என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"
- லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும்.
- லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன்,மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,
லக்னம், அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.
இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.
அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
- சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
- காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
ராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும். ராகுகாலம் 1மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 - 9.00, செவ்வாய் 3.00 - 4.30, புதன் 12.00 - 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12.00, சனி 9.00 - 10.30 ஆகும்.
ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும்.
இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)
மங்களவார (செவ்வாய்க்கிழமை) பூஜை
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.௦௦ - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
- ஸ்ரீபேரை என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.
- மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
"நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாணெனக் கில்லை என் தோழிமீர்காள்
சிகரமணி நெடுமாட நீடு
தென் திருப்பேரையில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சம் கவர்ந்து எனை யூழியானே (3368) திருவாய்மொழி
என்று நம்மாழ்வாரின் பாடல் பெற்ற இத்திருத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கு திசையில் உள்ளது.
திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. திருக்கோளூரிலிருந்து நடந்தும் வரலாம்.
வரலாறு
பிரமாண்ட புராணமே இதைப் பற்றியும் தெரிவிக்கிறது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணன் திருமகளை விடுத்து பூமாதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டு பூவுலகில் பூமாதேவியிடம் லயித்திருந்த காலையில் திருமகளாகிய இலக்குமி தன்னைக் காண வந்த துர்வாச முனிவரிடம், தனது தனித்த நிலைமையைத் தெரிவித்து பூமாதேவியின் நிறமும் அழகும் தனக்கு வரவேண்டுமென்று வேண்டினாள்.
துர்வாசர் பூமிப்பிராட்டியின் இருப்பிடம் அடைந்தார். துர்வாசர் வந்திருப்பதை அறிந்தும் அறியாது போல் இருந்த பூமாதேவி, எம்பெருமானின் மடியைவிட்டு எழுந்திராமல் இருக்கவே, கடுஞ்சினங்கொண்ட துர்வாசர் பூமாதேவியை நோக்கி "நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய்" என்று சபிக்க அதுகேட்ட பூமாதேவி தனது குற்றத்தை உணர்ந்து மிகவும் வருந்திய நிலையில், தனது குற்றத்தை பொறுக்குமாறு வேண்டிக்கொண்டு எனது "கரிய நிறம் பெறும் காலம்" எப்போது வருமென்று கேட்க, தாமிரபரணியின் தென் கரையில் உள்ள கரிபதம் என்ற சேத்திரத்தில் நதியில் நீராடி தவம் புரிந்தால் உனது பழைய உருவம் சித்திக்கும் என்று கூறியருளினார்.
இதன் பிறகு துர்வாச முனிவர் இவ்விபரத்தை இலக்குமியிடம் சொல்ல இலக்குமியும் ஆனந்தித்திருந்தாள்.
துர்வாசர் கூறியபடி பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயருடன் அஷ்டாச்சர மந்திரத்தை ஜெபித்து ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியன்று நீராடி தர்ப்பணம் செய்ய முயற்சிக்கும்போது, அந்நதியில் மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களைக் கண்டு அவைகளைக் கையிலெடுத்ததும் திருமால் பிரத்யட்சமாக அம்மகர குண்டலங்களைத் திருமாலுக்கே உகந்தளித்தாள். அதனால் எம்பெருமானுக்கும் "மகர நெடுங்குழைக் காதர்" என்ற திருநாமம் உண்டாயிற்று அத்தீர்த்தத்திற்கும் மத்ஸய தீர்த்தம் என்றே பெயருண்டானது. தேவர்கள் பூச்சொரிய அழகுத்திருமேனியாக விளங்கின திருமால் பூமாதேவியின் விருப்பப்படியே மகர நெடுங்குழைக் காதராகவே அங்கு எப்போதும் காட்சியளிக்கச் சம்மதித்தார்.
ஸ்ரீபேரை (லக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிப் பிராட்டி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று.
108 வைணவதிவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திவ்ய தேசமொன்றிருப்பதால் இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைத்தனர்.
மூலவர்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்
விமானம்: பத்ர விமானம்
தீர்த்தம்: சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம்
சிறப்புக்கள்
1. ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் யுத்தம் நடைபெற்றது. இந்திரனிடம் தோற்றுப்போன அசுரர்கள் மேற்கு திசை சென்று வருணனுடன் போரிட்டு வருணனைத் தோற்கடித்தனர். தனது பாசத்தை (வருணனின் ஒருவகையான ஆயுதம்) இழந்து, என்ன செய்வதென்றறியாது திகைத்து தனது குருவான வியாழபகவானைச் சரணடைய, வருணனை நோக்கிய வியாழ பகவான் நீ ஒரு காலத்தில் மதியீனத்தால் என்னை அவமதித்ததால் உனக்கு இக்கதி ஏற்பட்டது.
இதிலிருந்து மீள்வதற்கு ஒரே உபாயம், எம்பெருமான் ஸ்ரீபேரை என்ற பூமிப்பிராட்டியுடன் மகரபூஷணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள திருப்பேரை சென்று அப்பெருமானைக் குறித்துத் தவம் செய்வதொன்றே யாகுமென்றார்.
அவ்வாறே வருணன் கடுந்தவம் மேற்கொள்ள எம்பெருமான் தோன்றி, தமது திருக்கரத்தால் தீர்த்தத்தை எடுத்துக் கீழேவிட அது பாசம் ஆயிற்று. வருணன் தனது பாசத்தையும், இழந்த நகரத்தையும் பெற்றான்.
இன்றும் ஆண்டுதோறும் வருணன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பங்குனி மாதம் பௌர்ணமியன்று எம்பெருமானுக்கு ஆராதனம் செய்து வருவதாக ஐதீகம். இந்தக் கதை பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.
2. ஒரு சமயம் விதர்ப்ப தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு பன்னிரன்டாண்டுகள் மழையின்றிப் போக அந்நாட்டரசன் இதற்கான காரணத்தை தனது புரோகிதரிடம் வினவ, இப்பஞ்சத்திற்கு காரணம் தேவதா கோபமேயன்றி, நீ காரணமல்ல என்று கூறிய அரண்மனைப் புரோகிதர், மழைக்கு அதிபதியான வருண பகவானின் சாபம் நீங்கப் பெற்ற தென்திருப்பேரை எம்பெருமானைச் சென்று வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூற மன்னனும் அவ்விதமே வந்து வழிபட்டு சிறப்பான பூஜைகள் செய்ய திரண்டுவந்த முகில்களால் நீர்மாரி பெய்து விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஒழிந்தது. இதனால் இப்பெருமானுக்கு நீர் முகில் வண்ணன் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இக்கதையும் பிரம்மாண்ட புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது.
3. வருணன் மழைக்கதிபதி. நவக்கிரகங்களில் சுக்கிரன் மழைக்குரிய கிரகம். வருண சாபந் தீர்ந்ததால் இப்பெருமானை உகந்து சுக்கிரனும் இங்கு வந்து தவம் செய்து திருமாலின் அருள் பெற்றான் எனவும் கூறுவர்.
4. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடப்பட்டுள்ளது.
5. மிகச்சிறிய கிராமமாக இந்த ஊர் விளங்குகிறது. இக்கோவில் மிகவும் பெரியது. எந்நேரமும் போக்குவரத்து வசதியுள்ளது. நெடுஞ்சாலையருகே மிகவும் அழகுற அமைந்துள்ளது இக்கிராமம்.
6. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
- பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
- பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.
- வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.
- பொதுவாக நாக தோஷங்களில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம்.
நாக தோஷம் என்பது நவக்கிரக கோள்களில் சாயா கிரகங்கள் எனப்படும் ராகு/கேது ஆகியவைகளால் ஏற்படுவதாகும். ராகு கேது ஆகிய இவ்விருவரும் அசுப கிரகங்கள். இவர்கள் சூரியன், செவ்வாய், சனி ஆகிய இயற்கையான அசுப கிரகங்களைக் காட்டிலும் அதிக தீமை பயப்பவர்கள்.
இவர்களுக்கு பன்னிரண்டு ராசிகளில், தமக்கென உரிய ராசி என்று ஏதும் இல்லையென்றாலும், தாம் சஞ்சரிக்கும் ராசியை தமதாக்கி, அந்தப் பாவத்திற்குரிய நற்பலன்களை நலிவடையச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் அது மட்டுமல்லாமல் அந்த பாவத்திற்குரிய பொறுப்பையும் ஏற்று செயல்படும் வலிமை பெற்றவர்கள்.
நவக்கிரகத்துத் தலையாய நாயகர்களாகிய சூரியன் மற்றும் சந்திரன் இவர்களுக்கு எதிரிகளாவதோடு, ஒளிதரும் அவர்களைத் தனது நிழலால் மறைத்து கிரகண தோஷத்தை உண்டாக்கி உலகை இருளடையச் செய்யும் வல்லமைப் பெற்றவர்கள். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் வலமாகச் சுற்றாமல் இடமாக சுற்றுவதோடு, எப்போதும் 7க்கு 7ஆக அமைந்து இயங்குபவர்கள்.
அதனால் தான் பெரியவர்கள் நாகத்தைப் பார்த்து யோகத்தைச் சொல்ல வேண்டுமென்று குறிப்பிடுவார்கள். இதைப் போல வல்லமைப் படைத்த அசுபகிரகமான அங்காரக பகவான் ஒருவர் ஜாதகத்தில் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அங்காரக தோஷம் உடையவர்கள் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக நாக தோஷங்களில் மிகச்சிறப்பாக குறிப்பிடப்படுவது கால சர்ப்ப யோகதோஷம். ஒருவர் பிறக்கும்போது கணிக்கப்படும் ராசி கட்டத்தில் ராகு-கேது ஆகியவர்களுக்கு இடையே மற்ற 7 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதையே கடுமையான கால சர்ப்ப யோக தோஷங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் கீழ்கண்டவாறு ராகு - கேதுக்கள் இருப்பதை கால சர்ப்ப யோக தோஷங்கள் எனப்படும்.
ராகு, கேது இருக்கும் இடம்
ராகு 1 7 2 8 3 9 4 10 5 11 6 12
கேது 7 1 8 2 9 3 10 4 11 5 12 6
மேற்குறிப்பிட்டபடி ஜாதகம் அமையப் பெற்றவர்கள் வறுமை, துன்பம், வியாதி, தொழில் இழப்பு, பகை, அரக்கசுபாவம், திருமணத்தடை, புத்திர தோஷம் முதலான துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. எங்கு சென்றால் துன்பங்கள் நீங்கி முக்தி பெற முடியும் என்று வழித் தெரியாமல் பலர் தவிக்கின்றனர். ஜாதகம் கணிக்காவிட்டாலும் மேற்படித் துன்பங்களை பலர் அனுபவித்து வருகின்றனர். இதற்கு ஒரே வழி இறைவனை முறையாக வழிப்பட்டால்தான், துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும்.
தினமும் காலையில் சூரியபகவானை வணங்கி, திருஞானசம்மந்தப் பெருமான் அருளிச் செய்த கோளறு பதிகம் 11 பாடல்கள், மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் மற்றும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் முதலானவற்றை தினமும் பாராயணம் செய்து, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி முதலான புண்ணிய காலங்களில் விரதம் இருந்து ஒன்பது வாரங்கள் பரமேசுவரன் மற்றும் நவக்கிரகங்களை வழிப்படுகிறவர்களுக்கு இறையருளால் பகைவராலோ, கடனாலோ, நோய்களாலோ ஏற்பட்ட துன்பங்கள் நீங்கும்.
- ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.
- ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.
இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்பமரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.
- காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப்பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
- மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.
நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள். இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி, சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.
இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும். ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுக்ல பஷ சஷ்டியன்று அதிகாலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜை
அறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம் திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள் வைத்து நிவேதினம் செய்து தூபதீபம் காட்டிப் பிராத்தனை செய்ய வேண்டும்.
பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம். காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப்பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும். அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிடலாம். நாகராஜ விரதமிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக்காணலாம் என சர்ப்ப தோஷபரிகார நூல் கூறுகிறது.
- அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.
- கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.
திருநெல்வேலியில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் ஸ்ரீ ஆதிநாராயணசாமி திருக்கோவில், ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில், ஸ்ரீமனோன்மணீச்வரர் கோவில ஆகிய மூன்று சிறப்பான கோவில்கள் அமைந்துள்ளன.
ஸ்ரீ ஆதிநாராயணசாமி:
மகாபாரதப் போரில் வெற்றி பெறுவோமா என்ற தயக்கம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டபோது, ஸ்ரீவியாசரின் அறிவுரைப்படி இங்கு வந்து தவமிருந்து, ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று இக்கோவிலைக் கட்டி, 1008 அந்தணர்களைக் குடியமர்த்தி இவ்வூரை உருவாக்கினான். அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.
ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில்:
பிரம்ம தேவர் தாம் பூஜை செய்வதற்காக ஸ்ரீநாராயணரிடம் நேரில் பெற்ற பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகு மிக்க திருமேனியுடன் அருட்சக்தி மிக்கவராகக் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீ மனோன்மணீச்வரர் கோவில்:
திருக்கயிலையில் பார்வதி தேவி உலக நலனுக்காக சிவபெருமானைத் தியானித்து 1008 தேவ தாமரை மலர்களைத் தூவினாள். சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி அம்மலர்களை ஏற்றார். அவ்விடங்கள் 1008 சிவ க்ஷேத்திரங்கள் ஆகின. இதில் மனோன்மணி லிங்கம் தோன்றிய இடம் விஜயநாராயணம் ஆகும். எனவே இத்தலம் மனோன்மணீச்வரம் என அழைக்கப்படுகிறது. இது 1008 சிவ க்ஷேத்திரங்களில் 74-ஆவது க்ஷேத்திரமாகும்.
இத்திருக்கோவில் இருக்குமிடம் முற்காலத்தில் வில்வ மரங்களும் மருதாணி மரங்களும் நிறைந்த காடாக இருந்தது. இதன் நடுவே ஒரு பொய்கையும் இருந்தது. இதன் கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய அந்தச் சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.
"பௌர்ணமி, சிவராத்திரி நாட்களில் இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு கயிலையில் அருள்வதுபோல திருவருள் புரிகிறேன்" என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினாராம். பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும். சிவராத்திரி அன்று வேடன் முக்தி பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வணங்குகின்றனர்.
பௌர்ணமியன்று க்ஷேத்திர வலம் வந்து மனோன்மனீச்வரரை வணங்கினால் நோய் நொடிகள், கிரக தோஷங்கள் நீங்கி, கல்வி, செல்வம், உயர்ந்த பதவி, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம். இந்தப் பேறுகளை அடைய பௌர்ணமியன்று இக்கோவிலை வலம் வாருங்கள்.
- வளர்பிறை சதுர்த்தி நாள்தான் ”நாக சதுர்த்தி” என்று அழைக்கப்படுகிறது.
- நாக சதுர்த்தி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்.
நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது "போகர்12000" நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் "நாக சதுர்த்தி திதி"
அதென்ன திதி?
பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.
பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை "தேய்பிறை திதி" என்றும், பின்னர் அமாவாசை முதல் பவுர்ணமி வரையான பதினைந்து நாட்களை "வளர்பிறை திதி" என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் "கிருஷ்ணபட்சம்", "சுக்கிலபட்சம்" என்பர்.
இவை முறையே...
1. பிரதமை. 2. துவி தியை. 3. திருதியை. 4. சதுர்த்தி. 5. பஞ்சமி. 6. சஷ்டி. 7. சப்தமி. 8. அஷ்டமி. 9. நவமி. 10. தசமி. 11. ஏகாதசி. 12. துவாதசி. 13. திரயோதசி. 14. சதுர்தசி. 15. அமாவாசை அல்லது பவுர்ணமி என்று வரிசைப்படுத்தப்படுகிறது.
சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப்படுகின்றன.
இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் நான்காவது நாளான வளர்பிறை சதுர்த்தி திதி பற்றியே.. அதிலும் வரும் வளர்பிறை சதுர்த்தி நாள்தான் "நாக சதுர்த்தி" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக சதுர்த்தி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது.
சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர். தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்...
"நாக சதுர்த்தி திதி" அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.
பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாக விக்கிரகத்தின் மாதிரி படம்..
நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.
நாகதோஷம் உள்ளவர்கள், வர இருக்கும் நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்.
- நம்பூதிரி, தன் கைகளால் சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார்.
- தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார்.
கேரளாவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாகஉருவத்தை சிலையாக செய்து தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.
ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது. அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சருமவியாதி குணமாகவில்லை. நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை, சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது.
அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார். அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.
தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார். அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்தது.
இந்த விஷயம் தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர், "எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும் இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்" என்றார். மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார். மன்னரின் உடலில் இருந்த சருமவியாதி நீங்கியது.
இதை கண்டு அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன் பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன் கேரள தேசத்துக்கு திரும்ப அனுப்பி வைத்தார்.
- சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும் இருப்பார்களாம்.
- பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.
திரியவே சதுர்த்தசியில் ஜெனனமானோன்
தேசத்தில் தீமையது செய்வோனாவான்
அரியவே பிறர்பொருளை யபகரிப்பான்
அடுத்தவிட மெங்கையுமே கலகஞ்செய்வான்
பிரியவே பிறர்களை தூஷணமே செய்வான்
பேச்சிக்கு முன்னாகக் கோபங்கொள்வான்
சூரியவே குரோதமது வுடையோனாகி
குவலயத்தீ லுருப்பதெனக் கூறிடாயே.
- அகத்தியர்.
சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும், அடுத்தவர்களிடம் கலகம் செய்பவர்களாகவும், பிறர் மீது அவதூறு செய்பவர்களாகவும், அதிக முன்கோபமுடையவர்களாகவும், குரோத மனமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.
பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...
கூறவே பௌர்ணமியில் ஜெனனமானோன்
குணமுளான் புத்தியுள்ளான் பொருமையுள்ளான்
நேறவே வாக்கதுவும் பிசக மாட்டான்
நேர்மையுடன் யென்னாளுந் தயாளமுள்ளான்
அன்றேல் களங்கமது யுற்றோனாகும்
உக்கிரமுள்ள தெய்வத்தைப் பூசை செய்வான்
பீறவே மந்திரத்தால் பலரைத்தானும்
மேதினியில் கெடுப்பனென மகிழுவாயே.
- அகத்தியர்.
பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும், பொருமையுள்ளவர்களாகவும், வாக்குப் பிசகாதவர்களாகவும், நேர்மையும் தயாளகுணமும் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும், உக்கிர தெய்வத்தை பூசை செய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.
இந்த தகவல்கள் இறுதியானவையோ என்றோ அல்லது உறுதியானவையோ என்றோ அறுதியிட்டு கூறிடும் தகுதி எனக்கு இல்லை. எனவே இந்த தகவல்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.
- கோயிலுக்குள் அமர்ந்திருந்தால் நம் முயற்சியற்று தியான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும் அமைதியான பிரதேசம் இது.
- கோயிலின் வளாகத்திலேயே அனுமனையும் பைரவரையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அது வெறும் மண் மேடுதான். ஏன் அதை லிங்கத்துமேடு என்று அழைக்க வேண்டும். சில நூறு வருடங்களுக்கு முன்பு ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும். அதிலிருந்து அந்த இடத்தை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனாலேயே 1990 வரை அப்படியே அழைத்துக் கொண்டிருந்தனர். வைரத்தை எப்படி மூடி வைத்தாலும் ஏதேனும் ஒரு கீற்று சட்டென்று வெளியேறி பிரகாசித்துவிடும். அதுபோல கிருஷ்ணமூர்த்தி எனும் பக்தர் மூலம் ஈசன் தன்னிருப்பை வெளிப்படுத்தினார். ஒருநாள் பதுவஞ்சேரியின் வயல் வெளிகளுக்கு மத்தியிலுள்ள மண் மேட்டின் அருகே உட்கார்ந்திருந்தார்.
வெளியே வெயில் கொதித்துக் கொண்டிருந்தாலும் மனதை எண்ணங்கள் அலைக்கழித்தாலும் ஏதோ ஒரு சக்தி உள்ளத்து தணலை குளிர்வித்தபடி இருந்தது. ஏதோவொரு நிம்மதியற்ற நிலை மனதில் இருந்தாலும் கடலலையின் சாரல் முகத்தை தழுவுவதுபோல நெஞ்சத்து துயரத்தை துடைத்து விட்டபடி இருந்தது.
'இது மண் மேடா. இல்லையே. வேறெதுவோ உள்ளுக்குள்ளிருந்து என்னை அணைந்து கொள்கிறதே. சூழ்ந்து கொள்கிறதே. இறுக்கப் பிடித்து அமர வைக்கிறதே. இத்தனை சுகமாக நான் இருந்ததில்லையே' என்று என்றும் இல்லாது அந்த மேட்டை மிக மென்மையாக வருடினார். இத்தனை வருடங்களாகப் பார்த்த மேடு அன்று மட்டும் ஏனோ வினோதமாக தோற்றமளித்தது.
மண்ணை அகற்றித்தான் பார்ப்போமே எனும் எண்ணம் அதிவேகமாக வந்தது. ஏதோ உத்தரவிட்டது போன்று மண்ணை அகற்றத் தொடங்கினார். கல்லுக்குள் மறைந்திருக்கும் சிற்பம் வெளிப்படுவதுபோல முதலில் வட்டமான கல் தெரிந்தது. ஆஹா.... என்று மகிழ்ச்சியோடு இன்னும் ஜாக்கிரதையாக மண்ணை களைய பாணம் தெரிந்தது. சூழ்ந்திருந்த மண்ணை முழுவதுமாக ஒதுக்க சிவலிங்கம் பளீரென்று வெளிப்பட்டது. மகிழ்ச்சியில் துள்ளினார். 'கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்...' என்று ஆனந்தமானார். கண்ணில் நீர் வழிந்தது. ஊருக்குள் ஓடி எல்லோரிடமும் சொல்ல வேண்டுமென்று ஆவலானார். மண் மேட்டின் ஒரு பகுதியை சரி செய்துவிட்டோமே அப்படியே நிறுத்த வேண்டாம் என்று மற்றொரு பகுதியிலிருந்த மண்ணையும் வாரிக் கொட்டினார்.
அள்ளும்போது ஈசனின் அருள் அதற்குள்ளும் சுரப்பது தெரிந்தது. முதலில் பாணம் போல தெரிந்தது. 'ஆஹா... ஆஹா...' என்று அரற்றினார். இன்னொரு சிவலிங்கமா என்று ஆனந்த அதிரல் உடலை சிலிர்க்கடித்தது. இரண்டு சிவலிங்கத்திற்கு மத்தியிலும் நின்று கைகூப்பி, நெடு மரம் போன்று சடாரென்று விழுந்தார். அதற்குள் ஊருக்குள் செய்தி பரவியது. முதல் சிவலிங்கம் தோன்றும்போதே மக்கள் சூழ்ந்து நின்று உதவினர். இரண்டாவதாக இன்னொரு லிங்கம் பொங்கி இருப்பதைப் பார்த்து ஊரே ஸ்தம்பித்து நின்றது. மாலைச் சூரியன் பிரிய மனமில்லாது விடைபெற்றான்.
காற்றில் ஈரப்பதம் ஏறியது. கீழ்வானம் கறுக்க மெல்லியதாய்ச் சாரல் பூமியை நனைத்தது. பெருமழையாக கொட்டித் தீர்த்தது. இரண்டு சிவலிங்கத்தின் அருகிலும் நெய் தீபங்கள் ஏற்றினர். பச்சைக் குழந்தையை பார்ப்பது போல உற்று உற்றுப் பார்த்து பரவசப்பட்டனர். ஈசனின் மேனியில் முத்துக்கள்போல நீர் கோர்த்துக் கொண்டது. பாணத்திலிருந்து இறங்கி ஆவுடையாரின் மீது வடிந்தது. சுற்றி நின்றவர்களின் நெஞ்சத்தில் நிம்மதி பரவியது. தொல்பொருள்துறை அதிகாரி சத்தியமூர்த்தி வந்து ஆராய்ந்தார். லிங்கத்திற்கு பக்கவாட்டில் இன்னும் கொஞ்சம் அகலமாக தோண்டப்பட்டது. கோயிலின் கடக்கால் தெரிந்தது. தேனுபுரீஸ்வரர் ஆலயக் கல்வெட்டில் இக்கோயிலைப் பற்றிய விவரங்களை கண்டுபிடித்தனர்.
இத்தலத்திற்கு புஞ்சேரி அகரம் அல்லது அரசநாராயண சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சோழர்கள் காலத்திய கோயிலாகும். ஈசனுக்கு கைலாசநாத நாயனார், திரு அகஸ்தீஸ்வர நாயனார் என்றும் திருப்பெயர்கள் இடப்பட்டிருந்தன. ஒருவாறாக இதற்கொரு கோயில் கட்ட வேண்டுமென்றும் தனித்தனியாக எல்லா சந்நதிகளோடும் அமைக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். சுயம்பு மூர்த்தியாக அமைந்திருந்த கைலாசநாதரை மூலவராக வைத்தும் அருகேயே அகஸ்தீஸ்வரரையும் ஸ்தாபித்தனர். கிழக்கு நோக்கிய நிலையில் ஈசன் அருள்பாலிக்கிறார். கைலாசநாதருக்கு அருகேயே அம்பாள் ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தனர். அதற்குப் பிறகு திரிபுரசுந்தரி எனும் திருப்பெயரில் அம்பாள் சிலையை நிறுவினார்கள். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். படிப்படியாக கோயில் வளரத் தொடங்கியது.
கோயிலின் வளாகத்திலேயே அனுமனையும் பைரவரையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். அஷ்டமி அன்று பைரவருக்கும் பௌர்ணமியன்று அம்பாள் மற்றும் சிவனுக்கும் சிறப்பு பூஜையும் நடந்து வருகிறது. நவகிரக சந்நதியும் தனியே அமைந்துள்ளன. வயல்வெளிகளுக்கு மத்தியில் அழகும் நேர்த்தியும் மிக்கதாக இக்கோயில் விளங்குகிறது. தென்றல் தாலாட்டும் புறநகர பூமி. சென்னை மாநகரத்தின் நெரிசல்களும் துரிதங்களின் சாயல்களும் இல்லாத அழகிய கிராமம். கோயிலுக்குள் அமர்ந்திருந்தால் நம் முயற்சியற்று தியான நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லும் அமைதியான பிரதேசம் இது. ரிஷிகள் புற்றுக்குள் தவமிருப்பதுபோல இத்தல ஈசனும் தனக்குள் தானே ஆத்ம தியானத்திலேயே கிடந்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தானே தியானத்தின் இலக்காக இருந்து கொண்டு எதற்கு இவ்வாறு மறைத்துக் கொண்டு வெளிப்பட வேண்டுமென்கிற வியப்பும் பெருகுகிறது. தோன்றுவதும் மறைவதும் மறைப்பதை மீண்டும் வெளிப்படுத்துவதும் என்று சகலமும் ஈசனின் திருவிளையாடல்களே என்பதையே இத்தலம் உணர்த்துகிறது. அடுத்து என்ன செய்வது..? வழி தெரியாமல் தவிக்கிறேன். பிரச்னைகள் பல்வேறு ரூபத்தில் என்னை துரத்துகிறது என்று கலங்கி நின்றவரை கைலாசநாதர் கைதூக்கி விடுகிறார். ஒன்றா... இரண்டா... ஓராயிரம் பிரச்னைகள் கூட இருக்கட்டுமே கண நேரத்தில் சுண்டி எறிந்து விடுகிறார். இது வெறும் நம்பிக்கை இல்லை. பல பக்தர்களின் அனுபவம். எனவே, சென்று தரிசியுங்கள்.
அருகேயே ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள சப்தமாதர்கள் கோயிலையும் கோணாட்சி அம்மனையும் தரிசித்து வாருங்கள். சிவாலயத்திற்கு இணையான பழமை கோணாட்சி அம்மன் கோயிலுக்கும் உண்டு. இரு கோயில்களின் தொடர்புக்கு: 9789972277, 7299113196. சென்னை - தாம்பரத்திலிருந்து சேலையூர் - கேம்ப்ரோடு வழியாக அகரம்தென் ஊருக்குச் செல்லும் வழியிலேயே, அருகிலேயே பதுவஞ்சேரி அமைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்