search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aanmiga kalanjiyam"

    • ஆண்டுக்கு 12 தடவை சுவாமி வீதியுலா நடக்கிறது.
    • நவக்கிரக அமைப்புகள் வித்தியாசமானது. ராகுவும், கேதுவும் இங்கு மாறுபட்ட விதமாக உள்ளனர்.

    1. இத்தலத்துக்கு திருவதிகை என்ற பெயர் ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. சேர மன்னர்களின் ஒரு பிரிவினர் அல்லது சமண முனிவர் யாராவது பெயரால் இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராயச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

    2. திருவாதிரை தினத்தன்று சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து 100 பொற்காசுகள் கொடுத்த நரசிங்க முனையார் என்ற சிற்றரசர் திருவதிகையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    3. அதியமானோடு தொடர்புடைய இந்த பகுதி அதிகனூர் என்று அழைக்கப்பட்டு பிறகு அதிகை என மருவி இருக்கலாம் என்று தமிழறிஞர் ரா.பி.சேதுபிள்ளை கூறியுள்ளார்.

    4. மூன்று அரக்கர்களை இங்கு சிவன் எரித்ததால் முதலில் இந்த ஊர் `திரிபுரவதம்' என்றழைக்கப்பட்டது. அது திரிபுரவதிகை என்று மாறி பின்னர் திருவதிகை ஆகி இருக்கிறது.

    5. முன்னையிட்ட தீ முப்புரத்திலே

    பின்னையிட்ட தீ தென்னி லங்கையில்

    அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே

    யானுமிட்ட தீ முள்க மூள்கவே - என்று பட்டினத்தார் பாடியதன் மூலம் திரிபுரம் எரித்தது ராமாயண காலத்துக்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.

    6. திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். இந்த நதிக்கு தென்திசை கங்கை, வாரணாசி ஆறு என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

    7. பரமனின் முடியை கண்டதாக தாழம்பூ உதவியுடன் பொய் சொன்னதால் சாபத்துக்குள்ளான பிரம்மன், திருவதிகையில் நான்முகலிங்கம் நிறுவி வழிபட்டு தோஷத்தை போக்கிக் கொண்டார்.

    8. பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திருமூலர் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பலன் பெற்றுள்ளனர்.

    9. தமிழ்நாட்டில் உள்ள வேத காலத்துக்கும் முற்பட்ட சில தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

    10. இத்தலத்தில் ஆண்டுக்கு 12 தடவை சுவாமி வீதியுலா நடக்கிறது.

    11. இத்தலத்தில் ஒரு தடவை திருப்பணி நடந்த போது கொடி மரம் அருகே பூமிக்குள் புதைந்து கிடந்த வராகி சிலை கிடைத்தது. அதை அந்த இடத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள். தஞ்சை கோவிலிலும் இப்படி ஒரு வராகி சிலை உள்ளது. தமிழ் மன்னவர்கள் போருக்கு புறப்படும் முன்பு வராகியை வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.

    12. அசுரர்களை அழித்தாலும் இந்த தலம் சாந்தமான தலம் என்று பெயரெடுத்துள்ளது. அது போல இத்தலம் பரிகாரம் தலம் அல்ல, பிரார்த்தனை தலமாகும்.

    13. இத்தலத்தில் காரணம் ஆகம விதிப்படி நித்தியப் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    14. இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் வயிற்று வலி, குடும்பப் பிரச்சினை, வழக்கு ஆகிய மூன்று பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு காணலாம்.

    15. இத்தலத்தில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கான வாகனங்கள் வெள்ளியால் செய்யப்பட்டவைகளாகும். வெள்ளியால் ஆன ரிஷபம், மயில் ஆகியவற்றை பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    16. இத்தலத்தில் நீண்ட நாள் வாழ்ந்த திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு திரும்பி வந்தார் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் இத்தல பிரகாரத்தில் சமணர் சிலை ஒன்று உள்ளது.

    17. இத்தலத்தில் மொத்தம் 16 உற்சவர்கள் உள்ளனர். ஆனால் திரிபுரந்தகர் பிரதான உற்சவராக உள்ளார்.

    18. திருவதிகை கோவில் உள்ளே ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கப்பாதை இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை திருவண்ணாமலை, சிதம்பரம், சீர்காழி தலங்களுக்கு செல்வதாக சொல்கிறார்கள்.

    19. காஞ்சீபுரம், திருவண்ணாமலையில் பூமிக்கு அடியில் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக சொல்வார்கள். அதே போன்று திருவதிகை தலத்திலும் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    20. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் புகழ் பெற்றிருப்பது போல இந்த தலத்தில் `திரிபுர ரகசியம்' கூறப்படுகிறது. அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் விரட்டுவதை இந்த திரிபுர ரகசியம் உணர்த்துவதாக அர்த்தம். ஆனால் ஏனோ தெரியவில்லை திரிபுர ரகசியம் என்பது கால ஓட்டத்தில் மறைந்து போய் விட்டது.

    21. இத்தலத்துக்கு தல விருட்சமான சரக் கொன்றை மரம் பட்சி வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

    22. தல விருட்சமான சரக் கொன்றை மரத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    23. இத்தலத்துக்கு சக்கரகுளம், சூலை நோய் தீர்த்த கிணறு, கெடில நதி மூன்றும் தீர்த்தமாக உள்ளன. இதில் சூலை கிணற்று நீர் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

    24. தீர்த்தங்களில் ஒன்றான சக்கர தீர்த்தம் அக்னி மூலையில் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

    25. இத்தலத்தில் உள்ள நவக்கிரக அமைப்புகளும் வித்தியாசமானது. ராகுவும், கேதுவும் மாறுபட்ட விதமாக உள்ளனர்.

    26. தினமும் மாலை 5.30 மணிக்கு இத்தலத்து சூரியன் மீது சூரிய கதிர்கள் விழுவதை பார்க்கலாம். இதன் மூலம் சூரிய பகவான் தினமும் தன்னைத்தானே இத்தலத்தில் வழிபடுவதாக கூறப்படுகிறது.

    27. இங்குள்ள நடராஜர் விரி சடை இல்லாதவர் ஆவார்.

    28. இத்தலத்தில் பல திருப்பணிகளை செய்ததன் மூலம், `திருப்பணி செம்மல்' என்ற சிறப்பை பண்ருட்டி நகரசபை தலைவர் பன்னீர் செல்வம் பெற்றுள்ளார். அவரது முயற்சியால் திருவதிகை தலத்தில் கடந்த 1.6.2012 அன்று மகா குட முழுக்கு நடைபெற்றது.

    29. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் இத்தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் இருந்ததாக சொல்கிறார்கள்.

    30. இத்தலத்தின் பூமிக்கு அடியில் மிகப் பிரமாண்டமான சரக்கொன்றை நாதர் லிங்கம் கிடைத்தது. இந்த லிங்கத்துக்கு மாதந்தோறும் சிவராத்திரி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    31. திருவதிகை கோவில் முகப்பு வாசலில் நாட்டிய மரபுடன் தொடர்புடைய 108 கரணங்களை விற்கும் சிற்பங்கள் உள்ளன.

    32. திருவதிகை திருத்தலம் சென்னையில் இருந்து 175 கி.மீ, விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ, கடலூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது.

    33. `உண்மை விளக்கம்' என்னும் ஞான சாத்திர நூலை எழுதிய மனவாசகங்கடந்தார் திருவதிகையில்தான் பிறந்தார். இவரது உருவச்சிலை பெரிய நாயகி சம்மன் நுழைவுப் பகுதியில் இடது பக்க ஓரத்தில் உள்ளது.

    34. திருஞான சம்பந்தருக்கு இத்தலத்தில்தான் ஈசன் தன் அனைத்துப் படையுனருடன் வந்து திரு நடனம் காட்டினார்.

    35. இத்தலத்தின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள பஞ்சலிங்கம் அனைவரும் அவசியம் காண வேண்டிய ஒன்றாகும். வேறு எங்கும் இத்தகைய லிங்கத்தை பார்க்க முடியாது.

    36. கோவில் முன் பகுதியில் 16 கால் மண்டபம் உள்ளது. இம்மண்டப தூண்களில் ரிஷபாடேர், அப்பர், மயில்வாகனன் மற்றும் திருப்பணிச் செய்த செட்டியார்களின் சிலைகள் உள்ளன.

    37. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் இக்கோவிலை திருத்தி மிகப் பெரிய திருப்பணி செய்தார். அவருடைய சீடர் சிவஞான தம்பிரான் முதன் முதலில் திருநாவுக்கரசருக்கு 10 நாள் உற்சவம் எடுத்தார்.

    38. மணவிற் கூத்தனான சாலிங்கராயன் என்பவன் இக்கோவிலுக்கு பொன்வேய்ந்து கொடுத்தான். நூற்றுக்கால் மண்டபம், மடப்பள்ளி, அம்பாள் சன்னதி ஆகியவற்றையும் இவன்தான் கட்டியதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது.

    39. தன் வாழ்நாள் முழுவதும் இத்தலத்திலேயே இருந்தவர் திலகவதி அம்மையார். இவரது நிகரற்ற சிவத்தொண்டை போற்றும் வகையில் கொடி மரம் அருகே திலகவதி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது.

    40. திருநாவுக்கரசருக்கும் இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. அமர்ந்த நிலையில் சிரித்த முகத்துடன் அவர் உள்ளார். அவர் கைகளில் உழவாரப்படை தாங்கியதை காணலாம்.

    41. சிவபெருமானின் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 218வது தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    42. அட்ட வீரட்ட தலங்களில் அதிகப் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு.

    43. திருமால் எடுத்த மோகினி அவதாரம் இத்தலத்து ஈசனை வழிபட்ட பிறகே நீங்கியது.

    44. இந்திரன், சப்த ரிஷிகள், வாயு, வருணன், எம தர்மன் ஆகியோரும் இத்தலத்து ஈசனை வழிபட்டு பலன் அடைந்துள்ளனர்.

    45. இத்தலத்தின் 100 கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் திருமணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

    46. இத்தலத்தில் இரு கோபுரங்கள் உள்ளன. முதல் கோபுரம் 7 நிலைகளுடன் 110 அடி உயரம் கொண்டது. உள்ளே இருக்கும் 5 நிலை கோபுரம் 1935ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு 1940ல் முடிக்கப்பட்டது.

    47. எல்லா ஊர்களையும் விட இந்த ஊருக்கு அதிக ஈசன் அருள் கிடைத்ததால் இந்த ஊருக்கு ''திருவதிகை'' என்ற பெயர் ஏற்பட்டது.

    48. பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த ஊர் ''அதியரைய மங்கலம்'' என்று அழைக்கப்பட்டது.

    49. முதலாம் ராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராச மங்கலம்'' என்று பெயர் பெற்றது.

    50. முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் ''அதிராமங்கலியபுரம்'' என்று பெயர் மாறியது.

    51. விஜய நகர மன்னர்கள் ஆட்சியில் ''திருவதிகை நாடு'' என்ற பெயரில் இந்த ஊர் ஒரு சிற்றரரசரின் தலை நகரமாக இருந்தது.

    52. சேர மன்னர்களில் ஒரு பிரிவினர் ''அதிராசர்'' என்றழைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மன்னர்தான் இந்த கோவிலை கட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    53. திருநாவுக்கரசர் இத்தலத்தில் 16 தேவார திருப்பதிகங்கள் பாடியுள்ளார். திருஞான சம்பந்தர், சுந்தரர் இருவரும் தலா ஒரு பதிகம் பாடி உள்ளனர். ஒரு பத்கம் என்பது 10 பாடல்களைக் கொண்டது.

    54. சீர்காழி (71) திருவாரூர் (33) தலங்களுக்கு அடுத்தப்படியாக அதிக தேவார பாடல்கள் பெற்ற மூன்றாவது திருத்தலமாக திருவதிகை தலம் உள்ளது.

    55. புறநானூறு, கலித் தொகை ஆகிய சங்க கால நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் திருவதிகையில் சிவபெருமான் முப்புரம் எரித்த வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது.

    56. சிவபெருமான் தன் சிரிப்பால் முப்புரத்தையும் எரித்து அழித்த சம்பவம் தில்லைக் கலம்பகப் பாடல்களில் இனிமையாகக் காட்டப்பட்டுள்ளது.

    57. மாணிக்க வாசகர் இத்தலத்துக்கு வந்து பதிகம் எதுவும் பாடி பதிவு செய்யவில்லை. என்றாலும் சிவபெருமான் முப்புரம் அழித்ததை புகழ்ந்து பாடியுள்ளார்.

    58. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் வில் ஏந்திய கோலத்தில் இருந்தார். அதே கோலத்தில் ஈசனை திருவிற்கோலம், திருச்செங்காட்டங்குடி, தஞ்சை பெரிய கோவில் ஆகிய கோவில்களிலும் தரிசிக்கலாம்.

    59. திரிபுரத்தை எரித்த போது சிவபெருமான் உக்கிரம் கொண்டு ஆடினார். அந்த ஆடலுக்கு கொடுகொட்டி, பாண்டரங்கம் என்று பெயராகும்.

    60. சுவாமி வீரட்டானேஸ்வரர் பதினாறு பட்டைகளுடன் காட்சியளிப்பது போல கோவில் தூண்கள் முழுவதும் 16 பட்டைகளுடன் விளங்கிறது.

    61. இத்திருக்கோவிலில் பூமியில் நிழல் விழாதபடி கணித முறைப்படி கர்ப்பகிரக விமானம் கட்டப்பட்டுள்ளது.

    62. திருநாவுக்கரசர் இத்தலத்தில் பாடிய தேவார பாடல்களின் பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்ஹார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது.

    63. சிவபெருமான் தேரில் வந்ததால் இத்திருக்கோவிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.

    64. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும்.

    65. இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.

    66. அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பாகும். இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக நடக்கும்.

    67. தீராத வயிற்றுவலி இத்திருக்கோவிலில் திருநீறும், சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக நோய் தீர்ந்துவிடும்.

    68. குழந்தை «பறு இல்லாதவர்கள் அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு அபிஷேகம் செய்து அந்தப் பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.

    69. திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து வழிபடுவோருக்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி.

    70. மாதந்தோறும் பவுர்ணமி அன்று இத்திருக்கோவிலை 16 முறை வலம் வந்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும். அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    71. திருக்கோவில் ராஜகோபுர வாசலில் 108 நாட்டியங்களை விளங்கும் சின்முத்திரையுடன் கூடிய சிற்பங்களை கருங்கற்கலால் செதுக்கப்பட்டுள்ளது.

    72. 63 நாயன்மார்களின் நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    73. திருவாதிரை அன்று சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களில் ஸ்ரீபைரவர் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    74. ஞாயிறு அன்று ஐந்தெழுத்து வேள்வி நடத்தபடுகிறது.

    75. திங்கட்கிழமை சோமாவார வழிபாடு நடக்கிறது.

    • தை மாதத்தில் 18 நாள் புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.
    • மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    1. ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயம் கோவையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. காரில் சென்றால் சுமார் 1 மணி நேரத்தில் சென்று விடலாம்.

    2. மாசாணி அம்மன் அவதார தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை சிறப்பு வாய்ந்தது.

    3. இத்தலம் அருகே உப்பாறு ஓடினாலும் கிணற்று நீர் தீர்த்தமாக உள்ளது.

    4. தை மாதத்தில் 18 நாள் இங்கு புகழ்பெற்ற குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

    5. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

    6. மாசாணி அம்மன் ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    7. அம்பாளுக்கு எதிரே மகாமூனீஸ்வரர், பிரகாரத்தில் பேச்சி, துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர்.

    8. குடும்ப பிரச்னை, நம்பிக்கை துரோகம், மனக்குறைகள், புத்திரதோஷம், நோய்கள், பில்லி, சூனியம் நீங்க, திருடுபோன பொருட்களை மீட்க இத்தலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.

    9. அம்பாளுக்கு புடவை, எண்ணெய் காப்பு சாத்தி, மாங்கல்யம், தொட்டில் கட்டி, ஆடு, சேவல், கால்நடைகள் காணிக்கையாக செலுத்தலாம். அங்கப்பிரதட்சணம், முடிகாணிக்கை செலுத்தி, குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

    10. பூப்பெய்தும் பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால்,பல பிரச்னைகளை சந்தித்து, உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பவளாக மாசாணி அம்மன் இருக்கிறாள்.

    11. யானைகள் அதிகம் வசித்ததால் ஆனைமலை என அழைக்கப்பட்ட இவ்வூரை "உம்பற்காடு' என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

    12. இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதம் தரப்படுகிறது. பெண்கள், இதனை சாப்பிட்டு, கருப்புக்கயிறு கட்டிக்கெள்ள தீவினைகள் நீங்கி, குழந்தைபாக்கியம் உண்டாகும்.

    13. செவ்வரளி உதிரிப்பூமாலை, எலுமிச்சை மாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி வழிபட, பூப்பெய்தும் சமயத்தில் ஏற்படும் உடல் தொடர்பான பிரச்னைகள், வயிற்று வலிகள் தீரும் என்பது நம்பிக்கை.

    14. இக்கோயில் வளாகத்தில் உள்ள "நீதிக்கல்லில்' மிளகாய் அரைத்து அப்பினால், திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும், பில்லி, சூனியங்கள் விலகும்.

    15. "முறையீட்டு சீட்டில்' குறைகளை எழுதி அம்பாளின் கையில் கட்டி வைக்க அவற்றிற்கு 90 நாட்களில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர்.

    16. அம்மனுக்கு பொங்கலிடுவது இத்தலத்தில் சிறப்பாகும்.

    17. மாசாணியம்மன் அருள் வேண்டி தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

    அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது.

    18. ஒவ்வொரு மாதமும் இத்தலத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேஷ பூசைகள் நடத்தப்படுகின்றன.

    19. ஒவ்வொரு ஆண்டும் தை மாத பவுளர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேஷ பூசைகளுடன், 16 -ம் நாள் தேர் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெரும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர்.

    20. வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    • மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்தாள்.
    • மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார்.

    ஆனைமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். இனிதே வாழ்ந்த இல்லாள் நிறைமாத கர்ப்பிணியானாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் பிரியமனமின்றி அவள் தன் தாய்வீடு செல்லாமல் கணவருடனே இருந்தாள்.

    பிள்ளை பேறுகாலம் நெருங்கி விட்டது. இடுப்பு வலி ஆரம்பித்தது. மனைவியின் வேதனையைக் கண்ட கணவன் மருத்துவச்சியை அழைத்து வர புறப்பட்டான். ஆனால் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லை. துணைக்கு ஒருவரும் இல்லை.

    நன்றாக இருட்டி விட்டது. பகலிலே செல்வதற்கே அச்சமாக இருக்கும் அடர்ந்த காடு, திருடர்கள் துஷ்டர்கள் பயம் வேறு அதிகம். என்ன செய்வது என்று யோசித்தான். அவளுக்கோ பேறுகால வேதனை அதிகமானது.

    கணவனின் தவிப்பை புரிந்து கொண்ட அவள் கணவனை பார்த்து, இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல. என் தாய்வீடு இரண்டு கல் தொலைவில் உள்ளது. அந்த ஊரில் தெய்வீகத் தன்மையுடையவளும் தர்ம சிந்தனையும் கொண்ட ஒரு மருத்துவச்சி இருக்கிறாள் அவள் முக்காலம் உணர்ந்தவள். பின்வருவதை முன் சொல்லும் ஆற்றல் உடையவள். என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். நான் மெதுவாக நடந்து வருகிறேன் என்றாள்.

    அவள் சொல்வது அவனுக்கு சரி எனப்பட்டது. இருவரும் புறப்பட்டார்கள். மெதுவாக நடந்து ஒரு கல் தொலைவு சென்றார்கள். மை இருட்டாக இருந்தது. ஆந்தைகளின் அலறலும், கோட்டான்களின் சத்தமும் அச்சத்தை அதிகப்படுத்தியது. அவளுக்கோ பிரசவ வலி அதிகமானது.

    கால்கள் பின்னின் ஓரடி எடுத்து வைப்பதும் கடினமாக இருந்தது. அவன் கைதாங்கலாகப் பிடித்து கொண்டான். ஆனாலும் வேதனை அதிகமானதால் என்னால் இனி நடக்க முடியாது என்று உட்கார்ந்து விட்டாள். அவன் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். ஊரை நெருங்கி தான் விட்டார்கள். அதோ விளக்கொளி தெரிந்தது.

    ஆனால் அவளோ வேதனை தாங்க முடியாதபடி, என்னால் நடக்க முடியாது, நீங்கள் வரும் வரை நான் பத்திரமாக இருக்கிறேன், நீங்கள் சென்று வாருங்கள், என்று கணவனை அனுப்பி வைத்தாள்.

    அவனும் வேறு வழியின்றி மிகுந்த மனக்கஷ்டத்துடன் உன் விருப்பப்படியே சென்று வருகிறேன் நீ தைரியமாக இரு என்று கூறி விரைந்து வெளிச்சம் வந்த திசை நோக்கிச் சென்றான்.

    அங்கு சென்று விசாரித்து மருத்துவச்சியின் வீட்டுக் கதவை தட்டினான்.

    மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தாள். அவன் தன் மனைவி பற்றி கூறி உதவிக்கு அவளை அழைத்தான். உடனே அவள் மருத்துவத்திற்கான பொருட்களை எடுத்துக் கொண்டு தயாரானாள்.

    அதற்குள் அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த ஊர் நாட்டாமை, பூசாரி மற்றும் விவரமான சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தான்.

    அதற்குள் மருத்துவச்சியும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். அனைவரையும் அழைத்துக் கொண்டு அவன் விரைந்து நடந்தான்.

    ஆனால் அவன் மனைவியை அங்கு காணவில்லை. அப்பொழுது கடவுளே இது என்ன சோதனை நான் கண்ட கனவு நிஜமாகியதே என்று மருத்துவச்சி கதறிக் கொண்டு ஓர் இடத்திற்கு ஓடினாள். அங்கே மிகவும் கோரமான காட்சியைக் கண்டார்கள். அவன் மனைவி இறந்து கிடந்தாள்.

    கதறி அழுத அவன் மருத்துவச்சியை நோக்கி தாயே என் மனைவியும் குழந்தையை இப்படி கோரமாக இறந்து கிடப்பதற்கும், நீங்கள் ஏதோ கனவு கண்டதாகச் சொன்னீர்களே அதற்கும் என்ன சம்பந்தம்? என்று வேதனையுடன் கேட்டான். இதைக் கேட்டதும் அந்த மருத்துவ மூதாட்டி தான் கண்ட கொடூரக் கனவு பற்றி கூறினாள்.

    உங்கள் மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், இந்த காட்டுப்பகுதியில் வந்த போது அரக்கன் ஒருவன் அவளை வழிமறித்தான். அந்த அரக்கனிடம் இருந்து தப்ப அவள் ஓடினாள். அப்போது ஓடும் வேகத்தில் அங்கு கிடந்த மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டாள். துரத்திக் கொண்டு வந்த வஞ்சகன் அவளைத் தொட முயன்றான்.

    காளிதேவியை, உலக ரட்சகி, ஜெகன் மாதா என்று தெரிந்தும் அவளின் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். மேகம் திரண்டு மின்னலடித்து மின்னல் தாக்கிய அவன் கண் குருடாக அலறிக் கொண்டு ஓடினான். என்ன நடந்தது? என்று உணரும் முன் அவள் கீழே சரிந்தாள்.

    கர்ப்பத்தில் இருந்த சிசுவும் உயிரற்று வெளியில் வந்தது. அவள் உடலிருந்து ஆவி ஜோதி ரூபமாகி வானளாவி நின்றது. அதில் கோடி சூரியப்பிரகாசமாய் ஒளிர்ந்தது. மேல் எழும்பிய ஜோதி, காளி போல் ஆக்ரோஷமாக சுழன்று அவனை பிடித்து இழுத்து நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்து அப்பெண்ணின் காலடியில் போட்டது. இப்படித்தான் நான் கனவு கண்டேன் என்று அந்த மருத்துவச்சி கூறினாள்.

    இதை கேட்ட கணவன் அழுது புலம்பினான். இந்த அடர்ந்த காட்டில் என் மனைவியை தனியே விட்டு இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டனே! தெய்வமே இது என்ன சோதனை, என் மனைவியையும் குழந்தையையும் இப்படி பறிகொடுத்துட்டேனே என்று கண்ணீர் விட்டான்.

    அங்கு கூடி இருந்தவர்கள் அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது அவர்கள் எல்லோரையும் பார்த்து ஞானிக்கு நிகரான மருத்துவ முதாட்டி இறந்து போன தாயும் சேயும் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்கள் அம்மனின் அவதாரம். இவர்கள் சாதாரணமாக பிறக்கவில்லை.

    வானத்தில் இருந்து மண்ணிற்கு தேவதைகள் போல தேரில் வந்தவர்கள். விண்ணகத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிவது என் அகக்கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் அவதார நோக்கம் நிறைவேறியபடியால் மீண்டும் தெய்வமானார்கள் என்றாள்.

    மாட்டுச்சாணியில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது நடந்திருக்கலாம் என்று அங்கிருந்த நாட்டாமைக்காரர் கூறினார். அதற்கு மூதாட்டி, அய்யா அது அப்படி இல்லை இவளின் மானிடப் பிறவி எடுத்து இந்த சாணியை மிதித்தால் இது சாப விமோச்சனம் அடைந்தது என்று கூறினாள்.

    சாணிக்கு சாப விமோச்சனமா? அது எப்படி? என்று அந்த ஊர் பூசாரி கேட்க, மீண்டும் மருத்துவ மூதாட்டி ஒரு விளக்கம் அளித்தாள்.

    முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்த போது அதில் இருந்து காமதேனு கற்பகவிருட்சம் போன்ற பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன.

    அதில் காமதேனுவையும், கற்பக விருட்சத்தையும், வெள்ளையானை (ஐராவதம்) ஆகியவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதைக் கண்டு பொறுக்காத அசுரர்கள் காமதேனுவை கைப்பற்ற ஆசை கொண்டு அதை இழுத்துச் செல்ல முயன்றார்கள். இதை உணர்ந்த காமதேனு பார்வதி பரமேஸ்வரனை தியானித்து அடைக்கலம் வேண்டி சரணடைந்தது. அதற்கு இரங்கி பார்வதி பரமேஸ்வரரும் அஞ்சாதே என்று கூறி ஒரு நந்தவனத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள்.

    இதற்கிடையில் தேவர்கள் தங்கள் காமதேனுவை காணாமல் தேடி அலைந்தார்கள். முடிவில் பார்வதி பரமேஸ்வரனிடம் முறையிட எண்ணி தவம் இருந்தனர். இது கண்ட பார்வதி தேவியும், காமதேனுவைப் பார்த்து உன்னை அழைத்துச் செல்ல தேவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூற அப்பொழுது காமதேனு அசுரர்கள் பிடித்து இழுத்த போது ஏற்பட்ட பயம் காரணமாக பார்வதி தேவியின் முன்தான் சாணம் போட்டதை இழிசெயலாக கருதி வருத்தப்பட்டது.

    அதற்கு பார்வதிதேவி, நீ செய்த இச்செயல் வருந்தத்தக்கதல்ல. இது நான் இந்த பூமியில் அவதாரம் எடுப்பதற்காகவே நடந்தது என்றாள்.

    காமதேனுவும் மகிழ்ந்து தேவியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. தாயே ஈஸ்வரி பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல உன் அவதாரத்தோடு என் பெயரும், இந்த நந்தவனமும் புனிதமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

    தேவியும் ஆகட்டும் என அருள்பாலித்து மேலும் காமதேனுவிடம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் எப்படி உருமாறி அவதாரமெடுத்து வந்தாலும் மக்கள் அடையாளம் கண்டு என்னை போற்றி வழிபடுகிறார்களோ, அதுபோல் உன் அம்சமாக வழிவரும் பசுக்களால் போடப்படும் சாணமும், கோமியமும் புனிதப் பொருளாக கருதப்படும்.

    தேவர்களும், மானுடர்களும் அவைகளை துஷ்ட நிவாரணியாக பூஜாதிகாரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள். உன் அம்சமாக பூமியில் விளங்கும் பசுக்களை கோமாதா என அனைவரும் வணங்குவார்கள் என்று ஆசீர்வதித்தாள்.

    காமதேனுவும் அன்னையின் அன்பான அருள்வாக்கினால் பயம் தெளிந்து மகிழ்ச்சியுடன் வணங்கி விடைபெற்றுச் சென்றது. காமதேனுவை தேவர்களிடம் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியாகச் சொன்னாள்.

    இந்த காடே அந்த நந்தவனம். அம்பிகையின் அவதாரமான இந்த பெண் இங்கு கிடந்த புனிதமான சாணியில் வழுக்கி விழுந்து நமக்கெல்லாம் அடையாளம் காட்டி நாம் பூஜிக்கும் அம்மனாக அவதரித்துள்ளாள் என்றாள்.

    மேலும் இந்த பெண் பிறவியில் பிரியவிரதன் மகளாகப் பிறந்து அம்பிகையின் குழந்தையாக ஆட்கொள்ளப்பட்டாள் என்றும் மருத்துவ மூதாட்டி கூறினாள். அப்படியா அது என்ன கதை என்று அனைவரும் கேட்டனர். அதற்கும் மூதாட்டி விளக்கம் அளித்தனர். அப்பெண்ணின் கணவன் பிரியவிரதன் யோகமார்க்கமே சிறந்ததென்று இல்லறம் ஏற்காமல் வாழ்ந்து வந்தான். இது கண்ட பிரியவிரதனின் தந்தை மகனிடம் நீ இல்லறம் ஏற்காவிடில் உனக்கு பிதுர்க்கடன் செய்ய கூட புத்திரபேறு இல்லாமல் போய்விடுமே என்றான்.

    ஆனால் மகனோ திருமணத்தை மறுக்கவே பிரிய விரதனின் மனம் மாறியது. அவனுக்கு திருமணமானது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் புத்திர பாக்கியம் இல்லை.

    இதனால் கவலையடைந்த பிரியவிரதனும் அவன் மனைவி மாலதியும், புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஈஸ்வரியை தியானிக்க, தாயும் அருள் கனிந்தாள். மாலதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியானாள்.

    அவளுக்கு பேறுகாலத்தின் போது தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த சிசு, வானத்தை பார்த்த விழிகளுடன் மல்லாந்து இருந்து அது வெறித்துப் பார்த்தபடி உயிரற்றுக் கிடந்தது. இது கண்டு பெற்றோர் துடித்தார்கள்.

    அழுது புலம்பி அந்த ஆதிபராசக்தியிடம் முறையிட்டார்கள். குழந்தையை அம்மன் காலடியில் போட்டான் பிரியவிரதன். திருமணம் வேண்டாம் என்றிருந்த என் மனதை மாற்றி என்னை சம்சாரசாகரத்தில் வீழ்த்தி பாசவலைக்குள் போட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்? இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. என் உயிரையும் எடுத்துக்கொள் என புரண்டு அழுதான்.

    கருணை உள்ளம் கொண்ட சக்திதேவி மனம் இரங்கி ஜோதி ரூபவதியாக காட்சியளித்தாள். பிரிய விரதா மனம் கலங்காதே. இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் இல்லறம். இக்குழந்தை என்னுடைய அம்சமாக உனக்கு வந்து பிறந்துள்ளது. என் அருளால் இது உயிர்பெறும். உனக்கு நீ விரும்பியது போல் ஆண் குழந்தை பிறக்கும்.

    அதுவரை இப்பெண் குழந்தையை அன்போடு வளர்த்துவா. குறிப்பிட்ட காலத்தில் அவள் என்னோடு ஐக்கியமாவாள். பிறகு காமதேனுவின் வேண்டுகோளுக்கேற்ப மறுபடியும் என் அம்சமாக தர்மத்தை காக்க இப்பூமியில் அவதரிப்பாள் என கூறி அருள்புரிந்தாள்.

    அதன்படி மாலதியின் குழந்தையாக அவதரித்து இன்று மண்ணில் துஷ்டனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காக்கும் பொருட்டு காமதேனுவின் மாட்டுச்சாணத்தில் வழுக்கி விழுந்து தெய்வமானாள்.

    இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். மக்கள் குறை தீர்க்கும் அருள் உடையவளாகவும், பிணி தீர்க்கும் மருந்தாகவும் வையகம் போற்றும் மாபெரும் வடிவாகவும், வடிவாம்பிகையாகவும், நீதி வழங்கும் துலாபாரமாகவும் விளங்குவாள் என கூறினாள்.

    இது கேட்டு அங்கு கூடி இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். அப்பெண்ணின் கணவனும் சற்று மனதை தேற்றிக் கொண்டு, அவள் தெய்வப்பிறவி உலகை ரட்சிக்க வந்தவள் என்று எண்ணி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

    விதிக்குட்பட்டதுதான் மனிதப்பிறவி தெய்வமே மனிதன் அவதாரம் எடுத்தாலும் விதிவசத்திற்குற்பட்டு மனித அவஸ்தை பட்டுத்தான் தீர வேண்டும். அதன்படி இப்பொழுது அக்கிரமத்தையும், அதர்மத்தையும் செய்து வந்த இந்த கொடிய அரக்கனை வேரறுத்து சம்ஹாரம் செய்தாள்.

    இவள் பராசக்தியே. இப்பெண் தெய்வத்தை மாதர்குலமே போற்றிக் கொண்டாடும். நாம் அனைவரும் இந்த மாபெரும் சக்தியைத் துதித்து வணங்குவோம் என அனைவரும் கைதொழுதனர். அம்மனுக்குரிய மஞ்சள் பட்டாடை அணிவித்து சமாதானப்படுத்தினார்கள்.

    அனைவருக்கும் அருள்புரியும் பொருட்டு பராசக்தி தேவி, தியானம், ஜெபம், நிஷ்டை சமாதி முதலிய நான்கு நிலைகளில் ஒன்றான சமாதி நிலையில் வைத்து மண்மேடையாக்கினார்கள். அதன் மேல் அம்மன் உருவத்தை மண்ணால் செய்து வைத்துவிட்டு வந்தார்கள்.

    ஆனால் மக்கள் அந்த பக்கம் செல்லவில்லை. சமாதி என்று நினைத்து பயந்தார்கள். இவ்வாறிருக்க ஒரு நள்ளிரவில் சாமக்கோடாங்கி ஒருவன் பூஜை நடத்த மயானத்திற்கு சென்றான். அப்பொழுது அந்த அம்மன் சமாதியான இல்லத்தில் ஓர் அரிய காட்சியைக் கண்டான். மெய்சிலிர்த்தான்.

    தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், காளி பைரவியும் அங்கு வழிபாடு செய்வதை பார்த்து அந்த அம்மனின் மகாசக்தியை ஊர் மக்களுக்கு சொன்னான். பிறகு ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு சென்று வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அது மாசாணி தலமாக மாறி புகழ்பெற்றது.

    • திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.
    • இக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.

    வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.

    இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலக படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

    இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதை கண்டார்.

    தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்தார்.

    திரிபுரவாதிகள் திருவதிகைக்கு தெற்கேயும், ஈசன் திருவதிகையிலும் இருந்து போர் புரிந்தனர். அசுரர்கள் மூவரும் ஈசன் தங்களை அழிக்கும் போது தாங்கள்பெற்ற வரத்தினால் கோட்டைகள் மூன்றும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அழிக்கும் வேலை பகலாகவோ அல்லது இரவாகவோ இருக்கக் கூடாது. மிக முக்கியமாக ஈசனுக்குக் கோபம் இருக்கக் கூடாது போன்ற கட்டுபாடுகளுடன் வரம்பெற்றிருந்தனர்.

    திரிபுரவாதிகளும் ஈசனும் போர் புரியும்போது கொடுத்த வரத்தினால் ஈசன் புன்னகை கொண்டிருந்தார். இதை கண்ணுற்ற அசுரர்கள் ஈசனுக்குக் கோபம் வரவழைக்க ஈசனின் இடபாகம் அமர்ந்த தேவியை தருமாறு கேட்டனர். ஈசன் புன்னகைத்துக் கொண்டே தேவியை நோக்கினார். கேட்டவர்க்கு கேட்டதை கொடுத்து விடும் ஈசன் எங்கே தன்னையும் கொடுத்து விடுவாரோ என்று பயந்து அம்பிகை ஈசனுக்கு வலபுரம் வந்து விட்டார்.

    (இத்திருக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) இந்நிகழ்ச்சி நடந்த இடம் திருவதிகைக்கு மேற்கே வீரப்பெருமாநல்லூர் எனும் ஊர் என்பர்.

    தேவியை கேட்டவுடன் கோபம் கொண்ட ஈசன் `சிரித்தேன் எரித்தேன்' என்று அம்பு தொடுத்தார். தேவர்களின் செருக்கு அடங்க புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.

    அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

    சிவபெருமான் முப்புரவாசிகளில் இருவரை வாயிற்காப்பவனாக (துவாரபாலகர்), நியமித்தார். அவர்களில் ஒருவர் சங்கநாதம் வாசித்துக் கொண்டும், மற்றொருவர் யாழ் வாசித்துக் கொண்டும் இருப்பதை திரிபுரசம்கார மூர்த்தி சன்னதி வாசலில் காணலாம். ஒருவரை குடமுழா முழக்குபவராக தமது அருகில் இருக்கும்படி அருளி மறைந்தார்.

    அசுரர்களின் கோட்டை எரிந்தும் எரியாமலும் வேகாமல் நின்ற பகுதி `வேகாகொள்ளை' என இன்றளவும் கூறப்படுகிறது. இது இச்சரித்திரத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. இந்த வேகாகொல்லை என்னும் ஊரில் சூளைகள் வேகாமல் நின்று போவதும் இன்று வரை கண்கூடாக அதிசயமாகக் காண முடிகிறது.

    • சமய குரவர்கள் நால்வருக்கும் தனித்தனியாக உற்சவம் நடைபெறுகிறது.
    • தல நாயகரான திரிபுரசம்ஹார மூர்த்தி, திரிபுரசுந்தரி செப்பு திருமேனிகள் கோவிலில் சிறப்பு.

    செப்புத்திருமேனிகள் இக்கோவிலில் அதிகம் உள்ளன. சோமாஸ்கந்தர் திருவுருவங்கள் இரண்டு உள்ளன. பழைய சோமாஸ்கந்தர் அளவில் சிறியதாக உள்ளதால் பெரிய அளவில் புதியதாக ஒன்று செய்யப்பட்டுள்ளது. அம்மன் திருஉருவம் நின்ற நிலையில் உள்ளது.

    இங்கு சமய குரவர்கள் நால்வருக்கும் தனித்தனியாக உற்சவம் நடைபெறுகிறது. அதனால் அவர்களின் செப்பு திருமேனியும் உற்சவத்தில் உள்ளது. பிரதோஷ நாயகர் அஸ்திரதேவர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர், பிரதோஷ நாயகர், பெரியநாயகி அம்மன், பிச்சாண்டவர், பள்ளியறை சொக்கர் அகிய செப்பு திருமேனிகள் இங்கு உற்சவத்தில் உள்ளன.

    தல நாயகரான திரிபுரசம்ஹார மூர்த்தி, திரிபுரசுந்தரி செப்பு திருமேனிகள் கோவிலில் சிறப்பாகும். கையில் வில், அம்புடன் பரமசிவன் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இங்கு மட்டுமே.

    திரிபுர சம்ஹார மூர்த்தி சந்நதி

    அலங்கார மண்டபத்திற்கும், மகாமண்டபத்திற்கும் இடையில் தெற்கு நோக்கியுள்ளது. திரிபுர சம்கார மூர்த்தி இத்திருத்தலத்தின் மூர்த்தி ஆவார். மற்ற சிவ தலங்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு.

    அதாவது சிவன், வில் அம்புடன் நின்ற கோலத்தில் உள்ளார். இது ஈஸ்வரன் மூன்று சூரன்களை சம்காரம் செய்த கோலமாகும். மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், நாராயணனை அம்பாக கொண்டு போர் புரிந்ததாக புராணம் கூறுகிறது. இச்சந்நதி கோபுரம் இல்லாமல் உள்ளது. இதற்கு கோபுரம் அமைக்க வேதியலுக்கு மேல் கண்டம் வரை வேலைபாடு அமைக்கப்பட்டுள்ளது.

    புத்தமதம்

    திருவதிகை பகுதியில் புத்தமதம் சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்திருக்கோவில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோவிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.

    இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது.

    • மதுரையை கூன்பாண்டியன் என்ற மன்னர் ஆண்டு வந்தான்.
    • தற்போது கடலூர் என்று அழைக்கப்டும் ஊர் அப்போது பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்டது.

    சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் எங்கும் சமண மதமே பரவி இருந்தது. காஞ்சிபுரத்தை பல்லவ மன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்த மன்னர்கள் சமண மதத்தையை தழுவி வந்தனர்.

    மதுரையை கூன்பாண்டியன் என்ற மன்னர் ஆண்டு வந்தான். அவனும் சமணத்தையே தழுவி வந்தான். தமிழகம் எங்கும் சமணர்கள் சமண பள்ளிகள், மடங்கள், மருத்துவமனைகள் என்று அமைத்து செல்வாக்குடன் இருந்தனர்.

    தற்போது கடலூர் என்று அழைக்கப்டும் ஊர் அப்போது பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்டது. அது சமணர்களின் முக்கிய ஊராக விளங்கியது. தற்போதைய கடலூர் மாவட்டம் முழுவதும் அப்போது தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. அது காஞ்சிபுரம் பல்லவர்களின் கீழ் இருந்து வந்தது.

    சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு திருவாமூர் என்ற ஊரில் புகழனார்-மாதினியார் தம்பதிகளுக்கு மகனாக மருள்நீக்கியர் (திருநாவுக்கரசர்) அவதரித்தார். அவருக்கு திலகவதியார் என்ற சகோதரி இருந்தார்.

    திருவாமூர், திருவதிகையில் இருந்து எட்டு மைல் தொலைவில் மேற்காக உள்ளது. திருநாவுக்கரசரின் குடும்பம் வேளாளர் குடும்பமாகும். அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே சிவபக்தர்களாக விளங்கினார்.

    திருவாமூரில் உள்ள பசுபதீஸ்வரர் மீது அவர்கள் அனைவரும் பக்தி கொண்டு விளங்கினார்.திருமண வயது வந்ததும் திலகவதியாருக்கு மாப்பிள்ளைப்பார்த்து நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை, மன்னரிடம் படைத்தலைவராக இருந்தார்.

    நிச்சயதார்த்தத்தின் பின்னர் ஏற்பட்ட போருக்கு மாப்பிள்ளை சென்றார். அங்கே போரில் அவர் மரணம் அடைந்தார். இதன் பிறகு வேறு மாப்பிள்ளையை மணம் புரிந்து கொள்ள திலகவதியார் மறுத்து விட்டார். இந்த சோகத்தினால் புகழனாரும், மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர்.

    இவ்வாறு தந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராக இறந்ததும், தமக்கையின் திருமணம் நின்று போனதும் மருள்நீக்கியாரின் மனதில் பெரும் துன்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு தெய்வத்தின் மீது இருந்த பக்தி குறைந்தது. அச்சமயம் பாடலிபுத்திரத்தில் சிறப்புடன் விளங்கிய சமணப்பள்ளியில் சேர்ந்து, சமணராக மாறினார் மருள்நீக்கியார்.

    சமண மதத்தில் சேர்ந்த மருள்நீக்கியார் தருமசேனர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். அங்கிருந்த நூல்கள் அனைத்தையும் கற்று பெரும் புலமை பெற்று விளங்கினார். அத்துடன் பாடலிபுத்திரத்திலேயே பெரும் புகழ் பெற்று விளங்கினார். அவரது புகழ் காஞ்சிபுரம் அரண்மனை வரை பரவி இருந்தது.

    திலகவதிக்கு தன் ஒரே தம்பி சமண மதம் தழுவியது பெரும் கவலையாக இருந்தது.

    இதனால் பெரும் துன்பம் அடைந்த திலகவதி தன் சொந்த ஊரான திருவாமூரை விட்டு அருகில் இருந்த திருவதிகை திருத்தலத்திற்கு குடிபெயர்ந்தார். திருவதிகையில் இருந்த வீராட்டானேஸ்வரரிடம் தினமும் இதுபற்றி முறையிட்டார்.

    ஒருநாள் திலகவதியின் கனவில் தோன்றிய ஈசன் கவலைப்பட வேண்டாம். உன் தம்பி மருள்நீக்கியாருக்கு சூலை நோயை தரப்போகிறேன். அதன்பின் அவன் உன்னை வந்தடைவான் என்று கூறினார். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்தார் திலகவதியார்.

    பாடலிபுத்திரத்தில் இருந்து தருமசேனருக்கு வயிற்றில் கடும் வலி ஏற்பட்டது. சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்தும் அந்த வலி நிற்கவில்லை. இதனால் கடும் துயரம் அடைந்த மருள்நீக்கியார் திலகவதியாரை காண புறப்பட்டார். அதற்கு சமணர்கள் அனுமதிக்காததால் இரவோடு இரவாக அங்கிருந்து புறப்பட்டு ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திருவதிகையை அடைந்தார்.

    தம்பியைக் கண்ட திலகவதி மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மருள்நீக்கியாரோ மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். நோய் அவரை அந்த அளவிற்கு வருத்தியது. அதற்காக கவலைப்பட வேண்டாம் என்று கூறிய திலகவதியார் தம்பியை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றார்.

    கோவிலின் முன் மண்டபத்தில் வைத்து (தற்போது இந்த மண்டபம் திருநீறு மண்டபம் என அழைக்கப்படுகிறது) தம்பிக்கு திருநீறு தந்தார். இருவரும் உள்ளே சென்று இறைவனைத் தரிசித்தனர்.

    தான் மதம் மாறியதை நினைத்து வருந்திருய மருள்நீக்கியார் பாடினார்.

    கூற்றாயின வாறு விலக்க கிலீர்

    கொடுமை பல செய்தன நானறியேன்

    ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்

    பிரியாது வணங்குவன் எப்போதும்

    தோற்றாதுமுன் வயிற்றின் அகம்படியே

    குடரோடு துடக்கி முடக்கிட

    ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

    வீரட்டானத்துறை அம்மானே...!

    இந்த பாடல்தான் மருள்நீக்கியார் பாடிய முதல் பாடலாகும். இந்த பாடல் பாடிய பிறகு மருள்நீக்கியாரின் வயிற்றுவலி நீங்கியது. அத்துடன் அவர் பாடல்களின் இனிமையை உணர்ந்த இறைவன் இன்றில் இருந்து நீ `நாவுக்கரசர்' என்று அழைக்கப்படுவாய் என்று அசரீரியாக கூறினார்.

    வீரட்டானேஸ்வரர்க்கு செய்யும் தொண்டே சிறந்தது என்ற மனமகிழ்ச்சியுடன் சகோதரி திலகவதியுடன் சேர்ந்து உழவாரப்பணி செய்து வந்தார் மருள்நீக்கியார்.

    இதற்குள் அவர் மேல் கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள் காஞ்சிபுரத்திற்கு சென்று அங்கிருந்த மன்னனிடம் மருள்நீக்கியார் பற்றி பல பொய்களை சொல்லி, போட்டுக்கொடுத்து கோபத்தை உண்டாக்கினார்கள்.

    மருள்நீக்கியாருக்கு வயிற்றுவலியே வரவில்லை என்றும் கூறினர். அவர் சைவம் சேர்வதற்காகவும், தன் சகோதரியுடன் சேர்வதற்காகவும் பொய் சொல்லியதாக பல்லவ மன்னனிடம் உரைத்தனர். இதனால் கோபம் கொண்ட மன்னன், உடன் மருள்நீக்கியாரை அழைக்க திருவதிகைக்கு தன்னுடைய ஆட்களை அனுப்பினார்.

    திருவதிகை வந்து சேர்ந்து காவலர்கள், மன்னனின் கட்டளையை கூறினர். இதைக்கேட்டு திலகவதியார் அஞ்சினார்.

    ஆனால் இதைக்கண்டு சிறிதும் அஞ்சாத திருநாவுக்கரசர் யார் மன்னர்? எனக்கு மன்னன் வீரட்டானேஸ்வரர்தான் பல்லவ மன்னன் அல்ல என்றும் தான் யாருக்கும் அஞ்சமாட்டோன் என்றும் பொருள்படும்படி......

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!

    நரசுத்தி லிடர்ப்படோம் நடலையில்லோம்

    ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோமல்லோம்

    இன்பமே என்னாளுத் துன்பமில்லை

    தாமார்ககுங் குடியல்லாத் தன்மையான

    சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதிற்

    கோமார்க்கே நாமென்றும் மீளா அளாய்க்

    கொய்ம் மலர்ச்சே வடியினையே குறுகினாமே

    என்ற பாடலை பாடினார்.

    பின்னர் தன் சகோதரியை சமாதானப்படுத்திவிட்டு காவலர்களுடன் காஞ்சிபுரம் நோக்கி சென்றார்.

    காஞ்சிபுரத்தை அடைந்த திருநாவுக்கரசரை நம்பாமலும், சமணர்களின் பேச்சை கேட்டுக்கொண்டும், பல்லவ மன்னன் திருநாவுக்கரசருக்கு பல்வேறு துன்பங்களை தண்டனை என்ற பெயரில் வழங்கினான்.

    சுண்ணாம்பு அறையில் வைத்து தீ மூட்டிய போதும் திருநாவுக்கரசர் அதைக்கண்டு அஞ்சாமல் சிவபெருமானையே நினைத்தார்.

    மாசில் வீனையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணைபடி நிழலே

    என்று பாடினார்.

    மறுபடி வந்து மூடிய அறையை திறந்து பார்த்த சமணர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே திருநாவுக்கரசர், துன்பம் ஏதும் இல்லாமல் அப்படியே இருந்தார்.

    மன்னனிடம் கூறி மறுபடியும் பல்வேறு துன்பங்களை அவருக்கு அளித்தனர். எதிலும் திருநாவுக்கரசர் துன்பப்படாமல் இருந்தார். அவரை இறுதியாக கடலில் தள்ளிவிடுவது என்று முடிவு செய்தனர்.

    பல்லவர்களின் துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு அருகில் நடுக்கடலில் பாறையில் திருநாவுக்கரசரை கட்டி கடலில் தள்ளிவிட்டனர்.

    இறைவனை நினைத்து திருநாவுக்கரசர் பாடினார்

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்

    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

    கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

    நற்றுணை யாவது நமச்சிவாயவே

    என்று திருநாவுக்கரசர் பாடியதும் கற்பாறை, மரக்கட்டையாக மாறி கடலில் மிதந்த வண்ணம் திருப்பாதிரிபுலியூரை (தற்போதைய கடலூர் நகர்) அடைந்தது.

    கரையேறிய திருநாவுக்கரசர் மக்கள் புடைசூழ திருவதிகை திருத்தலத்தை வந்தடைந்தார்.

    இந்த செய்தி நாடெங்கும் பரவ பல்லவ மன்னன் மனம் மாறினான் தன் பரிவாரங்களுடன் திருவதிகையை வந்தடைந்தான்.

    திருநாவுக்கரசரிடம் மன்னிப்பு கேட்டான். திருநாவுக்கரசரும் அவனை மன்னித்தார். திருவதிகை திருத்தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமையை உணர்ந்த மன்னன் சமணம் விடுத்து சைவ மதத்திற்கு மாறினார். சமணர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். பாடலிபுத்திரத்தில் இருந்த சமண மடங்கள் இடிக்கப்பட்டன. அந்த கற்களை கொண்டு இதே திருவதிகையில் பல்லவ மன்னன் குணபராச்வரம் என்ற கோவிலை கட்டினான்.

    இவ்வாறு சைவ மதத்திற்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலாகும்.

    • இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை.
    • மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.

    இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை. மண்டோதரிக்கு மாங்கல்ய தோஷம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நெடுங்காலமாக திருமணத் தடை உண்டாகியது. அவள் திருமணம் நடைபெறாமல் தடைபட்டு நின்று விட்டது.

    சிவ சக்தியின் அருள் நிறைந்து இருக்கும் இடங்களெல்லாம் அழகு நிறைந்த இடங்களாகும் என்று மண்டோதரிக்கு தெரியவந்தது. இதனால் மண்டோதரி உத்திரகோசமங்கை மங்களநாதன் திருத்தலத்திற்குச் சென்று மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.

    மங்களநாதன் மண்டோதரி முன் தோன்றி மாங்கல்ய தோஷத்தை முற்றிலும் நீக்கி விட்டார். பின்பு மண்டோதரிக்கும் ராவணனேஸ்வரனுக்கும் இனிதே திருமணம் நடைபெறுகிறது.

    மாணிக்கவாசகர் பெயர் பெற்ற தலம்

    உத்தரகோசமங்கை சிவபெருமானுக்கு ஆயிரம் சிவவேதியர்கள் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்களிடம் சிவபெருமான் மண்டோதரிக்கு அருள்புரிந்து வருகின்றேன் `சிவாகம நூலை' காத்துக்கொண்டு இருங்கள் என்று கூறி விட்டு இலங்கை சென்றார்.

    சிவபெருமானிடம் 1000 சீடர்களும், ராவணன் அரக்கனால் உங்களுக்குத் துன்பம் உண்டானால் என்ன செய்வோம் என்றார்கள். அதற்கு சிவபெருமான், எனக்கு துன்பம் ஒன்றும் வராது. அப்படி அவனால் துன்பம் வந்தால் இந்த தெப்பக் குளத்தில் அக்கினி தோன்றும் என்று கூறி மறைந்தார்.

    சிவபெருமான் அசோகவனத்தில் மண்டோதரிக்கு அருள் அளிப்பதற்கு வேண்டி சென்றபோது ராவணன் ஈசனடியார் என்று உணராமல் சினமடைந்து அவரைப் பின்புறம் தலையில் அடித்து விடுகிறான். அதனால் தெப்பக்குளத்தில் அக்கினி தோன்றியது.

    இது கண்ட ஆயிரம் வேதியர்களில் ஒருவர் நீங்கலாக எஞ்சிய 999 வேதியர்கள் ஈசனுக்கு ஆபத்து என்று அலறியவாறு அந்த அக்கினியில் இறங்கி விட்டனர். ஈசன் மண்டோதரிக்கு அருள் வழங்கி விட்டு உத்திரகோசமங்கை திரும்பி வந்தார்.

    ஒரே ஒரு வேதியர் மட்டும் சிவாகம நூலைக் கட்டி அணைத்து நிற்பதை கண்டார். அந்த சிவவேதியர் அக்கினி தெப்பக்குளத்தில் தீ எரிந்தது மற்ற வேதியர்கள் எல்லாம் அக்கினியில் இறங்கி விட்டார்கள் நான் ஆகமநூலை காப்பாற்றினேன் என்று ஈசனிடம் கூறினார்.

    நீ ஆகம நூலை காப்பாற்றிய உம் பக்தியை மெச்சினோம். சிவாகம நூலை தோத்திரப் பாக்களாகப் பாடி நம்மை மீண்டும் வந்து, மாணிக்கவாசகராக கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தோன்றி திருவாசகத்தை எழுதுவாய் என்று சிவபெருமான் கூறி மறைந்தார்.

    அதன்படி மீண்டும் கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோச மங்கை திருத்தலத்தில் மாணிக்கவாசகர் தோன்றி திருவாசகத்தை எழுதினார்.

    இலங்கையில் நடந்த போரில் ராமன் பிரம்மாஸ்திரத்தில் தெய்வீக சக்தியை அதன்கண் ஆவாஹனம் பண்ணினான். அந்த அஸ்திரத்தை ராமன் ஏவினான்.

    ராவணன் இருதயத்தை அது துளைத்தது. பிறகு அது தலையைத் தொட்டது. அவன் கரங்களை துண்டித்தார்.

    ராவணன் தரையில் விழுந்து புரண்டு உயிர்துறந்தான். அன்று நடந்த இறுதிப் போரில் குரங்கு படைகளுக்கும் அசுரப்படைகளுக்கும் கடும்போர் நடைபெற்றது. இருபடைகளிலும் பல கோடிக்கணக்கான போர் வீரர்கள் மாண்டு மடிந்தார்கள்.

    இப்படி இறந்தவர்களின் உடல்கள் மாமிச மலைபோல் குவிந்து கிடந்தது. ரத்தம் பெருகி காட்டாறுபோல ஓடியது. அந்தரத்த ஆறு கடலில் கலந்தது. மாமிசத்தையும், உதிரத்தையும் பேய்கள், பிசாசுகள், இரத்தக்காட்டேரிகள் போன்றவைகள் உண்டு செரிக்காததால் குட்டிக்கரணம் அடித்து விளையாடி கொண்டிருந்ததன.

    இறந்தவர்களின் ஆவிகள் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர்களுக்கு பிரம்மஹத்தி தோஷமாகப் பற்றிக் கொண்டது. அதனால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குறித்த நேரத்துக்குள் ராமேஸ்வரத்தில் வழிபட வேண்டும் என்று மகரிஷிகள் அறிவுறுத்தினார்கள்.

    லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு கைலாசத்தில் இருந்து லிங்கம் கொண்டு வரும்படி ராமன் அனுமனை அனுப்பி வைத்தார். ஆனால், நெடுந்தொலையில் உள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டு வருவதற்குக் காலதாமதம் ஆகிவிட்டது.

    விபீஷணனின் வேண்டுகோளுக்கு இணங்கி மண்டோதரியின் குடிக்கோவிலான ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோச மங்கை தலத்தில் மண் எடுத்து வந்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், உயிர்களின் ஆவி அனைத்தும் நீங்கும் என்று கூறிய அறிவுரையின்படி உத்தரகோச மங்கைக்கு வாலியின் மகன் அங்கதனை ராமர் அனுப்பினார். அங்கதன் அங்குள்ள மண்ணை எடுத்து வந்தான். சீதை சிவன் தலத்தில் உள்ள மண்ணை வைத்து லிங்கம் உருவாக்கி ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து அனைவரும் வழிபட்டார்கள்.

    கைலாசம் சென்று லிங்கத்தை எடுத்து திரும்பி வந்த அனுமன் அங்கு மண் லிங்கம் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு அதை தன வாலால் சுற்றி அகற்ற முயன்றான். வால் லிங்கத்திலிருந்து உருவி அனுமனுடைய முகம் தரையில் இடித்து ரத்தம் வழிந்தது. அதனால் ராமேஸ்வரத்தில் இருக்கும் அனுமன் முகம் எப்பொழுதும் சிவந்திருக்கும்.

    இந்த லிங்கத்தில் அனுமன் வாலால் உருவிய தழும்பு இப்பொழுதும் காணலாம். இந்த லிங்கத்தில் தீபாராதனை காட்டும்பொழுது லிங்கத்தின் பின்புறம் ஒளி தெரியும். உத்தரகோசமங்கை ஸ்தலத்தில் மண்ணெடுத்து உருவாக்கிய லிங்கத்திற்கு ராமலிங்கம் என்று பெயர்.

    இதன் மூலம் ராமேசுவரம் தலத்தில் உள்ள லிங்கம் உத்தரகோச மங்கையில் எடுத்து செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.

    இந்த ராம லிங்கத்திற்கு பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தை ஸ்தாபித்து, அந்த லிங்கத்திற்கு காசிலிங்கம் என்று பெயரிட்டு, அதற்கே முதல் பூஜை செய்ய வேண்டும் என்று ராமர் உத்தரவிட்டாராம்.

    பின்னர் ராமர் தேவிப்பட்டனத்தில் கடலில் ஒன்பது கல்களை ஊன்றி தோஷத்தை கழித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருபத்தி மூன்று தீர்த்தங்கள் உள்ளன. ராமர் ஊன்றிய ஒன்பது கற்களை விட்டு பகலில் கடல் தண்ணீர் ஓடிவிடும். மாலையில் தண்ணீரில் கற்கள் மூழ்கிவிடும்.

    எனவே தேவிபட்டணம் இருப்பதி நான்காவது தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோசமங்கை இருபத்தைந்தாவது கடைசி தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாட்டில் இருந்து தெற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு இந்து, காசி சென்று ராமேஸ்வரம் தீர்த்தமாடி இறுதியாக கடைசி தீர்த்தம் உத்தரகோசமங்கையில் ஆடினால் காசி யாத்திரை பூர்த்தியாகி சொர்க்கத்திற்குச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகமாகும்.

    • கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
    • இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    உத்தரகோசமங்கை ஆலய அமைப்பு மிக சிறப்பானதாகும். இந்த கோவில் முன் பகுதி மிகவும் விஸ்தாரமாக உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை இங்கு நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் தாராளமான இடவசதி உள்ளது.

    கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. இடது பக்கம் அம்பிகை சன்னதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்து நிலைகளோடு ஒரு கோபுரம் உள்ளது. வலது பக்கம் ஈசன் சன்னதிக்கு எதிரில் உள்ள ராஜகோபுரமும் மிகப்பழமை வாய்ந்து ஏழு நிலைகளோடு உள்ளது. அந்த இரு கோபுரங்களும் நம்மை ஒருங்கே வரவேற்கும் அழகு மனதுக்கு உற்சாகத்தை தரும்.

    இரு வெளிக்கோபுரங்கட்கும் உள் கோபுரங்களும் உள்ளன. வலது பக்க உள்கோபுரம் ஐந்து நிலைகள். இடது பக்க உள்கோபுரம் மூன்று நிலைகள். வலது பக்கம் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம் பெறலாம். உட்புறம் வலப்பக்கம் குளம்.

    உள்கோபுரம் கண்டு தொழுது பிறகு உள்ளே செல்லலாம். இடது பக்க பிரகாரத்தில் வாகனங்கள் வாயிலைத் தாண்டி திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவராத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையை தாழ்த்தி அமர்ந்து காட்சி தருவதை காணலாம். சிவலிங்க பாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.

    விநாயகரை தொழுது பலிபீடம் கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி சென்றால் பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவிந்த கைகளுடன் ராமநாதபுரம் சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சி அளிக்கின்றனர். இந்த கோவிலில் பல டன் எடையுள்ள பெரிய கோவில் மணி உள்ளது. இதன் ஓசை 5 மைல் தொலை வரை கேட்கும்.

    பிரகாரச்சுவரில் திருவாசக பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் பதிகங்கள் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன. தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.

    வலம் முடித்து துவார பாலகர்களை தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான தரிசனம். எதிரில் நந்திதேவர், நீர்கட்டும் அமைப்பில் அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களமாகக் காட்சி அளிக்கிறார் சதுர ஆவுடையார்.

    அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் ஒரு கரம், ஒரு கரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையில் ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

    நடராஜாருக்குரிய ஆறு அபிஷேக காலங்களிலும் இச்சன்னத்தியில் இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    இத்தலத்தில் உள்ள எல்லா பிரகாரங்களும் அழகுமிக கற்தூண்களுடன் அமைந்துள்ளன. பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனார், ஊர்த்தவர் சிற்பங்கள் உள்ளன. உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்ல¬ப விநாயகரைத் தரிசிக்கலாம்.

    ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயிலை அடுத்து காணலாம். நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்தியை தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.

    சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. எனவே சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது படியில் ஏறி இறங்காமல் செல்ல வழிசெய்துள்ளனர். கருவறை தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது. இங்கு அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாக சொல்லப்படுகிறது. அம்பிகைக்கான அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையம்பலத்தில் ஆடினார்.

    இங்குள்ள கூத்தப்பிரான்- நடராஜர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத்திருமேனி, விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இப்பெருமான் வெளியே உலா வருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சன்னதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியே வெளியே கொண்டுவர இயலாது.

    மார்கழி திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர்.

    அன்று ஒருநாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதமாக நடைபெறும். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாளில் கட்டாயமாக சென்று தரிசிக்க வேண்டும்.

    அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை பெருமான் ஆண்டு முழுவதும் காட்சித் தருவார்.

    மார்கழித் திருவாதிரை நாளில், வாய்ப்பும் திருவருள் பெற்றவர்களும் அவசியம் சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும். நாள்தோறும் உச்சிக்காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம், தரிசனங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    நடராஜர் சன்னதி வழிபாடு முடிந்தபிறகு முன் மண்டபம் செல்லலாம். அங்குள்ள சிறிய மேடையில் தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதை தரிசிக்கும்போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைக்கூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும் இடப்பக்கம் சாளரம் வழியாக திரும்பி உமா மகேஸ்வரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    உமாமகேஷ்வரர் சன்னதிக்கு படிகளேறிச் சென்று தரிசித்து விட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகர வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதை பார்க்கலாம். குருந்த மர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம்.

    கல்லில் குருந்த மரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க எதிரிர் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.

    இதையடுத்து மாணிக்க வாசகர் சன்னதி கண்டு வழிபடலாம். கோஷ்டமூர்த்தம் `ஏகபாத திரிமூர்த்தி' அருமையானது.

    நடராஜர் கோயிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. 3 ஆயிரம் ஆண்டு பழமையான தலமரம் இருப்பதை அங்கு காணலாம். வியாசரும் காகபுஜண்டரும் இங்கு தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலவிருட்சமான இலந்தை மரம் உள்ளது.

    இந்த சகஸ்ரலிங்கக் கோயில் எழுந்ததற்கான வரலாறு, நடராசர் கோயிலில் முன் மண்டபத்தில் மேற்புறத்தில் வண்ண ஓவியமாக எழுதப்பட்டுள்ளது.

    ஆயிரம் சிவ வேதியர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே சிவலிங்கமான சகஸ்ரலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக மாணிக்கவாசகரை தரிசனம் செய்தல் வேண்டும். அதன்பிறகு வடக்குவாசல் வழியாக செல்ல வேண்டும். இப்படி முறையாக உத்தரகோச மங்கை தலத்தில் வழிபாடு செய்தால் மனிதர்களுக்கு பிடிக்கப்பட்ட தோஷங்கள், பாவங்கள், கிரகங்கள், மனச்சஞ்சலங்கள், பிணிகள் அனைத்தையும் பனித்துளி போல ஈசன், ஈஸ்வரி நீக்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் ஆகும்.

    • சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார்.
    • ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

    உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் பழம்பெருமை மிக்கது. ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள்.

    ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து. `நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்' எனக் கூறிச் சென்றார்.

    சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.

    சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக் காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது `அக்னி தீர்த்தம்' எனப் பெயர் பெற்றது.

    அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

    மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்க வாசகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    பொதுவாக, ஒரு கோவிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் இது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு சார்த்தப்பட்டிருக்கும்.

    ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும்தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா, இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார். இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

    சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.

    அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொரள் பெருக்கமும் ஏற்படும்.

    வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    • நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத 7 அடி உயரம் கொண்ட மரகத சிலையாகும்.
    • குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை.

    உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வேண்டி மரகத சிலை போன்று ஒரு மாதிரி ஐம்பொன் நடராஜர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்து அமைத்துள்ளனர்.

    பல நூற்றாண்டுகளாக பல முஸ்லிம் மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் கொள்ளையடிக்க முயற்சித்தும், மரகத சிலையை எடுக்க முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை.

    1970-ம் ஆண்டு ஐம்பது பேர்கள் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று உத்திரகோசமங்கை கோவிலின் மேற்குப்புற வாசல் வழியாக வந்து மரகத நடராஜர் சன்னதி பூட்டை உடைத்து, உடைக்க முடியாமல் வெல்டிங் மிஷின் வைத்தபோது வெல்டிங் வைத்தவனுடைய இடது கை பூட்டாக மாறியதால் தன் கையை வெல்டிங் வைத்து எடுக்கவும், கை இரண்டு துண்டாக விழுந்தவுடன் உணர்வு வந்தது.

    உடனே கொள்ளை கும்பல் பயந்து அருகில் இருந்த ஐம்பொன் நடராஜர் சிலையை எடுத்தக் கொண்டு காரில் தப்பித்து ஒருகல் தொலைவில் போகும்போது கொள்ளையர்களுக்கு கண் தெரியாமல் போய் விட்டது.

    உடனே ரோட்டுக்கு அருகிலுள்ள கண்ணாங்குடி கிராமத்துக்குச் சொந்தமான தண்ணீர் உள்ள குளத்தில் சிலையை போட்டு விட்டனர். அதன் பிறகே கொள்ளையர்களுக்கு கண் தெரிந்தது. உடனே தப்பி விட்டார்கள்.

    நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட விபரம் மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

    கண்ணாங்குடியை சேர்ந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவனால் கண்ணுக்குத் தென்பட்டது சிலை. குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை. இந்த சிலையை கண்ட மக்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்கள். பின்பு சிலை ராமநாதபுரம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    மாலிக்காபூரிடம் இருந்து தப்பிய சிலை

    தென் இந்தியாவுக்கு படையெடுத்து வந்து இந்து கோவில்களை சூறையாடிய மாலிக்காபூர் ஒற்றர்கள் மூலம் உத்தரகோசமங்கை நடராஜர் கோவிலில் மரகதம் இருப்பதை அறிந்து கொண்டான்.

    உடனே உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத கல் நடராஜர் சிலையை கொள்ளையடிப்பதற்கு வேண்டி பெரும் படைகளுடன் சென்றான். உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத 7 அடி உயரம் கொண்ட மரகத சிலையாகும். இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    மாலிக்காப்பூர் உத்திரகோசமங்கை கோவிலை நெருங்கும்போது தான் வைத்திருந்த கோவில் வரைபடத்தை தொலைத்து விட்டார். இதனால் அவனும் அவன் படையினரும் உத்திரகோசமங்கைக்கு செல்வதற்கு பதில் ராமநாதபுரத்துக்கு சென்று விட்டனர். ஈசனே அவர்களை திசை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

    மாலிக்காபூர் ராமேஸ்வரம் கோவிலில் கொள்ளையடிக்க பொருள்கள் இல்லாமல் கருங்கல்லை எடுத்துச் சென்றார். இந்தியா வரலாற்றில் அலாவுதீன் கில்சிங்படை தளபதி மாலிக்காப்பூர்தான் உத்திரகோச மங்கை வழியாக ராமேஸ்வரம் வரை கொள்ளை அடித்தாக வரலாறு உள்ளது. ஆனால் அவன் கையில் பச்சை கல் நடராஜர் சிலை சிக்காமல் போனது ஈசன் அருளால் நடந்ததாகவே பக்தர்கள் இன்றும் நம்புகிறார்கள்.

    தாயுமானவர்

    தாயுமானவர் இறுதியாக ராமநாதபுரம் வந்து உத்திரகோசமங்கை திருத்தலத்திற்குச் சென்று சிவனைப் பற்றி மனமுருகப் பாடல்களை பாடினார். இந்தப் பகுதியில் 5 வருடங்களாக மழை பெய்யாமல் பஞ்சம் நிலவியது.

    ஆடு மாடுகள் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்தது. மக்கள் கடும் பஞ்சத்தால் பிழைப்புக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள்.

    தாயுமான சுவாமிகள் ஈசன், ஈஸ்வரியின் பாதத்தை கெட்டியாக அணைத்தபடி மனமுருக பாடல்களை பாடினார். வான்மழை விடாது பெய்யத் தொடங்கியது.

    அந்த வான்மழையிலும் இறைவனின் அருள் மழையிலும், அன்று ஒரே நாளில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் எல்லாம் நிரம்பி விட்டது. மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயம் விளைந்தது. மக்கள் பசியின்றி வாழ்ந்தார்கள்.

    • நடராஜர் சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.
    • பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    ராமேசுவரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மரைக்காயர் என்ற மீனவர் பாய்மரப்படகு வைத்து மீன் பிடித்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது கடலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் சூறாவளியாக உருவெடுத்து தாக்கு பிடிக்க முடியாதபடி புயல் காற்று வீசியது.

    பயங்கர இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. அதனால் மரைக்காயரின் பாய்மர படகு திசை மாறிச் சென்றது. படகு எங்கு செல்லுகிறது என்று தெரியாமல் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டது.

    கடல் நடுப்பகுதிக்கு படகு சென்று விட்டது. அப்போது திடீரென்று கடல்பாசி படிந்த பச்சை நிறத்துடன் கல்பாறையில் பாய்மரப் படகு மோதியது.படகு மோதிய வேகத்தில் அந்த பாறை மடமடவென்று படகின் மேலே விழுந்தது. மற்றும் இரண்டு பாறை கல் துண்டுகளும் விழுந்தன. அந்த நேரத்தில் புயல் காற்றும் பேய்மழையும், உடனே நின்று விட்டது.

    இதையறிந்த மரைக்காயர் தன் உயிரை காப்பாற்றியது இந்த பாறைக்கல்தான் என்று நினைத்தார். எப்படியும் அந்த பச்சை கல்லையும், 2 கல் துண்டுகளையும் ஊர் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி பச்சை நிறக்கல் மற்றும் 2 கல் துண்டுகளுடன் படகை ஓட்டிக் கொண்டு மண்டபம் வந்து சேர்ந்தார்.

    காணாமல் போன மரைக்காயரைக் கண்டு அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    மரைக்காயர் தான் கொண்டு வந்த பாசிபடிந்த பாறைக்கல்லை தன் வீட்டுக்கு முன் வாசல் படிக்கல்லாக போட்டு விட்டார். இந்த வாசல் படிக்கல்லின் மேல் நடக்க நடக்க நாளடைவில் கல்லில் படிந்திருந்த கடல் பாசிகள் முழுவதும் போய்விட்டது. இதனால் பளபளவென்று பச்சை நிறத்தில் மின்னியபடி மிக அழகாக கல் கிடந்தது.

    இதை கண்ட மரைக்காயர் குடும்பத்தினர் பச்சை நிற கல்லின் அழகைக் கண்டு இந்த கல்லை மன்னருக்கு கொடுத்தால் நமக்கு ஏதாவது பொருள் கொடுப்பார் என்று நினைத்து மன்னருக்கு தெரிவித்தனர்.

    பாண்டிய மன்னன் தனது ஆட்களை மண்டபத்திலுள்ள மரைக்காயர் வீட்டுக்கு அனுப்பி பச்சை நிறக்கல்லை அரண்மனைக்கு எடுத்து வரும்படி உத்தரவிட்டார். பணியாட்கள் மரைக்காயர் வீட்டில் உள்ள பச்சை நிறக்கல்லை அரண்மனையில் சேர்த்தார்கள்.

    அந்த கல்லை கண்ட மன்னன் விலைமதிக்க முடியாத மரகத கல்லைக்கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த பச்சை மரகத கல்லைக் கொண்டு உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு ஊத்துவதாண்டவம் நடனத்தை அப்படியே நாட்டியம் ஆடும்படி சிலை வடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார் மன்னர்.

    நடராஜர் சிலையை வடிக்க தலைசிறந்த சிற்பியைத் தேடிக்கொண்டு வரும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டார். ஒற்றர்கள் தனித்தனியாக பல நாடுகளுக்கு அதாவது பாண்டியநாடு, சேரநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு போன்ற நாடுகளில் மூலை முடுக்கெல்லாம் தேடியும் சிலை வடிக்கும் சிற்பி கிடைக்கவில்லை. இதனால் மன்னன் மிகுந்த கவலை கொண்டு இருந்தார்.

    ஒருநாள் மன்னர் இரவில் உறங்கும்போது ஈசன் கனவில் தோன்றினார். இலங்கை வேந்தன் முதலாம் கயவாகு என்பவரின் அரண்மனையில் சிவபக்தனான ரத்தினசபாபதி என்ற தலைசிறந்த சிற்பி இருப்பதாக தெரிவித்தார்.

    உடனே பாண்டிய மன்னன் இலங்கை வேந்தன் முதலாம் கயவாகுவை தொடர்பு கொண்டு, சிற்பியை அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார். அதன்படி ரத்தினசபாபதி என்ற சிற்பியை உத்தரகோசமங்கை திருத்தலத்துக்கு அழைத்து வந்து சேர்த்தார்கள். அவர்தான் பச்சை கல் நடராஜர் சிலையை வடித்தார்.

    இலங்கை சிற்பி வடித்த சிலை

    இலங்கை நாட்டைச் சேர்ந்த சிலை வடிக்கும் தலைசிறந்த சிற்பியான ரத்தின சபாபதி என்பவரிடம் பாண்டிய மன்னன் சிலை வடிக்க வேண்டிய வரைபடங்களையும், ஆருத்ரா தரிசனம் ஊத்துவதாண்டவம் நடராஜன் ஆடிய நடனத்தையும் தெளிவுபட விளக்கினார்.

    சிற்பி பச்சை மரகதகல்லில் நடராஜர் சிலையை செதுக்க ஆரம்பித்தார். முதலில் இரண்டு துண்டுகளாக இருந்த பச்சை மரகதகல்லை மிக அழகான வடிவம் அமைத்து இரண்டு துண்டுகளையும் மன்னரிடம் ஒப்படைத்தார் சிற்பி.

    மன்னர் ஒருதுண்டு பச்சை மரகத கல்லை பழனி முருகன் கோவிலின் அடிப்பீடத்தில் வைத்தார். மற்றொரு துண்டை மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடிப்பீடத்தில் வைத்தார். சிற்பி பச்சை மரகத கல்லில் 5 அடி உயரம் சிலையும், 1 அடி உயரம் பீடமும் சேர்த்த ஏழு அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலையாக வடித்தார்.

    அந்த சிலை நடராஜர் உருவத்தில் பரதநாட்டிய கலையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சிலையாக இருந்தது. இந்த நடராஜர் சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது. இந்த சிலை ஒளி வெள்ளத்தில் உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பது போல் தத்ரூபமாக வடித்துள்ளார்.

    நடராஜர் சிலையை நாம் நேரில் பார்க்கும்போது அச்சு அசலாக பரதநாட்டியம் ஆடுவது போன்று காட்சியளிக்கும். இந்த சிலையை நேரில் கண்டவர்கள் கண்ணைக் கவரவும், பார்த்தவர்கள் பரவசம் அடையவும், சிலை வடித்தவுடன் மக்கள் மற்றும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பச்சை மரதக கல்லினால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலையின் மேல் சூரிய ஒளிபட்டு கோவிலே இரண்டாக பிளந்துள்ளது.

    சிலையைப் பார்க்க வந்த பக்தர்கள் ஏற்படுத்திய பேச்சு சலசலப்பு சத்தமும், மேளத்தாள இசைகள், ஒலி, ஒளி முதலிய பேரொளிகள் நடராஜன் சிலை மேலேபட்டு அதிர்வுகள் ஏற்படுத்தின. இதை அறிந்த சிற்பி, எப்படி இந்த விக்கிரகத்தை காப்பாற்றுவது என்று நினைத்து மிக வேதனைப்பட்டு குழம்பிய நிலையில் ஈசன் காலடியில் மன்றாடி வழிமுறைகளைக் கேட்டார். உடனே ஒரு அசரீரி தோன்றியது.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் முன்விட்ட பார்வதி சாபத்தால் எனது உருவம் பொறிக்கப்பட்ட விக்கிரகம் பச்சை மரகத கல்லால் ஆனது. இந்த பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    மத்தளம் முழங்க, மரகதம் உடையும் என்ற சொல்லுக்கேற்ப எனது உருவச்சிலையை ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பூசியவடியும் என்று கூறினார். பிறகு மார்கழி மாதம் பவுர்ணமி அன்று சந்தனத்தைக் கலைத்து ஒரு நாள் மட்டும் எனது முழு உருவத்தை பக்தர்கள் பார்க்கலாம் என்று கூறினார். எனது அனுமதி இல்லாமல் என் விக்கிரகத்தை மன்னரோ, மந்திரியோ, மக்களோ, திருடனோ, அரசியல்வாதிகளோ எடுத்துச் செல்ல முடியாது என்றும், அப்படி எடுக்க நினைப்பவர்களுக்கு உடனே கிறுக்கு(பித்து) பிடித்து விடும் என்றார்.

    அன்னியர்கள், யாத்ரீகர்கள் உத்தரகோசமங்கை மண்ணில் உட்கார்ந்து எழும்பும்போது கையை அசைத்துப் பின்புறமாக மண்ணை தட்டிச் செல்ல வேண்டும். அப்படி தட்டிச் செல்லாதவர்களுக்கு சிவன் உத்தரகோச மங்கையில் ஒருதுளி மண்ணை எடுக்க கூட சம்மதிக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.

    பிரமாண்ட மணி

    உத்திரகோசமங்கை திருத்தலத்தில் பல டன் எடை கொண்ட மிகப்பெரிய மணி ஒன்று உள்ளது. அதன் சத்தம் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும் எனவே மணி ஓசை கேட்கும் எல்லை வரை சிவதலமாகும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    எனவே உத்திரகோசமங்கை மற்றும் சுற்று வட்டார ஊர்களிலுள்ள ஆண்கள் உழைத்து, தான் ஈட்டிய பொருள்களை அவர் அவர் மனைவி கையில் கொடுத்து வாங்கினால்தான் குடும்பம் முன்னேற்றமடையும் என்பது ஐதீகமாகும்.

    • அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது.
    • பார்வதிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடம்.

    உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது. இக்கோவிலின் மத்தியில் ராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதை சுற்றி அகழியுள்ளது.

    அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார். மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.

    இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள். ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது. முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

    எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது. ஈசன்-ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.

    பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.

    முதல் நாளில் சிவனும், பார்வதியும் `ஆனந்த தாண்டவம்' ஆடுகின்றார்கள். இரண்டாவது நாள் `சந்தியா தாண்டவம்'. மூன்றாவது நாள் `சம்ஹாரத் தாண்டவம்' ஆடுகின்றார்கள்.

    இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது. ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது. பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.

    சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது. நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல. என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.

    இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார். மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார். பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.

    வெற்றி யாருக்கு என புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள். இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள். வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

    ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது. ஆடலரசன் தன் காதில் இருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார். பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.

    சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.

    சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள். கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை. புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார். பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார். ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை. தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.

    இந்த `தலம்' ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற `தலம்' தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும். இந்த போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பரதவ மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம் இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் தன்னுடைய உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன் வழிபட்டு செல்வார்கள்.

    ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும். எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம். இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள். இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    ×