.க. தான். இன்று வட மாநில தலைவர்கள் புரிந்து கொண்டு தற்போது நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர்.

    நீட் தேர்வு நடத்தும் கட்சியான பா.ஜ.க.வுடன் சேர்ந்து பா.ம.க. தேர்தல் கூட்டணி அமைத்திருக்கிறது எனவே அவர்களை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக-வை பார்த்து மட்டும் பயமில்லை.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டிக்கு திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

    * விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    * விடியல் பயணம் மூலம் பெண்கள் மாதம் ரூ.1000 சேமித்து வருகின்றனர்.

    * புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

    * காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    * மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.16 கோடி பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * வருகிற ஜூலை 10-ந்தேதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களித்து, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    * நமது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர் தோல்வி பயத்தால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

    * எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக-வை பார்த்து மட்டும் பயமில்லை. மக்களை பார்த்தே பயம். அதனால் தான் தேர்தலையே புறக்கணித்து விட்டார்.

    * பாஜக-வை பார்த்தும் பயம். அதனால் அவர்களுக்கு வழிவிட்டு போட்டியிடவில்லை என்று கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • பா.ம.க. , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம..க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா கூட்டணி தலைவர்களும் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.

    கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

    பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மாலை அய்யூர்அகரம், தென்னமாதேவி, திருவாமாத்தூர், சோழகனூர், கொசப்பாளையம், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

    தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

    இதனால் வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று (திங்கட்கிழமை) தும்பூர், நேமூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் பிரசாரத்தை முடிக்கிறார்.

    இதேபோல பா.ம.க. , நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

    இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.

    தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

    • சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி அளிக்கப்படுகிறது.
    • பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் ஆகிய வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி 8-ந் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.

    அதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ், குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான சாதனம் மூலமாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. பொதுமக்களை ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையிடுதல் மற்றும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்து, அதன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

    இந்த கட்டுப்பாடுகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8-ந் தேதியன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? என்பதை கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வாகன அனுமதிகள் 8-ந் தேதி மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

    சட்டமன்ற தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும், வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, வேட்பாளரின் சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் ஆகிய வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

    வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச்செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். 2 பேரை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
    • அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே அந்த தொகுதிக்கு 10-ம் தேதியன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அந்த தொகுதிக்குள் உள்ள அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.

    மேலும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதியாக, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 10-ம் தேதியன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×