search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amavasai Dharpanam"

    • தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது.
    • தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த சுருளி அருவி விளங்குகிறது.

    இந்த அருவிக்கு நாள்தோறும் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி. பிண்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் இங்குள்ள பூதநாராயணன் கோயிலில் நவதானியம் வைத்தும் வேலப்பர் கோயில் கைலாயநாதர் கோயில் சிவன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக சுருளி அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இது போன்ற தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நோய் தொற்று குறைந்ததன் காரணமாக தற்போது சுருளி அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் காலை முதலே சுருளி அருவி பகுதிக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.

    தற்போது தேனி மாவட்டத்தில் பரவலான மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் நீர் வரத்து ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இந்த அருவியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடிவிட்டு சுருளி அருவி ஆற்றங்கரை ஓரம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    பின்னர் இங்கு உள்ள கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அருவிக்கு வந்து செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    ×