search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan Earthquake"

    • நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு தலிபான் அரசு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் இடையில் சிக்கினார்கள்.

    ஜிண்டாஜன்,ஜோர்ஜான் மாவட்டங்கள் தான் இந்த நிலநடுக்கத்துக்கு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இங்குள்ள 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டது. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் உயிர் இழந்து விட்டனர்.

    இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

    இதில் தோண்ட, தோண்ட பலர் பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் 300 பேர் வரை இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் மீட்பு பணிகள் நடந்து வரும் பகுதிகளில் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,445 ஆக அதிகரித்து உள்ளது. 9,240 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி நிரம்பி வழிகிறது. ஆஸ்பத்திரி வளாகத்திலும் தற்காலிமாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான மருந்துகள், உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு தலிபான் அரசு பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    சிகிச்சையில் உள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் இந்த நிலநடுக்கத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவரும்.

    இந்த நிலநடுக்கத்தால் ஹெராட் மாகாணத்தில் உள்ள கிராமங்கள் சின்னா பின்னமாகி உருக்குலைந்து காணப்படுகிறது. 1,320 வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமாகி கிடக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் நடந்த மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 50 ஆயிரம் பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக இப்போது ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    • நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக மீண்டும் 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தில் நேற்று வரை 320-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜிந்தா ஜன் மாவட்டத்தின் 3 கிராமங்களில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    பரா மற்றும் பத்கிஸ் பகுதிகளில் சில வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. ஹெராத் பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சுவர்களிலும் விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கம் காரணமாக உயரமான கட்டிடங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடந்தது. மீட்பு பணியின் போது பிணங்களாக வந்து கொண்டிருந்தன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்பட்டது.

    இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளனர். இதை தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதுபற்றி ஹெராத் மாகாண பேரிடர் நிவாரண அதிகாரி மூசா ஆஷாரி கூறும்போது, 'நிலநடுக்கத்திற்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜெண்டா ஜன் நகரில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 12 ஆம்புலன்சுகளை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.

    இது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், 'ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்' என்று கூறப்பட்டு உள்ளது.

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளூர் அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்று கூறியுள்ளனர்.

    ×