search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Administrator deviation"

    மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியதால் சரத்பவார் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியதால் தேசியவாத காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. #PMModi #SharadPawar #RafaleDeal

    புதுடெல்லி:

    ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்சுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி அடுத்தடுத்து குற்றச்சாட்டு கூறிவரும் நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத்பவார் பிரதமருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார்.

    ரபேல் ஒப்பந்தம் குறித்து நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் இந்த கருத்துக்கு அந்த கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான தாரிக் அன்வர் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் விலகினார். மேலும் தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்வதாக தாரிக் அன்வர் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சரத்பவாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார். அவரது பெயர் முனாப் ஹக்கீம். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். ஹக்கீம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது “தாரிக் அன்வர் கட்சியின் நிறுவன உறுப்பினர். அவரிடம் ஆலோசனை செய்யாமல் ரபேல் விவகாரம் குறித்து சரத்பவார் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளார். அவரது இந்த கருத்து கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும்“ என்றார்.

     


    தாரிக் அன்வரை தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் முனாப் ஹக்கீம் விலகியதால் தேசியவாத காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இந்த நிலையில் சரத் பவாரின் கருத்தால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.

    மூத்த தலைவரும், மராட்டிய மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான மல்லி கார்ஜுன கார்கே இது தொடர்பாக சரத்பவாருடன் பேசினார். இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

    ரபேல் விவகாரத்தில் எந்த சூழ்நிலையிலும் அரசையோ அல்லது பிரதமரையோ தான் ஆதரிக்கவில்லை என்று சரத்பவார் என்னிடம் தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டு குழு இது குறித்து விசாரிக்க வேண்டும் என்பதே அவரது கோரிக் கையாகும்.

    இதனால் எந்த விவகாரத்தில் எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து சரத்பவாரும் சென்று விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதனால் பல்வேறு வி‌ஷயங்களில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. மோடிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்று இணைப்பதை ராகுல் காந்தி இலக்காக கொண்டுள்ளார். #PMModi #SharadPawar #RafaleDeal

    ×