search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikrawandi byelection"

    • நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர்.
    • மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சி சமரசம் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின் புலமும் இல்லாமல் போராடி வருகிறது. நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர். தேர்தல் களத்தை வைத்து தெளிவு பெற வேண்டும். இந்தியம் என்பது இந்தியை திணிக்கும், திராவிடம் அதை ஆதரிக்கும். அதனால் நாம் தமிழர் தமிழ் தேசியம் பேசுகிறது.

    தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. திராவிடம் தமிழர்களை பிரிக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது. மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை. இதை கேட்கும் தைரியம் திராவிடத்துக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் பல்வேறு கருத்தியல் முரண்பாடு உள்ளது. தமிழ்மொழி, பாராளுமன்ற கட்டிடத்தில் இல்லை. அது குறித்தும் தி.மு.க. பேசவில்லை. திராவிடம், தேர்தலின் போது பணத்தை முன்நிறுத்தும். ஆனால் தமிழ் தேசியம் மானத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தும்.

    சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க. மாநில உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து விட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடபங்கீடு தான் கேட்கிறோம். இதை மாநில அரசு செய்யலாம் என உரிமை உள்ளபோது, மத்திய அரசிடம் இந்த உரிமையை திராவிடம் அடமானம் வைக்கிறது. அரசியல் மாற்றம் இலவசங்களை அளித்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ள தி.மு.க.வுக்கு முடிவு கட்ட வேண்டும்.

    நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. ஆனால் இத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள், இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகர் கூறியிருப்பதாவது:-


    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    இன்று ஒருவர் கூட வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர் அறிவித்துள்ளார்.

    வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெற உள்ளது.

    • 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
    • நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகம் முன் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் தான் இங்கு போட்டி , தீய திராவிடத்திற்கு தூய தமிழ் தேசியத்திற்கும் தான் இங்கு போட்டி . நாங்கள் தேர்தலுக்கு வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. எவருக்கும் சமரசம் செய்ததில்லை நோட்டுக்கும் சீட்டுக்கும் பேரம் நடந்தது போனதில்லை. ஆனால் நாங்கள் 2000 முறை சிந்தித்து செயலாற்றி கொண்டு வருகிறோம். இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் 2026 தேர்தலில் அபிநயா தான் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார்.

    ஊழல் கூட்டத்தில் ஒருத்தரை அனுப்புவதை விட ஊழலை அழிக்க போராடும் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன். சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது சரியானஅரசா? குடும்ப தலைவிக்கு ஆயிரம் ஆனால் குடித்து இறந்தால் 10 லட்சம் வழங்கிகிறது. 38 லட்சம் தாலி அறுந்த இளம் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது கனிமொழி விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார்.

    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு மோடி, ராகுலின் பதில் என்ன? சாதி பார்த்து யாரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். நம்முடைய ஒட்டுமொத்த எதிரி தி.மு.க.வை வீழ்த்த நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார்.
    • போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 6 மணி அளவில் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் முதியவர் ஒருவர் கோஷமிட்டபடி விறுவிறுவென ஏறினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மின் கோபுரத்தில் ஏறியவர் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் என்பது தெரிய வந்தது.

    சமூக ஆர்வலரான இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை மாலையாக அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

    இதைத் தொடர்ந்து ஊர் திரும்பிய ராஜேந்திரன் இன்று காலை அளவில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ், தாசில்தார் விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மின் கோபுரத்தில் ஏறி ராஜேந்திரனை குண்டுக்கட்டாக தூக்கி கீழே இறக்கி கொண்டுவந்தனர். முன்னதாக அந்த பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த போராட்டம் காரணமாக எம்.ஜி.ஆர். சிலை சிக்னல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
    • அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் தொண்டர்களுடன் சென்று வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சேர்ந்து தொகுதியில் முழுவதும் வேட்பாளர்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விக்கிரவாண்டியில் நேற்று தி.மு.க.வினர் நூதனப் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் தி.மு.க. பேச்சாளர் சேலம் கோவிந்தன் அகத்தியர் வேடம் அணிந்து அரிச்சுவடி, கமண்டலத்துடன், காட்சி அளித்து விக்கிரவாண்டியில் வீதி, வீதியாக சென்று பாட்டுப்பாடினார். அகத்தியர் வாக்கு பொய்க்காது, பலிக்கும் எனக்கூறிய இவர், முதலமைச்சரின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார்.

    நூதன முறையில் அகத்தியர் வேடமணிந்து பிரசாரம் செய்வதை அப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் வியப்போடு பார்த்தனர்.

    • அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.
    • இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்த காரணத்தால் அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகளும் பா.ம.க. கூட்டணியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளும் வாங்கி இருந்தனர். சுமார் 9 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருந்தார்.

    தற்போது இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் அக்கட்சி வாக்குகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்த படியாக ஆதி திராவிடர் வாக்குகளும், முதலியார், உடையார் வாக்குகளும் உள்ளன. அதன் காரணமாக வன்னியர்களை ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும், பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

    இதனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், அமைச்சர் பொன்முடி ஆகியோர் தலைமையில் 9 அமைச்சர்களை தேர்தல் பணிக்குழுவில் அறிவித்து அதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விக்கிரவாண்டியில் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த ஒன்றியத்தை பார்க்க வேண்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

    கானை மத்திய ஒன்றியம்-அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கானை வடக்கு ஒன்றியம்-சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியம்-தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம்-சிவசங்கர், விக்கிரவாண்டி பேரூர்-சி.வி.கணேசன், கானை தெற்கு ஒன்றியத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 9 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூலம் 2 லட்சம் ஓட்டுகளுக்கு தி.மு.க.வில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த 9 அமைச்சர்களின் கீழ் மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற பஞ்சாயத்துகள், ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு ஊராட்சி பூத் வாரியாக ஓட்டுகள் திரட்டுவதற்கு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் 7 ஊராட்சிகளில் 11 பூத்தில் உள்ள 8,942 ஓட்டுகளை கவனிக்க வேண்டும்.

    அமைச்சர் பெரிய கருப்பன் 2 ஊராட்சிகளில் 5 பூத்தில் 4,310 வாக்குகளையும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 ஊராட்சிகளில் உள்ள 3,694 வாக்குகளையும் பார்க்க வேண்டும்.

    அமைச்சர் பி.மூர்த்திக்கு 3,700 ஓட்டுகளும், செஞ்சி மஸ்தானுக்கு 5,805 ஓட்டுகளும் கொடுக்கப்பட்டு உள்ளன.

    இதே போல் ஒவ்வொரு அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டச் செயலாளர்களுக்கும் 'பூத்' வாரியாக பணியாற்ற ஒட்டுகள் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கி பணியாற்றுவதற்காக விக்கிரவாண்டி விழுப்புரத்தில் ஒவ்வொருவருக்கும் வாடகை வீடு பார்க்கும் படலமும் தொடங்கி உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி வரை தங்குவதற்கு ரூ.1 லட்சம் வரை வாடகை கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஆனாலும் வசதியான வீடு கிடைப்பதில் சிரமம் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    எப்படியானாலும் நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவதற்குள் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தர வேண்டும் என்று உதவியாளர்களுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதனால் விக்கிரவாண்டி-விழுப்புரம் பகுதிகளில் வாடகை வீடு தேடி கொடுக்கும் புரோக்கர்களுக்கு தேவை, மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

    • பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது.
    • கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கள் கடந்த 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் சி. அண்புமணி போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியானது. இத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்தது.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி. விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியில் வந்த பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அப்போது, அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடது. அந்த நேரத்திலேயே 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

    தற்போது, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகின்றது. இவர்களுடன் அ.தி.மு.க. இல்லை. எனவே, தி.மு.க. வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜீலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மதியம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் உள்ள ஏறி நின்று ஒரு விரல் உயர்த்தி செல்பி எடுத்துக்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தனி தாசில்தார் ஜெயலட்சுமி, விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள்.
    • சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் காணை அடுத்த கொசப்பாளையத்தில் நடந்தது. தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைச்சருமான பொன்முடி தலைமை தாங்கி வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    இந்த இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள். காரணம் மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ளனர்.

    இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. அவர்களை பற்றி நமக்கு கவலையில்லை. அ.திமு.க.வினர் ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக இம்முறை தி.மு.க.,விற்கு தான் வரும்.

    சமூக நீதி பற்றி பேசும் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ், இத்தேர்தலில் பா.ஜ.க, வுடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி வாரி கணக்கு எடுப்பு பற்றி பேசும் ராமதாஸ், அதை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்பது தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறார்.

    சமூக நீதி பற்றி பேச தி.மு.க.,விற்கு தான் தகுதி உண்டு, காரணம் ஜாதி, மதம் பார்த்து தி.மு.க., எதையும் செய்வதில்லை. சமூக நீதி பற்றி பேசும் ராமதாஸ், அதைப்பற்றி மோடியிடம் தான் பேச வேண்டும்.

    தி.மு.க., மாதிரி தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிற கட்சிகள் ஏதுவும் கிடையாது. சமூக நீதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராக வாய்ப்பளித்தார்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

    • பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், "நேர்மையுடனும், பாரபட்சமின்றியும் வாகன சோதனை நடத்துங்கள்" என்று தேர்தல் பறக்கும் படைக்கு உத்தரவிட்டார்.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும், தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி ஆய்வு செய்தார். அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாகன சோதனையின்போது நேர்மையுடனும், கணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அதேநேரத்தில் எந்தவித பாரபட்சமும் பாராமல் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளும்படியும், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் பறக்கும் படையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.
    • தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    விக்கிராவண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 10-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். ஆனால் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கபடவில்லை.

    இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 21-ந் தேதி நடக்கிறது.

    வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதை தொடர்ந்து 11.10 மணிக்கு அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார் சுயேட்சையாக போட்டியிட ரூபாய் நோட்டு மாலை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.


    பின்னர் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை ரூ.10 ஆயிரத்தை சில்லரை காசுகளை மூட்டையாக கொண்டு வந்து தேர்தல் அலுவலரிடம் வழங்கினார். அதற்கு அடுத்தபடியாக தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    மேலும் நூர் முகமது, ராஜேந்திரன் ஆகியோரும் சுயேட்சையாக போட்டியிட தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    • தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது.

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடந்தது. அடுத்த 6 கட்ட தேர்தல் பல்வேறு கட்டங்களாக மற்ற மாநிலங்களில் நடந்தது. இதனால் 7-வது கட்டமாக இறுதி கட்ட தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.


    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10- ந் தேதி (அடுத்த மாதம்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜூன் 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அட்டவணை வெளியிட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 26-ந் தேதி (புதன்கிழமை) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 10-ந் தேதி வாக்குப்பதிவு என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜூலை 15-ந் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த முறை மீண்டும் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 தேர்தலின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நின்ற முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றார். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் அய்யனார் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.


    அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா இணைந்திருந்தது. ஆனால் இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பா.ம.க. நீடித்து தேர்தலை சந்தித்தது.

    இந்த கூட்டணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. போட்டியிடுவது தற்போது உறுதியாகி உள்ளது. இதில் தி.மு.க. நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று அறிவித்துள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனவே பா.ம.க.வும் இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்க உள்ளது. எனவே விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி தேர்தலோடு சேர்த்து 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிக்கும், இமாச்சலப்பிரதேசம்-3, உத்தரகாண்ட்-2, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது.

    ×