search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alone contest"

    இனி வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #BJP
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மின்வெட்டு ஏற்படவில்லை. போதுமான நிலக்கரியை கையிருப்பு வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக நானும் மத்திய அரசிடம் பேசி நிலக்கரியை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளேன்.

    பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் 2 ரூபாய் மட்டும் குறைப்பதால் எந்தவித பயனும் இல்லை. 65 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை இன்று 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதன் விலையை குறைக்கும் அதிகாரம் முழுமையாக மத்திய அரசின் கையில்தான் உள்ளது, அது மத்திய அரசின் கடமையும் கூட.

    புதிய செஸ் வரி மூலம் மத்திய அரசுக்குத்தான் பலன் கிடைக்கும். மாநில அரசுக்கு எந்த பலனும் இல்லை. ஜி.எஸ்.டி.யை அ.தி.மு.க. முழுமையாக எதிர்த்து வந்துள்ளது. ஜி.எஸ்.டி.யால் மாநில சுயாட்சி, மாநில அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவும் ஜி.எஸ்.டி. வரியை கடுமையாக எதிர்த்தார். நாங்களும் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி.யை ஆதரித்து வாக்களிக்கவில்லை. இதுபோன்ற மாநில அரசின் சுயாட்சியை பறிக்கும் வகையில் தான் காங்கிரசும் ஆட்சி செய்தது. ஆனால் 18 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுத்த தி.மு.க. எதையும் கண்டு கொள்ளவில்லை.


    2016 பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38-ல் வெற்றி பெற்றார். அதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க.தான் நாடகமாடுகிறது. அ.தி.மு.க. பா.ஜ.க.வின் துணையின்றி தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இனியும் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும். அதற்கான வல்லமை அ.தி.மு.க.வுக்கு உண்டு.

    பா.ஜ.க.வுடன் கூட்டணிக்காக அமித்ஷா வீட்டு கதவை நாங்கள் தட்டவில்லை, அதேபோல் எங்களுடன் கூட்டணி வைக்க எங்கள் கதவையும் யாரும் தட்டவில்லை. மத்திய அரசுடன் நட்புடன் இருக்கிறோம். அதற்காக மத்திய அரசை கண் மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. எங்களை விமர்சிப்பதால் நாங்களும் அவர்களை விமர்சிக்கிறோம். இதைத்தான் எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #BJP
    ×