search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amritsar tragedy"

    பஞ்சாபில் ரெயில்கள் மோதி 61 பேர் இறந்ததன் எதிரொலியாக தண்டவாளத்தில் அமர்ந்து 2-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #AmritsarTrainAccident #Dussehra #ProtesterClash
    அமிர்தசரஸ்:

    பஞ்சாபில் ரெயில்கள் மோதி 61 பேர் இறந்ததன் எதிரொலியாக தண்டவாளத்தில் அமர்ந்து 2-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசார் மீது கற்களை வீசி பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்னும் இடத்தில் 19-ந் தேதி இரவு ரெயில் தண்டவாள பகுதியை ஒட்டிய மைதானத்தில் தசரா விழா கொண்டாட்டத்தின் போது ஏராளமானோர் ரெயில் தண்டவாளத்தின் மீது ஏறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.



    அப்போது ஜலந்தர் எக்ஸ்பிரஸ், தண்டவாளத்தின் மீது நின்றிருந்தவர்கள் மீது மோதியது. மற்றொரு தண்டவாளத்தில் வந்த இன்னொரு ரெயிலும் பலர் மீது மோதியது. இந்த விபத்தில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 40 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு உள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

    இந்த விபத்தை கண்டித்து ஜோதா பதக் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்திய ரெயில் டிரைவர்களை கைது செய்யவேண்டும், இதற்கு பொறுப்பு ஏற்று மந்திரி நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்-மந்திரி அமரீந்தர் சிங், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    எனினும் நேற்றும் அப்பகுதி மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை அகற்ற போலீசார் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் போலீசார் மீது கற்களை வீசி பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் சில போலீசார் காயம் அடைந்தனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ரெயில்கள் மோதல் சம்பவத்துக்கு பிறகு எங்கள் பகுதி மக்களில் பலரை காணவில்லை. உடனடியாக அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும். அரசு அறிவித்துள்ள நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர். அதுவரை நாங்கள் தண்டவாளத்தை விட்டு நகர மாட்டோம் என கூறினர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் கமாண்டோ படையினர், அதிரடி படையினர் உள்ளிட்டோரும் அங்கு குவிக்கப்பட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். நேற்று மாலை அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது. அதன் பிறகு ரெயில் போக்குவரத்து சீரடைய தொடங்கியது.  #AmritsarTrainAccident  #Dussehra #ProtesterClash 
    ×