search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All in One Kitchen"

    வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.
    நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக குடியிருப்புகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது இப்போது சகஜமான விஷயமாக மாறிவிட்டது. குளியலறை, கழிவறை மற்றும் சமையலறை ஆகியவை இட நெருக்கடி காரணமாக குறுகிய அளவுகள் கொண்டதாகவும், நெருக்கமாகவும் கட்டமைக்கப்படுகின்றன. சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் கொண்ட சிறிய குடியிருப்புகளிலும் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவது சிக்கலான விஷயமாக உள்ளது.

    மேற்கண்ட பிரச்சினையை தவிர்க்க உதவும் கண்டுபிடிப்பாக ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ என்ற சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, எளிதாக நகர்த்தவும், சுழலச்செய்யவும், இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்லவும் உகந்த பல்வேறு சிறப்பம்சங்களோடு இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஏதாவது ஒரு இடத்தில் 6 சதுர அடி இடம் இருந்தால் இந்த நவீன சமையலறையை கொண்டுபோய் வைத்து சமையல் வேலைகளை செய்ய இயலும்.

    மேலை நாட்டு முறை

    மேலை நாடுகளில் பரவலாக உபயோகத்தில் இருந்து வரும், அலமாரிகளுடன் இணைந்த சமையலறை ‘கான்செப்ட்’ இப்போது நமது நாட்டிலும் ஆங்காங்கே பரவி வருகிறது. 400-க்கும் குறைவான சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகளில் சமையலறைக்கான இடத்தை ஒதுக்குவதில் உள்ள சிக்கலை இந்த நவீன அமைப்பு மூலம் தீர்க்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.

    மின் இணைப்புகள்

    இந்த அமைப்பை சமையல் வேலைகள் முடிந்த பிறகு சாதாரண பீரோவைப் போல மூடி வைத்துக் கொள்ள முடியும். இந்த மாடர்ன் கிச்சனில் ‘லைட்டிங்’, ‘எலட்ரிகல் சர்க்கியூட்’ போன்ற மின் அமைப்புகள் மற்றும் இணைப்புகள் கச்சிதமாக அமைக்கப்பட்டு ‘எலக்ட்ரிக் ஓவன்’, ‘மிக்சி’, ‘ஸ்டவ்’ போன்ற மின்சார சாதனங்களை உபயோகித்துக் கொள்ள தக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



    தண்ணீர் குழாய்கள்

    மேலும், தண்ணீருக்கான பைப் லைன் மற்றும் உபயோகித்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு உரிய வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சமையலறை பொருட்கள், பாத்திரங்கள், உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்புக்குள் அதற்குரிய இடங்களில் வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட அறையில் உள்ள பொருட்கள் அல்லது சாதனங்களை எடுத்து இந்த சமையலறையில் பயன்படுத்தும் வகையில் 180 டிகிரி முதல் 360 டிகிரி வரை சுழலும் அமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

    பயன்படுத்த எளிது

    உட்புறம் முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள் மூலம் வடிவமைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் ஸ்டீல் மற்றும் மரத்தாலான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் ‘பினிஷிங்’ செய்யப்பட்டுள்ளது. ‘பென்ச் டாப்’, மற்ற ‘பிட்டிங்ஸ்’, ‘பினிஷிங்’ மற்றும் அழகான வண்ணப்பூச்சு ஆகிய அம்சங்கள் கொண்டதாக உள்ள இந்த நவீன சமையல் கூண்டு அமைப்பு மேலை நாடுகளில் பரவலான உபயோகத்தில் இருந்து வருகின்றன.

    இந்த வகை குட்டி சமையல் அறைகளை சிறிய அளவு கொண்ட வீடுகளில் சமையல் அறைக்காக பிரத்தியேக அமைப்பு ஏதும் செய்யப்படாமலேயே அமைத்து பயன்படுத்த முடியும் என்பதோடு, மாணவர்கள் தங்கள் அறைகளில் அமைத்து எளிதாக சமையல் வேலைகளை செய்து கொள்ளலாம் என்பது கவனிக்கத்தக்கது.

    சிறிய இடம் போதும்


    சாதாரண சமையலறை அமைக்க 20 சதுர அடி முதல் 30 சதுர அடிகளுக்கும் மேல் இடம் தேவைப்படும். ஆனால், 6 சதுர அடி மட்டும் தேவைப்படக்கூடிய இந்த ‘ஆல் இன் ஒன் கிச்சன்’ வீடுகளில் உள்ள குட்டி அலமாரி போன்ற தோற்றம் தரக்கூடியது. நமது பகுதியில் புதுமையாக உள்ள இந்த அமைப்பு ரெடிமேடாக நமது கடைகளில் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். இருப்பினும், கொஞ்சம் அதிகமான பட்ஜெட் கொண்ட, இந்த மொபைல் சமையலறையை செய்து தரக்கூடிய தனி நபர்கள் அல்லது பர்னிச்சர் நிறுவனங்கள் நமது பகுதியிலும் இருக்கலாம். 
    ×