என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"
- நரசிம்மருக்கு மூன்று கண்கள் அமைந்துள்ளன.
- அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.
கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் வழிபாடு சகல நன்மைகளையும் வழங்க வல்லது என்பது சமயச் சான்றோர்களின் கருத்து. அதுவும் யோக கோலத்தில் உள்ள நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது பன்மடங்கு சிறப்பு வாய்ந்தது.
யோக கோலத்துடன் அதுவும் லட்சுமியுடன் சுமார் 16 அடி உயரத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி கட்டவாக்கம் என்னுமிடத்தில் ஆலயம் கொண்டுள்ளார். தாம்பரம் - வாலாஜாபாத் சாலையில் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில் உள்ளது இவ்வாலயம். ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி அபய வரத ஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மகாலக்ஷ்மியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு மூன்று கண்கள் அமைந்துள்ளன. அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.
மடியில் வீற்றிருக்கும் தாயார், தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சவுந்தர்யமான கோலத்தில் அருள்கிறார்.
மேலும் நரசிம்மருக்கு 12 பற்கள் அமைந்துள்ளன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் - ஆக நவகிரகங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கியிருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும, வஜ்ரதம்ஷ்ட்ரம் வராஹ அவதாரத்தையும், வில் - அம்பு பரசுராம, ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ணாவதாரத்தையும் நினைவுபடுத்துகின்றன.
மேலும் ஜய - விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் செய்ய பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் யாவற்றையும் இந்த நரசிம்மரே தாங்கியிருப்பது விசேஷம்.
- ஸ்ரீ நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
- திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் என பெயர் பெற்றதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைணவத் திவ்ய தேசங்கள் 108ல் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது சோளிங்கபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில். இத்தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது. இங்கு உறையும் எம்பெருமானை ஆழ்வார்கள் மூவர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
சோளிங்கபுரத்தின் புராணப் பெயர் கடிகாசலம். இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர். ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்தும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்தும் 27 கி.மீ. தொலைவில் சோளிங்கர் அமைந்துள்ளது.
சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் மூன்று தனிப்பெரும் சன்னதிகளை கொண்டு விளங்குகிறது.
1. திருமலை (பெரியமலை) : அருள்மிகு அமிர்தபலவல்லித் தாயார் உடனுறை அருள்மிகு யோக நரசிம்மசுவாமி எழுந்தருளியுள்ள மலைக்கோயில்.
2. சிறிய மலை (கடிகாசலம்) : அருள்மிகு யோக ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். மேற்படி இரண்டு மலைக்கோயில்களும் நகரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது.
3. ஊர் திருக்கோயில் : அருள்மிகு பக்தோசித பெருமாள், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆகிய எம்பெருமான்கள் ஊரிலேயே எழுந்தருளியுள்ளனர். இக்கோயில் சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. உற்சவருக்கென்று (அருள்மிகு பக்தோசிதசுவாமி) தனிக்கோயில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இங்குதான் முக்கிய திருவிழாக்கள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழா ஆகியன நடைபெறுகிறது.
தலச் சிறப்பு :
இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தொண்டை நாட்டு வைணவ திருப்பதிகள் 22-ல் ஒன்றாகவும், பிரார்த்தனை திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. ஸ்ரீ நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
ஏழு மாமுனிவர்களான வாமதேவர், வசிஷ்ட, கத்யபர், அத்திரி, ஜமதக்னி, கௌதமர், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனைத் தொழ எம்பெருமான், ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி, முனிவர்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு கடிகை (நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் என பெயர் பெற்றதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும்.
- பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு.
திருவோண விழாவின் நாயகனும், பிரகலாதனின் பக்திக்குள் கட்டுண்டவனும், இரணியனை வதம் செய்தவனுமாகிய ஸ்ரீ நரசிம்மரே மனிதர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுள் ஆவார். பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு.
பரமகாருணிகனான சர்வேச்வரன் அவதரிக்கும் போதே, பக்தனுக்குத் தீங்கு விளைவிக்கத் தொடங்கிய கொடியவகை சம்கரித்து இந்த ஒரு அவதாரத்திலே தான்.
ஆகையால் பக்தர்களின் இன்னல் இடையூறுகளைக் களைத்தெறிந்து காக்க வேண்டிய நிலையில் தனக்குள்ள பாரிப்பையும் பரபரப்பையும் உலகுக்கு நன்கு வெளிப்படுத்திய அவதாரம் நரசிங்க அவதாரம். எனவே ஆபத்தும் அவசரத் தேவையுமான வேளைகளில் இரணியனை வணங்கினால் அவன் நம்மைக் காப்பது நிச்சயம்!
நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான்.
இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை இங்கிதமாய் போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.
- மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும்
நரசிம்மருக்கு மிகவும் பிடித்த நைவேந்தியங்களில் பானகமும் ஒன்று. அந்த பானகத்தை எப்படி தயாரிப்பது என்று தெரியுமா?
தேவையான பொருள்கள்:
வெல்லம்-250 கிராம்
தண்ணீர்-4 கப்
ஏலப்பொடி-2 சிட்டிகை
சுக்கு-1 சிட்டிகை
எலுமிச்சம் பழம்-1
செய்முறை:
வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும். ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும். இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும். இரண்டு மூன்று ஐஸ் க்யூப் சேர்த்துக்கொண்டால் சுவையாக இருக்கும்.
பானக நரசிம்ம ஸ்வாமி ஆலயம்:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருக்கிறது மங்களகிரி. இங்கு மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
சுயம்புவான நரசிம்மரின் திருமார்பு வரை மட்டுமே தரிசனம் கிடைக்கும். மீதிப் பாகம் பூமியினடியில் இருப்பதாக ஐதீகம்.
வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும் (கல்கண்டு அல்லது வெல்லப்)பானகத்தை வாங்கிக் கொடுக்கலாம்.
எத்தனை பானகம் கொண்டு சென்றாலும் எடுத்துச் செல்வதில் பாதியை மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், 'கடக்' என்ற விழுங்கும் சப்தத்தைக் கேட்கமுடிவதாகவும், பாதிக்கு மேல் மீதி ஏற்றுக்கொள்ளப் படாமல் வழிந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்.
மீதியை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி, மிளகு போன்றவையும் இந்தப் பானகத்தில் சேர்க்கப்படுகின்றன என்றாலும் ஒரு எறும்பைக் கூட அருகே பார்க்க முடியாது.
- விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
- நரசிம்மர் தவம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீக்கிக் கொண்டதால் இது சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.
காவிரிக்கு தென் கரையில் உள்ள நரசிங்கம்பேட்டையில் நரசிம்மர், யோக நரசிம்மராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இக்கோவில், விஜயநகர பேரரசால் சீரமைக்கப்பட்ட தலம். விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
சங்கு சக்கரம் இரண்டு கைகளில் உள்ளன. மற்ற இரு கைகள் யோக முத்திரையைக் காட்டுகின்றன. பெருமான் சாந்த சொரூபியாக அடியார்களின் துயர் தீர்க்கும் காருண்ய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.இரண்ய வதத்துக்குப் பிறகு நரசிம்மரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதைப் போக்க இத்தலத்தில் உள்ள சுயம்புநாத சுவாமி உதவினார். நரசிம்மர் தவம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீக்கிக் கொண்டதால் இது சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.
- மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியன்று மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். படமும் வைத்துக் கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் சிலையை வைக்க வேண்டும்.
விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும். விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் ஒரு வேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். அன்று மாலையில் சந்திரனை பார்த்தால் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.
சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வாங்கி, வீட்டில் வைத்து வழிபட நல்ல நேரம் பார்த்து செய்வது நல்லது.
பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மொழுகி கோலமிட்டு அழகுப்படுத்த வேண்டும். கோலம் போடும் போது புள்ளிக் கோலம், பின்னல் கோலம் இன்றி பூக்கோலம் போடுவது நல்லது. மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும். பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.
அருகில் 5 முக குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். 5 வகை பூக்கள், 5 வகை நறுமணப்பொருட்கள், 5 வகை பழங்கள் படைக்க வேண்டும். அத்துடன் அவல், பொரி, கடலை கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல், தாம்பூலம் ஆகியவற்றை வைத்து தீபம்காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட வரமும் கிடைக்கும். வளமும் பெருகும்.
விஷ்ணு தாம் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக சில ஆயுதங்களைப் பெற்றார். அதில் ஒன்று சக்ராயுதம்.
அவர் அச்சக்கரத்தை ஒரு போரில் ததீசி என்ற முனிவர் மேல் ஏவ அது சக்தி இழந்து திரும்பி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.
அப்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம் திருநாமங்களாகிய `சஹஸ்ர நாமம்' கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார்.
மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொருசமயம் ஜலந்தராசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சுதர்சனம் எனும் சக்கரப்படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார். விஷ்ணுவின் கையில் இருந்த சுதர்சனக் சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக் கொண்டார்.
அதனைக் கண்டு அதிர்ந்த விஷ்ணு, தாம் விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்தார்.
அவரை வணங்கி தமது நான்கு திருக்கரங்களாலும் இருகாதுகளையும் பற்றிக் கொண்டு பலமுறை உட்கார்ந்து எழுந்து தோர்பி, கர்ணம் இட்டார். இந்த செயல் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருந்தததால் விநாயகர் தம் கோபம் மறந்து விழுந்து விழுந்து சிரித்தார்.
அப்போது அவர் வாயில் இருந்த சுதர்சன சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப்பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. (இந்த கணபதி விகடச்சக்கர விநாயகர் என போற்றப்படுகிறார்) இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள் புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.
விநாயகர் சிலை முன்பு நின்று தலையில்குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியமா?
விநாயகர் முன்தோப்புக்கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும்.
அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி வரும்போது குடகுமலையில் சிவ பூஜைசெய்து கொண்டு இருந்தார்.
அப்போது இந்திரன், சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனை பார்த்து, அகத்தியருடைய கமண்டலத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார்.
இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தை கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழுந்தது. காவிரி பெருக்கெடுத்து ஓடியது.
அகத்தியர் காகத்தின் மீது சீறிப்பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு சுரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.
அகத்தியர் அச்சிறுவனை அணுகி குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார்.
அகத்தியர் திகைத்து போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்காக கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி இன்று முதல் என முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள், என்று அருளினார்.
இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.
விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் என்ற நூல் கூறுகிறது.
இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.
கஜானன விநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்கிரன ராஜர்: காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.
மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச் சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.
உபமயூரேசர்: சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்த போது அவனை அழித்தவர்.
சிந்தாமணி: கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.
கணேசர்: பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்
கணபதி: கஜமுகாசுரனை வென்றவர்.
மகோற்கடர்: காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.
துண்டி: துராசதன் என்ற அசுரனை வென்றவர்.
வல்லப விநாயகர்: மரீச முனிவரின் மகளான வல்லபயை திருமணம் செய்தவர்.
- சென்னையில் இருந்து சித்தூர் செல்ல பல வழிகள் உள்ளன.
- திருத்தணி கோவில் வழியாக சென்று வருவது மிகவும் எளிதானது.
காணிப்பாக்கம் திருத்தலம் ஆந்திரா மாநிலம் சித்தூர் நகரின் அருகே 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. சித்தூர் வரை போய் வரவேண்டுமா என்றதும் நிறைய பேர் மனதில் 2 நாள் ஆகுமோ என்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடும்.
ஆனால் காணிப்பாக்கம் சுயம்பு விநாயகரை தரிசனம் செய்ய உங்கள் பயணத்தை திட்டமிட்டு அமைத்துக் கொண்டால் காலையில் புறப்பட்டு சென்று வழிபாடுகளை முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பி விடலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்ட மக்கள் காணிப்பாக்கம் செல்ல, எந்த வழியில் சென்று, வருவது என்பதை தெளிவாக தேர்வு செய்து கொள்வது முக்கியமாகும்.
சென்னையில் இருந்து சித்தூர் செல்ல பல வழிகள் உள்ளன. அவற்றில் திருத்தணி கோவில் வழியாக சென்று வருவது மிகவும் எளிதானதாக கருதப்படுகிறது. சரியான வழிகாட்டுதலில் சென்றால் 3 மணி நேரத்தில் சென்று சேர்ந்து விட முடியும்.
சித்தூரில் இருந்து காணிப்பாக்கம் செல்லும் போது முக்கிய சாலையில் இருந்து வலது பக்கம் திரும்ப வேண்டும். அதில் வழிகாட்டி வேண்டு வைத்துள்ளனர்.
காணிப்பாக்கம் ஊர் எல்லையைத் தொட்டதுமே பிரமாண்ட அலங்கார வளைவு உங்களை வரவேற்கும். அதற்குள் நுழைத்து சென்றால் காரிலேயே கோவில் அருகில், மிக அருகில் சென்று விடலாம்.
சுயம்பு விநாயகரை தரிசனம் செய்த பிறகு, அங்கு நீங்கள் பிரகாரங்களில் சுற்ற வேண்டியதில்லை. இருப்பதே ஒரு பிரகாரம் தான் என்பதால் அடுத்த சில நிமிடங்களில் கோவிலை விட்டு வெளியில் வந்து விடலாம்.
சாமி படங்கள் ஏதாவது வாங்க வேண்டுமானால், அருகில் ஷாப்பிங் செய்ய வரிசையாக கடைகள் உள்ளது. மனதுக்கு பிடித்திருந்தால் வாங்கலாம்.
சில பக்தர்கள் காணிப்பாக்கத்தில் தங்கி இருந்து அதிகாலை சுப்ரபாதம் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவார்கள். அத்தகையவர்களுக்கு உதவ தேவஸ்தானம் சார்பில் வி.ஐ.பி. விடுதிகள் உள்ளன.
காணிப்பாக்கத்தின் பிற இடங்களில் தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். ஆனால் தேவஸ்தானம் விடுதியில் தங்கினால் சுப்ரபாதம் சேவைக்கு அதிகாலை 3.30 மணிக்கே கோவிலுக்கு எளிதாக வந்து சேர வசதியாக இருக்கும்.
காணிப்பாக்கம் பயணத்தைப் பொருத்தவரை உங்களது பயணத் திட்டமே மிகவும் முக்கியமானது அதற்கு ஏற்பவே உங்கள் ஆன்மிகப் பயணம் ஆத்மார்த்தமாகவும் புண்ணியம் சேர்ப்பதாகவும் இருக்கும்.
ஆலய முகவரி:-
சுயம்பு ஸ்ரீவரசித்தி விநாயகா சுவாமி
வாரி தேவஸ்தானம்.
காணிப்பாக்கம்,
இருளா மண்டல்,
சித்தூர் மாவட்டம், ஆந்திரா, பின்கோடு:-517131
- விஜயநகர மன்னர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு நிறைய நன்கொடைகளை வழங்கினார்கள்.
- சுயம்பு விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்கள் குறைகளை எல்லாம் தீர்த்து வைத்தார்.
காணிப்பாக்கம் விநாயகர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டபோது அந்த ஊர் மக்கள் பேரானந்தம் அடைந்தனர். உடனே சுயம்பு இருந்த இடத்தை சுற்றி சிறு குடில் அமைத்து நித்யபூஜை மற்றும் வழிபாடுகளை நடத்தி வந்தனர்.
சுயம்பு விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்கள் குறைகளை எல்லாம் தீர்த்து வைத்தார். பக்தர்கள் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்தார். பக்தர்கள் நினைத்து வந்த காரியங்கள் நடந்தன.
இதனால் சுயம்பு விநாயகர் புகழ் ஆந்திரா முழுவதும் பரவியது. மக்கள் அலை, அலையாக காணிப்பாக்கம் நோக்கி வரத்தொடங்கினார்கள். 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்து வந்த முதலாம் குலோத்துங்கசோழ மன்னனுக்கு இதுபற்றி தெரியவந்தது.
சோழ மன்னர் தன் படைகள் புடைசூழ காணிப்பாக்கம் சென்றார். சுயம்பு விநாயகரை கண்டு தரிசனம் செய்தார்.
அப்போதே அவர் உள்ளத்தில் சுயம்பு விநாயகருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றியது. உடனே சிறு கருவறை அமைப்புடன் கருங்கல்லால் கோவில் எழுப்பினார்.
அந்த ஆலயத்தில் காணிப்பாக்கம் பகுதி மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.
1336-ம் ஆண்டு காணிப்பாக்கம் பகுதி விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாறியது. சுயம்பு விநாயகரை நேரில் வந்து வணங்கிய விஜயநகர மன்னர்கள் அந்த கோவிலுக்கு நிறைய நன்கொடைகளை வழங்கினார்கள்.
அது மட்டுமின்றி சுயம்பு விநாயகர் ஆலயத்தை சீரமைத்து புதுப்பித்தனர். மேலும் காணிப்பாக்கம் கோவிலுக்கு அர்த்தமண்டபம், மகாமண்டபம் கட்டி விரிவுபடுத்தப்பட்டது.
அதன்பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் காணிப்பாக்கம் கோவில் எந்த வளர்ச்சியும் பெறவில்லை. சுயம்பு விநாயகரின் அற்புதங்களையும், அருளையும் கண்டு ஆங்கிலேயர்கள் பிரமித்தனர்.
பூஜை முறைகளுக்கு அவர்கள் பரிபூரண ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால் கோவில் விரிவாக்கம் பணிகளில் அவர்கள் ஆர்வம் செலுத்தவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு காணிப்பாக்கம் விநாயகர் புகழ் நாடெங்கும் நாலாபுறமும் பரவியது. எல்லா திசைகளில் இருந்தும் மக்கள் காணிப்பாக்கம் வரத்தொடங்கினார்கள்.
மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிய பிறகே கடந்த 10 ஆண்டுகளாக விநாயகர் ஆலய விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த விரிவாக்க பணிகளுக்காகவே கோவிலை சுற்றியுள்ள நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் கோவிலுக்கான மேம்பாட்டு பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன.
இதனால் இந்த ஆலயம் தற்போது பிரமாண்டமான ஆலயமாக மாறி வருகிறது. கோவிலை சுற்றிலும் வாகன நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக 100 அடி ரோடு அமைத்துள்ளனர்.
கோவில் பிரதான பாதை தொடங்கும் பகுதியில் சேவா டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. அதை வாங்கி செல்லத் தொடங்கியதும் ஒரு விநாயகரை காணலாம். அங்கு தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள் (இதன் அருகில்தான் கோவில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது).
இதையடுத்து கோவில் எதிரில் உள்ள புனித குளத்துக்கு சென்று புனிதநீர் எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். சில பக்தர்கள் அந்த இடத்தில் நின்று தீபம் ஏற்றி சுயம்பு விநாயகரை வழிபடுகிறார்கள்.
நாம் அதை கடந்து முக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே செல்லாம்.
கொடிமரம், பலிபீடம் உள்ள பகுதிகளுக்கு சென்று வழிபட வேண்டும். அதன் இருபக்கமும் கட்டணத்துக்கு ஏற்ப வழிபாடு 'கியூ'க்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நம் வசதிக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி செல்லலாம். இலவச தர்ம வரிசையும் உண்டு.
கருவறையில் சுயம்பு விநாயகரை நிதானமாக தரிசனம் செய்யலாம். வேகமாக செல்லுங்கள் என்று ஊழியர்கள் குரல் கொடுப்பார்களே தவிர யாரும் உங்கள் கையைப்பிடித்து இழுத்து வெளியில் விடமாட்டார்கள். எனவே சுயம்பு விநாயகரை கண்குளிர கண்டு தரிசனம் செய்யலாம்.
மகாமண்டபத்துக்குள் வரிசையில் செல்லும் போதே சுயம்பு விநாயகர் நம் கண்களுக்கு காட்சி கொடுத்து விடுவார். எனவே கவலைகள் தீர அவரை நேரில் தரிசனம் செய்தபடி வேண்டலாம்.
சுயம்பு தோன்றிய இடத்தை சுற்றி தற்போதும் பள்ளம் இருப்பதையும் எனவே சுயம்பு விநாயகரை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதையும் உன்னிப்பாக பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
சுயம்பு விநாயகரை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் வழியிலேயே ரூ.50 மற்றும் ரூ.100-க்கு லட்டு பிரசாதம் கொடுக்கிறார்கள். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இதையடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்துவழிபாடு செய்யலாம். ஒரே பிரகாரம்தான். பிரகாரத்தில் கண்ணாடி மண்டப அரங்கில் சித்தி-புத்தியுடன் உற்சவர் கணபதி உள்ளார். இந்த கண்ணாடி மண்டபத்தை நடிகர் மோகன்பாபு கட்டிக் கொடுத்துள்ளார்.
அந்த கண்ணாடி மண்டபம் பின்புறம் வில்வமரம் உள்ளது. அந்த மரத்தடியில் நாகம்மன் உள்ளார். அவரை சுற்றி ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன.
பிரகாரத்தில் ஐம்பொன் விநாயகர் சிலைகள் ஒரு தனி சன்னதியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இடதுபக்கம் வீரஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. வலது பக்கம் நவக்கிரக சன்னதி உள்ளது. வேறு எந்த சன்னதியும் கிடையாது. மொத்தமே 4 இடத்தில்தான் வழிபாடு நடப்பதால் சில நிமிடங்களில் தரிசனம் செய்து முடித்து விட முடியும்.
ஒரே ஒரு பிரகாரத்தை சுற்றி பிரமாண்டமாக கருங்கற்கலால் சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. மண்டபங்கள் அமைக்க வசதியாக இந்த சுற்றுசுவர் கட்டுப்பட்டுள்ளது. இதுகோவிலை மிகவும் பெரிதாக, பிரமாண்டமாக காட்டுகிறது.
எதிர்காலத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தால், அதை சமாளிக்கும் வகையில் திட்டமிட்டு கட்டிட பணிகள் நடப்பது பாராட்டுக்குரியது.
- அவதார நாயகன் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் இவருக்கென்று தனிச் சிறப்பு உண்டு.
- பிரகலாதனின் நம்பிக்கையை மெய்யாக்க தூணில் இருந்து வெளிவந்தவர்தான் நரசிம்மர்.
சிங்கமுகம், மனித உடல், பார்ப்பதற்கு பயம் காட்டும் கோரைபற்கள் கொண்டவர்தான் நரசிம்மர்.
அவதார நாயகன் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் இவருக்கென்று தனிச் சிறப்பு உண்டு.
எப்போதுமே தெய்வங்கள் ரிஷிகள், ஞானிகள், முனிவர்களின் தவத்திற்கும், பிரார்த்தனைக்குமே தரிசனங்கள் தந்ததாய் புராணங்கள் சொல்கிறது. ஆனால் எந்த வேண்டுகோளும் இல்லாமல், வேண்டுதலும் இல்லாமல், ஒரு சிறுவனுக்காக வந்த அவதாரம்தான் நரசிம்ம அவதாரம்.
ஹிரன்யகசிபுவின் கோபமான கேள்விக்கு பதில் சொன்ன பிரகலாதன், நான் வணங்கும் ஹரி... தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்பிக்கையோடு சொன்னான். அந்த நம்பிக்கையை மெய்யாக்க தூணில் இருந்து வெளிவந்தவர்தான் நரசிம்மர்.
பைரவர், சக்கரத்தாழ்வார் போன்று நரசிம்மரும் பத்தர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறார். இவரை வணங்க எந்த பயமும், தயக்கமும் தேவையில்லை. நம்பிக்கை ஒன்றே பிரதானம்.
பார்ப்பதற்கு பயம் காட்டும் உருவமாக இருந்தாலும் நாடியவர்களுக்கு ஒடிவருபவர் நரசிம்மர்.
சிங்கம் கொடூர குணம் கொண்ட கொடிய விலங்குதான். எந்த விலங்காக இருந்தாலும் பசி வந்தால் கொன்று உண்ணும் குணம் கொண்டதுதான். ஆனால் அந்த கொடிய சிங்கத்தின்னுள்ளும் ஒரு மென்மையான மனம் உண்டு.
தான் ஈன்ற குட்டிகளிடம் கடுமை காட்டுவதில்லை. கொஞ்சி விளையாடும், துள்ளி ஓடி விளையாட்டு காட்டும். அதுபோல்தான் நரசிம்மரும். அரக்கர்களுக்கு கொடியவராக இருந்தாலும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனியவர்.
சரி.... நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மை என்ன?
பில்லி, சூன்யம், செய்வினைக்கோளாறுகள் உங்களை தீண்டாது.
எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும்.
எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்.
பழகிய இடத்திலேயே பாதகம் நினைப்பவர்களை அடியோடு வேரறறுக்கும்.
சிவரூபங்களில் பைரவர் ஆலய பாதுகாப்பிற்கு முக்கியமானவர். கோவிலை பூட்டிய பின் இவரிடம்தான் ஆலய சாவி அளிக்கப்படுவதாய் சொல்லப்படுகிறது.
அதேபோல் கோவிலில் உள்ள விக்ரகங்களை, கும்பாபிஷேக காலங்களில் மருந்து சாற்றுவதற்காக மூலஸ்தானத்தில் இருந்து பெயர்த்து எடுக்க நரசிம்ம மந்திரத்தை ஜெபம் செய்தபிறகே எடுப்பார்கள்.
- ஓம் அழகிய சிம்மனே போற்றி ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
- ஓம் அருள் அபயகரனே போற்றி ஓம் அகோபில நரசிம்மனே போற்றி
ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
ஓம் அரசு அருள்வோனே போற்றி
ஓம் அறக் காவலனே போற்றி
ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
ஓம் அழகிய சிம்மனே போற்றி
ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
ஓம் அருள் அபயகரனே போற்றி
ஓம் அகோபில நரசிம்மனே போற்றி
ஓம் அரவப் புரியோனே போற்றி
ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
ஓம் அகோர ரூபனே போற்றி
ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
ஓம் உக்ர நரசிம்மனே போற்றி
ஓம் உடனே காப்பவனே போற்றி
ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
ஓம் கதலி நரசிம்மனே போற்றி
ஓம் கர்ஜிப்பவனே போற்றி
ஓம் கம்பப் பெருமானே போற்றி
ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
ஓம் கருடாத்ரி நாதனே போற்றி
ஓம் கனககிரி நாதனே போற்றி
ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
ஓம் கோல நரசிம்மனே போற்றி
ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
ஓம் கோர நரசிம்மனே போற்றி
ஓம் சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சர்வாபரணனே போற்றி
ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
ஓம் சாந்த நரசிம்மனே போற்றி
ஓம் சிம்மாசனனே போற்றி
ஓம் சிம்மாசலனே போற்றி
ஓம் சுடர் விழியனே போற்றி
ஓம் சுந்தர சிம்மனே போற்றி
ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி
ஓம் நவ நரசிம்மனே போற்றி
ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி
ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
ஓம் பகையழித்தவனே போற்றி
ஓம் பஞ்ச முகனே போற்றி
ஓம் பத்மாசனனே போற்றி
ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
ஓம் பாவக நரசிம்மனே போற்றி
ஓம் பானக நரசிம்மனே போற்றி
ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி
ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
ஓம் புராண நாயகனே போற்றி
ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
ஓம் மால் அவதாரமே போற்றி
ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மலையன்ன தேகனே போற்றி
ஓம் முக்கிய அவதாரனே போற்றி
ஓம் முப்பத்திரு ளக்ஷத்ரனே போற்றி
ஓம் யோக நரசிம்மனே போற்றி
ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் லோக ரக்ஷகனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வராக நரசிம்மனே போற்றி
ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
ஓம் விசுவரூபனே போற்றி
ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி"
- அன்னையைக் கண்டதும் நரசிம்மரின் உக்கிரம் முழுமையாகத் தீர்ந்தது.
- யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தி அடையும்.
ரோமச முனிவர். வரம் பல பெற்றவர்தான், இருப்பினும் பிள்ளைச் செல்வம் இன்றி வருந்திக் காலம் கழித்தார். அதற்காக அவர் யாகம் செய்யத் தீர்மானித்தார். யாரை நோக்கித் தவம் செய்வது?
அவருக்கு பிரகலாதன் நினைவு வந்தது. பக்தியும் ஞானமும் பெற்ற பிரகலாதனின் உயர்வுக்கு ஸ்ரீநரசிம்மர் காரணமாயிருந்தது போல், தமக்கும் அமைய எண்ணினார்.
சக்ர தீர்த்தத்தில் நீராடினார். அந்த நினைவுகளுடனே நரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானித்தாரே ஒழிய, அவருடைய அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே அவரை தரிசிக்க ஆவல் கொண்டார். தன் வேண்டுதலை சங்கல்பம் செய்து கொண்டு தியானத்தில் இருந்தார்.
அவரது தவத்தின் பலனாக நரசிம்ம மூர்த்தி அங்கே தோன்றினார். ஆனால், உக்ரரூபியாக... அவருடைய உக்கிரம் தாங்காது, உலகமே அவதிப்பட்டது. ரோமச முனிவர் மட்டுமல்ல... தேவரும் முனிவரும் சகலரும் நடுங்கினர்.
இந்த விவரம் ஸ்ரீமகாலட்சுமித் தாயாருக்குச் சென்றது. அனைவரையும் காக்க, ஸ்ரீலட்சுமி அங்கே தோன்றினார். தன் கனிவுப் பார்வையினால் ஸ்ரீநரசிம்மரை அமைதிப் படுத்தினார் தாயார்.
அன்னையைக் கண்டதும் நரசிம்மரின் உக்கிரம் முழுமையாகத் தீர்ந்தது. அன்னையை ஆசையுடன் அருகே அழைத்து ஆலிங்கனம் செய்துகொண்டு, தம்பதியாய் தரிசனம் தந்தார் ஸ்ரீநரசிம்மர். பின்னர் யோகத்தில் அமர்ந்து, யோக நரசிம்மராய்க் காட்சியளித்தார்.
இரு கைகளையும் யோக ஆசனத்தில் அமர்ந்தி, அருகே அன்னை ஸ்ரீலட்சுமியையும் அமர்த்தி அழகுக் கோலம் கொண்டார் ஸ்ரீயோக நரசிம்மர்.
ஸ்ரீநரசிம்மரின் இந்த யோக தரிசனமே மதுரை ஒத்த கடையில் கோயில் எழக் காரணமாயிற்று. இந்தக் கோயிலில், மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மலையை ஒட்டி ஒரு குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீயோகநரசிம்மரின் திருக்கோயில்.
இந்தக் கோயிலில் கொடி மரம் கிடையாது. காரணம் கொடிமரம், கருவறைக்கு மேல் எழும்பும் விமானத்தின் நீள அகல அளவைப் பொறுத்து அமையும். இங்கே கருவறைக்கு மேல் யானை மலை நெடிதுயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கப்படவில்லையாம்.
குடவரைக் கோயிலான இங்கே கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும்கூட குடைவரை அமைப்பில்தான் உள்ளது. கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசி பெஜர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதற்காகவே இத்தலத்தின் அருகே அமைந்துள்ள திருமோகூரிலிருந்து காளமேகப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார்.
மேலும், இந்த மலையில் திருவண்ணாமலையைப் போல் பெளர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. தேவலோகத் தலைவனான இந்திரனே யானை வடிவில் மலையாகப் படுத்திருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே இந்த மலையும் புனிதமாகக் கருதப்படுகிறது.
இங்கே யோக நரசிம்ம மூர்த்தி, ஆறடி உயர கருவறையில், கருவறை முழுவதுமாக நிரம்பியபடி, இரு கைகளையும் யோக ஆசனத்தில் வைத்து, அமர்ந்த கோலத்தில், வலது கையில் சக்கரத்துடனும் பிரமாண்டமான உருவில் அருள்பாலிக்கிறார்.
கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அடர்ந்த காடாக இருந்தது இப்பகுதி. இதனை மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி என்பவர் செப்பனிட்டு கோயில் திருப்பணி தொடங்கினார். அவருக்குப் பின் அவரது தம்பி மாறன் எயினர் என்பவர் கி.பி.770இல் கோயிலை முழுதாக்கி குடமுழுக்கிட்டதாக இங்குள்ள கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது. அண்மைக் காலத்தில் மீண்டும் செப்பனிட்டு கோயில் அழகுறக் காட்சி தருகிறது.
சிவன் கோயில்களைப் போல இங்கும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. நரசிம்மர் அவதாரம் எடுத்தது பிரதோஷ காலத்தில்தான். அந்த நேரத்தில் யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தி அடையும். எதிரிகள் பயம் இருக்காது. மரண பயம் அகலும்.
தாயார் நரசிங்கவல்லியை வேண்டினால் திருமணத் தடை நீங்கும். திருமணம் நடந்தும் கணவன் மிகவும் கோபத்துடனும் மூர்க்கத்துடனும் நடப்பவனாக இருந்தால், வாழ்க்கைத் துணையின் கோபம் நீக்கி, அமைதி தவழும் இல்வாழ்க்கைக்கு வித்திடுவார் ஸ்ரீயோக நரசிம்மர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. எனவேதான் இங்கே நரசிம்ம பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் பலர் வருகின்றனர்.
- வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும்.
- அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
சிலரது வாழ்வில்பலவிதமான எதிர்பாராத துன்பதுயரங்கள்வாட்டி வதைக்கும். அது போன்ற சமயங்களில் நம்முடைய வாழ்வை காப்பாற்ற ஒரு மஹா சக்தியின் அனுக்கிரகமே நம்முடைய முக்கிய தேவையாகும். அது போன்ற சமயங்களில் நம்மை காப்பாற்ற கூடிய சக்திகளில் நரசிம்மரின் சக்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது. கீழ்கண்ட மந்திரத்தை சொன்னால் நல்லதே நடக்கும்.
ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச
முதலில் ஒரு லட்சுமி நரசிம்ம சுவாமியின் சன்னதியில் மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும் நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.
வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும்.அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்