search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aan Devathai Review"

    தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் விமர்சனம். #AanDevathaiReview #Samuthirakani
    சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ரம்யா, அதற்கான முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், ரம்யாவுக்கு ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்கிறது. சமுத்திரக்கனி மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கிறார். இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போகிறது.

    இதையடுத்து சமுத்திரக்கனி தனது வேலையை விட்டு குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். ரம்யா தனது பணியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சொந்தமாக வீடு, கார் வாங்கும் அளவிற்கு உயர்கிறார். அடுத்தடுத்த கட்டத்திற்கு மேலே செல்ல செல்ல, தனது நட்பு வட்டாரத்துடன் பார்ட்டிக்கு செல்ல தொடங்குகிறார்.



    ஒருநாள் பார்ட்டிக்கு சென்று மது அருந்திவிட்டு வரும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையே கடுமையாக சண்டை வருகிறது. இதனால் சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறி விடுதி ஒன்றில் தங்குகிறார். அவருடன் அவரது மகள் பேபி மோனிகாவும் உடன் செல்கிறாள். 

    கடைசியில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்தார்களா? அவர்களது குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    சமுத்திரக்கனிக்கு என்ன வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே மாறிவிடுகிறார். மனைவியிடம் பொறுமை, குழந்தைகளிடம் கனிவு என்று வழக்கம் போலவே பொறுப்பான நடிப்பால் தனது கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறார். ரம்யா பாண்டியனுக்கு சற்று நெகட்டிவ் கலந்த வேடம். சராசரி பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார்.

    சுஜா வருணி, அபிஷேக், ராதாரவி, காளி வெங்கட், ஹரிஷ் பெரடி, அறந்தாங்கி நிஷா, அனுபமா குமார் அனைவருக்குமே பொருத்தமான கதாபாத்திரங்கள். குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா, கவின் இருவரும் சிறப்பான பங்களிப்பு தந்திருக்கிறார்கள். 



    இன்றைய இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தாமிரா. தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் சண்டையால் சிலர் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பாடமாக இந்த படம் இருக்கும். ஆடம்பரத்துக்குள் மாட்டிக்கொள்ளாமல், சாதாரண வாழ்க்கையையே மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று சொல்ல வருகிறார் இயக்குநர்.

    திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் எளிதில் காட்சிகளை கணிக்க முடிவது பலவீனம். திரைக்கதை மெதுவாக நகர்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்ற சுவாரசியமான ஒருவரிக் கதைக்கு இன்னும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இருந்தால் ஆண் தேவதையை இன்னும் கொண்டாடி இருக்கலாம். குடும்ப அமைப்பின் அவசியத்தை உணர்த்தியதற்காக ஆண் தேவதையை பாராட்டலாம்.

    ஜிப்ரானின் இசையும், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஆண் தேவதை' தேவை. #AanDevathaiReview #Samuthirakani

    ×