search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "and suffering are for good"

    • இன்பமும், துன்பமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.
    • துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என்கிறார் இயேசு.

    இன்பமும், துன்பமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. துன்பங்கள் குறித்த திருமறையின் பார்வை வேறுபட்டதாக இருக்கிறது. ஆண்டவர் இயேசு தன் சீடர்களைப் பார்த்து `உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன் கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்' என்றார் (யோவான் 16:33).

    இதன் மூலம் இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லா மனிதரின் வாழ்விலும் உபத்திரவங்கள் தவிர்க்க முடியாதது என்றாலும், வாழ்வின் துன்பங்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என்கிறார் இயேசு.

    ஆவிக்குரிய வாழ்வில் பற்று தருகின்றது!

    உபத்திரவங்கள் அல்லது துன்பங்கள் பற்றி திருப்பாடல்கள் நூலின் ஆக்கியோன் `எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே' என்கிறார். (திபா.119:71)

    முதலாவது, உபத்திரவங்கள் ஆவிக்குரிய வாழ்வின் மீது தீவிர பற்றுதலையும், மிகுந்த வாஞ்சையையும், தணியாத தாகத்தையும் உருவாக்குகிறது.

    `நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன். இப்பொழுதோ நான் உமது வார்த்தைகளைக் காத்து நடக்கிறேன்' (திபா.119:67).

    உபத்திரவங்கள் நம் ஆவிக்குரிய வாழ்வை சீர்தூக்கிப் பார்க்கவும், சீர்படுத்தவும் உதவுகின்றது. தவறுகளை உணர்ந்து திருந்துவதற்கும், மனம் வருந்தி ஆண்டவரிடம் திரும்புவதற்கும், அவர் வார்த்தைகளை விரும்புவதற்கும், மிக முக்கிய காரணிகளாக அமைகின்றது.

    ஆசீர்வாத வாழ்வைக் கற்றுத்தருகின்றது!

    தூய பவுல் அடியார் ரோமா திருச்சபையாருக்கு எழுதிய கடிதத்தில் உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங் களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம் (ரோமர்:5:3-4) என்கிறார்.

    இரண்டாவதாக, உபத்திரவங்கள் கடவுள் விரும்புகின்ற, அவருக்குப் பிரியமான, ஆசீர்வாதமான வாழ்வு என்றால் என்ன? என்பதை நமக்கு கற்பிக்கின்றது. ஆசீர்வாதமான வாழ்வை பெறுவதற்கான உரிய நெறிமுறைகளை, வழிகாட்டுதல்களைக் கற்றுத்தருகின்றது.

    உபத்திரவத்தில் பொறுமையாய் இருக்கவும் வேண்டுகிறார். நம்பிக்கையும் உபத்திரவமும் கைகோர்த்துச் செல்கின்றன என்று திருமறை நமக்கு தெளிவாக கூறுகிறது என்கிறார் பில்லிகிராம். பரலோக வாழ்வை பெற்றுத்தருகிறது!

    திருத்தூதர் பவுலும், பர்னபாவும் நற்செய்தி அறிவித்தபின் சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்தி 'நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்'. (தி.ப.14:22)

    இறுதியாக, உபத்திரவங்கள் நம்மை கடவுளோடு இணைந்து வாழுகின்ற வாழ்க்கை முறையை கட்டமைக்கவும், தொடர்ந்து அதில் நிலைத்து இருந்து கனி கொடுக்கும் வாழ்வு வாழவும், இறுதி நாட்களில் சாட்சி கொடுக்கின்றவர்களாய் வாழ்ந்திடவும், நமக்கு சிறந்த ஊன்றுகோலாய் அமைகின்றது.

    வெள்ளை அங்கி தரித்தவர்கள் இவர்கள் யார்? என்று கேட்கப்பட்டதற்கு 'இவர்கள் உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்' என்று திருவெளிப்பாடு 7-வது அதிகாரம் 14-வது வசனத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

    நீங்களும் ஒரு வேளை இன்று உங்கள் வாழ்வில் பகிர்ந்து கொள்ள முடியாத பல்வேறு உபத்திரவங்களின் வழியாய் சென்று கொண்டிருக்கலாம். கொடிய வியாதி, நெடுநாள் பலவீனம், யாருமற்ற தனிமை, எதிர்பாராத பேரிழப்புகள், தீராத கடன் பிரச்சினை, பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு குறித்த கவலை-கண்ணீர் நிமித்தமாக, தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம்.

    கடவுள் உங்கள் துன்பங்களையும், துன்பத்திற்கான காரணத்தையும் உங்களைவிட மிகத்தெளிவாக அறிவார். இது மாற்ற இயலாத துன்பம் என்ற உங்கள் எண்ணத்தின் விரக்தி நிலையையும் ஆண்டவர் அறிவார். நம் வாழ்வின் துன்பங்களை கடவுள் அருளும் நம்பிக்கையுடன் நேர்மறையாக எதிர்கொள்ளத் துணிவோம்.

    திருப்பாடல்களில் இறைப்பற்றாளன் `உம் ஊழியனுக்கு நன்மையைச் செய்துள்ளீர். நீர் நல்லவர் நன்மையே செய்பவர்' என்று சொல்வதோடு இறைவன் மீதுள்ள நம்பிக்கை மிகுதியால் 'எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே' என்ற பற்றுறுதியை வெளிப்படுத்துகிறார்.

    நாமும் இப்பற்றுறுதியை வெளிப்படுத்தி வாழ்வின் துன்பங்களைக் கண்டு அஞ்சாமல், துஞ்சாமல் துணிவுடனே பெருமகிழ்வுடனே எதிர்கொள்வோம்.

    ஆவிக்குரிய வாழ்வில் சீர்படுவோம்!

    ஆசீர்வாத வாழ்வில் பெலப்படுவோம்!

    மாட்சிமிகு இறையாட்சி வாழ்வில் இணைந்திடுவோம்!

    ×