search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adikesava Perumal Temple"

    • தாயாரும், பெருமாளும் திருமணத்தடைகளை நீக்கி அருளுகிறார்கள்.
    • நினைத்தவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் அமைந்துள்ளது, நெடுமரம் என்ற பழம்பெருமை வாய்ந்த கிராமம். இங்கு வானுயர்ந்த கோபுரத்தோடும், மதில் சூழ்ந்தும் மகாவிஷ்ணு திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில், சுவாமி `ஆதிகேசவப் பெருமாள்' என்ற திருநாமத்துடனும், தாயார் `அம்புஜவல்லி' என்ற பெயருடனும் அருள்பாலிக்கின்றனர். சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்திருத்தலத்தின் ராஜகோபுரம் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.

     ஐந்துநிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், விளக்குத்தூண், பலிபீடம், கொடிமரம் உள்ளன. அதைத் தொடர்ந்து கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. இந்த கருடாழ்வாருக்கு எதிரே இருபுறமும் நாகர்களும், விநாயகரும் காட்சி தருகிறார்கள். கருவறையில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். உற்சவரான ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் முன் மண்டபத்தில் காட்சி தருகிறார். வெளியே மூலவரை நோக்கி ஒரு சிறு சன்னிதியில் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார்.

    முன்மண்டபத்தில் ஒரு சிறிய சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். தாயாரின் உற்சவர் திருமேனியும் அருகிலேயே அமைந்துள்ளது. மறுபுறத்தில் ஆண்டாள் காட்சி தந்து அருளுகிறார். அருகில் ஆண்டாளின் உற்சவ திருமேனி காணப்படுகிறது. லட்சுமிநாராயணர் மற்றொரு சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். இச்சன்னிதியில் ஸ்ரீசக்கரமும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர். இத்தலத்தில் விகனச முனிவருக்கு சிறு சன்னிதி உள்ளது. விகனசரின் உற்சவத் திருமேனியும் அருகில் இருக்கிறது.

    தமிழ்நாட்டில் விகனசருக்கு ஐந்து வைணவத்தலங்களில் மட்டுமே சன்னிதி அமைந்துள்ளது. அதில் ஒன்று இந்த ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாலயத்தில் உடையவர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மணவாளமாமுனிகள், விஷ்வக்சேனர் முதலான ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும் எழுந்தருளியுள்ளனர். அருகில் பக்த ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். வெளிச்சுற்றுப் பிரகாரத்திலும் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. வைகானச ஆகம முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.

    தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் இத்தலத்து ஆதிகேசவப் பெருமாள் நிறைவேற்றி வைக்கிறார். இத்தலத்து தாயாரும், பெருமாளும் திருமணத்தடைகளை நீக்கி அருளுகிறார்கள். இத்தலத்தினை ஒன்பது முறை வலம் வந்து தாயாரையும், பெருமாளையும் வேண்டிக்கொண்டால், நினைத்தவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விகனசரின் அவதார மகோத்சவம் இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி, விஜயதசமி, பரிவேட்டை உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் உற்சவம், போகித்திருநாளில் திருமஞ்சனம், பங்குனி உத்திரம், கிருஷ்ண ஜெயந்தி முதலான பல விழாக்கள் இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தலம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

     அமைவிடம்

    கல்பாக்கத்தில் இருந்து கூவத்தூர் மார்க்கமாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து ஏராளமான பேருந்துகள், நெடுமரம் கிராமம் வழியாகச் செல்லுகின்றன. கல்பாக்கத்தில் இருந்து செய்யூர் செல்லும் நகரப் பேருந்தில் பயணித்தும் நெடுமரத்தினை அடையலாம்.

    ×