search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actor roja"

    தெலுங்கு தேசம் கட்சியினரால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நடிகை ரோஜா கூறினார். #ActorRoja #TeluguDesamParty
    நகரி:

    ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த அகரம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் அதிவேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி அந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரிக்கு சொந்தமானது என்றும், இந்த கல்குவாரியின் லாரிகளால் இதேபோன்று விபத்துகள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று, விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பிலான கிரிக்கெட் போட்டியை காண நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா வந்திருந்தார். அவர் சம்பவம் குறித்து அறிந்ததும் தனது தொண்டர்களுடன் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து புத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பவானி அர்ஷா அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட நடிகை ரோஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போலீசார் லஞ்சம் வாங்கி கொண்டு கல்குவாரிக்கு சாதகமாக செயல்படுவதாக ரோஜா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில், சாலைமறியல் போராட்டம் தொடர்பாக நடிகை ரோஜா மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று முன்தினம் கூறினார். இதுதொடர்பாக நடிகை ரோஜா நேற்று நகரியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்திலும் எனக்கு இதே தான் நடந்தது. எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.

    தற்போது நடத்திருப்பதும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். நியாயத்துக் காக தொடர்ந்து போராடுவேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை கோர்ட்டில் சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×