search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arathi worship"

    நெல்லை அருகன்குளம் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    தாமிரபரணி மகாபுஷ்கரத்தையொட்டி நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அங்குள்ள எட்டெழுத்து பெருமாள், ராமலிங்க சுவாமி, லட்சுமி நாராயணர் மற்றும் காட்டு ராமர் கோவில்களில் வழிபாடு நடத்தினர்.

    தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறை அருகில் ஜடாயு தீர்த்தம், ராமதீர்த்தம், சிவதீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் கலப்பதால் இங்கு புனித நீராடுவது சிறப்பானது என்று கூறப்படுகிறது. இதனால் இங்கு தினமும் பக்தர்கள் வந்து புனித நீராடி செல்கிறார்கள்.

    தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் விழா நடந்த 12 நாட்களும் இங்கு மகா ஆரத்தி நடந்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் மகா ஆரத்தி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயு துறையில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூக்களை தூவி வழிபாடு நடத்தப்பட்டது. தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மழை பொய்க்காமல் சீராக பெய்யவும், உலக நன்மை மற்றும் பக்தர்கள் குடும்ப நலன் வேண்டியும் இந்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    ×