search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arichandra Caused Suffering With Lies"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு.
    • எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    `அரிச்சந்திரன் பொய்யே பேசாதவன் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு முன்பு அவன் சொன்ன பொய்களின் எண்ணிக்கை ஏராளம்.

    மன்னனான அவன் சந்திரமதி என்ற பெண்ணை மணந்து வாழ்ந்தான். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் தனக்கு குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்து நர மேதயாகம் செய்வதாக வருண பகவானிடம் வேண்டிக் கொண்டான் அரிச்சந்திரன். (இது சாஸ்திரப்படி குற்றமாகும்).

    இதன் பின் வருண பகவான் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு, வருண பகவான் வந்து அரிச்சந்திர மகாராஜாவிடம், 'நீ சொன்னபடி உன் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்' என்றார்.

    அதற்கு அரிச்சந்திரன், ''வருண பகவானே.. குழந்தைக்கு நாமகரணம் ஆகட்டும். பின் நான் அந்த யாகத்தை செய்கிறேன்'' என்றான். சில நாட்களில் குழந்தைக்கு `லோகிதாசன்' என பெயர் வைத்தான்.

    அதன்பின் வருண பகவான் வந்து, ''குழந்தைக்கு பெயர் வைத்தாகி விட்டது. இப்பொழுது யாகத்தை செய்'' என்றார். ''குழந்தைக்கு பெயர் வைத்து விட்டோம். ஆனால் குழந்தை நடக்கட்டும். பின் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன்.

    குழந்தை நடக்க ஆரம்பித்ததும் அங்கு வந்த வருணனிடம், ''சத்திரிய தர்மப்படி குழந்தைக்கு பூணல் அணிவித்து வித்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த வித்தையை ஆரம்பித்ததும் நான் குழந்தையை பலி கொடுத்து யாகம் செய்கிறேன்'' என்றான் அரிச்சந்திரன். பின் குழந்தைக்கு பூணல் போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வித்தை ஆரம்பமானது. அதேநேரம் லோகிதாசனும் வளர்ந்துவிட்டான்.

    இதற்கு மேலும் வருண பகவானிடம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது என்பதை உணர்ந்த அரிச்சந்திரன், இதுவரை நடந்த அனைத்தும் லோகிதாசன் காதில் விழும்படி தன் மனைவியிடம் பேசினான். தன்னை பலி கொடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த லோகிதாசன் காட்டிற்குள் ஓடி விடுகிறான். அதைத்தான் அரிச்சந்திரனும் எதிர்பார்த்தான்.

    வருண பகவான் அரிச்சந்திர மகாராஜாவிடம் வந்து, ''நீ அனேக பொய்களை கூறி சாக்குப் போக்கு சொல்லி என்னை ஏமாற்றி விட்டாய். உனக்கு வயிறு வலிவரட்டும்'' என சாபம் விட்டார். இதனால் வயிற்று வலியால் மிகவும் சிரமப்பட்ட அரிச்சந்திரன் வசிஷ்டரிடம், ''என்ன செய்யலாம்?'' என ஆலோசனை கேட்டான்.

    அதற்கு வசிஷ்டர், ''பிறந்த குழந்தைகளை தவிர, சுவீகார புத்திரர்கள், விலை கொடுத்து வாங்கிய புத்திரர்கள் என புத்திரர்கள் என பலவகை உண்டு. எனவே யாராவது ஒரு குழந்தையை விலை கொடுத்து வாங்கி, நீ பலி கொடுத்து யாகம் செய்'' என்றார். அதன்படி பிள்ளையை விலைக்கு தருபவர்களுக்கு ஆயிரம் பசுக்கள் தருவதாக தண்டோரா போடப்பட்டது.

    யாரும் மகன்களை விற்க முன் வரவில்லை. அஜிகர்த்தன் என்ற அந்தணருக்கு சுனபுச்சன், சுனச்சேபன், சுனோலாங்கூலன் என்ற மூன்று மகன்கள். தன் ஒரு மகனை விற்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. மிக வறுமையில் பசியில் வாடிக் கொண்டிருந்தது அந்த குடும்பம்.

    தன் மனைவியிடம் கலந்து ஆலோசிக்க, அவள், 'கடைசி மகன் எனக்கு வேண்டும்' என்றாள். அந்தணன் 'எனக்கு தலைமகன் வேண்டும்' என்றான். இதை வெளியில் இருந்து கேட்ட நடு மகன், ''என்னை நீங்கள் விற்கப் போகிறீர்கள். சரி.. என்னை கொடுத்து விடுங்கள். உங்கள் பிரச்சினை தீரட்டும்'' என்றான்.

    அதன்படி அரிச்சந்திர மகாராஜாவுக்கு அவன் விற்கப்பட்டான். யாக ஸ்தம்பத்தில் சிறுவனை கட்டி வைத்துவிட்டு பலி கொடுப்பதற்கான யாகத்தை ஆரம்பித்தான் அரிச்சந்திரன். சிறுவன் அழ ஆரம்பித்தான்.

    அப்போது விசுவாமித்திரர் அங்கு வந்தார். அவர் அந்த சிறுவனிடம், ''வருத்தப்படாதே.. வருண பகவான் மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். நீ இந்த ஜெபத்தை தொடர்ந்து செய். வருண பகவான் அருள் கிடைக்கும். உனக்கு மரணம் நேராது'' என்றார்.

    யாகம் ஆரம்பித்தவுடன் 'யார் பலி கொடுப்பது?' என கேள்வி வந்தது. அப்போது ஆடு, மாடுகளை வெட்டும் சாமித்திரன் என்பவன் அங்கு வந்தான். அவனிடம் ஆயிரம் பொன் தருவதாகக் கூறி, சிறுவனை வெட்டும்படி கூறினர். அவன் அழுது கொண்டிருந்த சிறுவனை கண்டு, ''நீங்கள் கொடுக்கும் ஆயிரம் பொன் எனக்கு வேண்டாம். இந்த சிறுவனை வெட்டும் பாவத்தை நான் செய்ய மாட்டேன்'' எனக் கூறி கத்தியை கீழே போட்டு விட்டான்.

    அப்பொழுது யார் வெட்டுகிறீர்களோ அவர்களுக்கு ஆயிரம் பொன் கொடுக்கப்படும் என அரிச்சந்திர மகாராஜா கூறினார். அதை கேட்ட சிறுவனின் தந்தை, ''நானே வெட்டு கிறேன்'' எனக்கூறி கத்தியை எடுத்துக்கொண்டு வந்தார்.

    அப்பொழுது வருண பகவான் விரைந்து வந்து, ''யாகத்தை நிறுத்துங்கள். இந்த சிறுவன் என்னை துதித்ததால் நான் மகிழ்ந்தேன். யாகம் பூர்த்தியாகி விட்டது. உன் வயிற்று வலியும் தீர்ந்து விடும்'' என்றார். வசிஷ்டர், நாரதர், விசுவாமித்திரர் போன்றவரும் அங்கிருந்தனர். சிறுவன் ஸ்தம்பத்தில் இருந்து விடுவிக்கப்பட்டான்.

    இப்போது சிறுவன் யாரிடம் செல்வது என்ற கேள்வி எழுந்தது. தந்தையிடம் செல்வதா? அரசனிடம் செல்வதா? அல்லது வருண பகவானிடம் செல்வதா? என்று கேள்வி எழுந்தது. அதற்கு நாரதர், ''அந்தணர் இவனைப் பெற்று எடுத்தாலும், தன் மகனை வெட்டப்போகிறார்கள் என்று தெரிந்தே விலைக்கு கொடுத்து விட்டார். எனவே அவர் இவனுக்கு தந்தையாக மாட்டார். வெட்டுவதற்காகவே சிறுவனை விலைக்கு வாங்கினார் அரசன். எனவே அரிச்சந்திர மகாராஜாவும் தந்தைக்கு சமம் அல்ல.

    சாமித்திரன் சிறுவனை வெட்டாமல் விட்டான். ஜாதியில் தாழ்ந்திருத்தாலும் குணத்தால் அவனே உயர்ந்தவன். இருந்தாலும் அவனும் தகப்பனாக மாட்டான். (இந்த இடத்தில் அந்தணன் உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்த வனாகி விட்டான் என நாரதர் கூறுகிறார்).

    வருண பகவான் சிறுவன் துதி செய்ததால் அருள் புரிந்தார். அவரும் தகப்பன் ஆக மாட்டார். ஆனால் எந்த பலனும் கருதாமல் இவன் உயிர் பிழைக்க வேண்டும் என கருதி மந்திரத்தை உபதேசம் செய்த விசுவாமித்திரரே இந்த சிறுவனுக்கு தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவராவார். எனவே விசுவாமித்திரருடன் இவன் செல்லலாம்'' என நாரதர் கூறினார்.

    தனக்கு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் உயிர்பலி கொடுக்கலாம் என்று நினைத்ததால், பிற்காலத்தில் அரிச்சந்திரன் பலவிதமான துன்பங்களை அனுபவித்து, நாட்டை இழந்து சுடுகாட்டுக்கு செல்லும் நிலையும் உருவாகிறது. அந்தணர் குலத்தில் பிறந்தாலும் குணத்தால் தாழ்ந்தவனாகி அவமானப்பட்ட நிகழ்வும் இங்கு நடக்கிறது. எனவே எந்த செயலும் தர்மத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதே உண்மை.

    ×